கட்டி | சுவாசக்காற்றைத் தன் இச்சையாக ஓட விடாமல் கட்டுப்படுத்தி (தன் வசமாக்கி) வாசி (பிராணவாயுவைக் குதிரையாக உருவகித்து, அதை ஒழுங்குபடுத்தி ஜீவனின்/ மனிதனின் முன்வினைப்பதிவுகளாம் குண்டலினி எனும் மாயையை எழுப்பி மேல்நிலை எனப்படும் புருவ மத்திக்குள் இருக்கும் சதாசிவ அம்சமான ஜீவாத்மாவில் சேர்ப்பது, ராஜ யோகம் அல்லது வாசி யோகம் ஆகும்) யோகப்பயிற்சியால் (ஒன்றுக்கொன்று பின்னியது போல் இட வலப்புறம் ஓடும் இடா, பிங்கலா அல்லது சந்திர சூர்ய நாடிகளில் சாதாரணமாக சஞ்சரிக்கும் ஸ்வாசக் காற்றைக் குறிப்பிட்ட கால அளவையில் உள் இழுத்தல், உள்ளே நிறுத்தி வைத்துப் பின் மெது மெதுவே வெளிவிடுதல் போன்ற பயிற்சிகளால் முதுகுத்தண்டின் நடுவில் நேராக ஓடும் சுஷூம்னா- தமிழில் சுழுமுனை - நாடியில் செலுத்தி, மூலாதாரத்தில் பாம்பு போல் 2 1/2 அங்குலத்திற்குச் சுருண்டு உறங்கும் குண்டலினி என்னும் ஜீவனின் பூர்வ கர்மங்களின் பதிவை எழுப்பி)
|
முண்டக | மூலாதாரமாகிய கமலத்தில் |
அரபாலி | சிவபெருமானால் பாதுகாக்கப்படுகின்றன |
அங்கி தனை | (யோக) அக்கினியை |
முட்டி (மூட்டி) | எழுப்பி |
அண்டமொடு தாவி | இடையில் உள்ள (ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அனாஹதம், விஷூத்தி ஆகிய) சக்கரங்கள்/நிலைகளைக் கடந்து |
விந்து ஒலி கத்த | அனாஹதத்வனி கேட்கும்படியாக |
மந்திர அவதான | பஞ்சாட்சரமான மந்திரத்தில் பூட்டப்பட்ட; அவதானம் என்றால் ஒரு கலையை கூர்மையாக கவனித்து கிரகித்தல்; |
வெண் புரவி மிசை ஏறி | தூய மனமாகிய வெள்ளைக்குதிரையில் ஆரோஹணித்து |
கற்பகம் தெருவில் | சுழுமுனை நாடி என்னும் இடை பிங்கலைக்கு இடைப்பட்ட நேரான, நினைத்ததை அடையும் திறனைத் (அஷ்ட மா சித்திகள் படிப்படியாக) தரும் பாதையில், |
கொண்டு | அக்குதிரையைச்செலுத்தி (மன ஒருமுகத்யானம் செய்து) |
சுடர் | இடை, பிங்கலை, சுஷூம்னை ( சந்திர, சூர்ய, அக்னி) எனும் மூன்று நாடிகளும் சந்தித்துப் பிரகாசிக்கும் |
பட்டி மண்டபமும் நாடி | ஆக்ஞை என்னும் புருவ மத்தியில் உள்ள ஆஞ்யா (ஆக்கினை) சக்கரத்தை அடைந்து அங்குள்ள (சதாசிவ அம்சமான) ஜீவ ஆன்மாவுடன் (அது அக்னி என்றும் குறிக்கப்படும்) அக்குண்டலினியை (மாயையை) இணைத்து
|
இந்து ஒடு கட்டி | அதன் மேலுள்ள சந்திர மண்டலம் எனும் வெளியில் மனதை அசையாமல் நிறுத்தி |
விந்து பிசகாமல் | பிரம்மச்சரியம் காத்து விந்துவை வெளியேற விடாமல் காத்து |
வெண் பொடி கொடு | பற்றின்மை, விரக்தியாகிற தூய திருநீற்றால் |
அசையாமல் | மனம் வேறு எங்கும் எதிலும் சஞ்சரிக்காமல் அடக்கி |
சுட்டு வெம்புர(ம்) நிறாக | மூன்று புரங்கள் எனப்படும் ஆணவம், கன்மம், மாயை எனும் மூன்றையும் (நீறு) சாம்பலாகும்படி, சற்றும் மிகுதி இல்லாமல் பொசுக்கி |
விஞ்சை கொடு | விவேகத்தால் |
தத்துவங்கள் விழச்சாடி | இந்த உடலோடு ஆன்மாவைக்கூட்டுகின்ற 96 வகை தத்துவங்களையும் தாக்கி அவற்றை வீழ்த்தி (அவற்றின் பிடியிலிருந்து விடுபட்டு) |
எண்குணவர் சொர்க்கம் | எட்டுக் குணங்கள் ( தன்வயனாய் இருத்தல், தூய உடம்பினாதல், இயற்கையிலேயே அறிவுடைமை, முற்றும் உணர்தல், அளவற்ற ஆற்றல், அளவற்ற அறிவு, அளவற்ற கருணை,அளவற்ற ஆனந்தம் இவை இறைவன் இயல்பு) உடைய சிவபெருமானின் ஆனந்த நிலையமான கைலாயபதம் |
கையுளாக | அடைந்து விட |
எந்தை பதம் உற | அச்சிவ பெருமானின் திருப்பாதங்களில் மனம் ஒன்றி |
துக்கம் வெந்து விழ | பிறவியும் அதனால் வரும் துன்பங்களுமே துன்பப்பட்டு விலகிப்போக |
ஞானம் உண்டு | அந்த மேலான ஞானமாகிற அமிர்தத்தை அருந்தி, |
குடில் வச்சிரங்கள் என | தேகம் (அழியா திவ்ய தேகம் கிடைக்கப்பெற்று) வைரம் போல் திடமும் ஒளியும் பெற |
மேனி தங்கம் உற | (அவ்) உடல் பொன் போல் ஒளி விட |
சுத்த அகம் புகுத | அந்த தெய்வீக உடலுடன் மோட்ச வீடாம் நின் திருச்சந்நிதியில் நுழைந்து |
வேத விந்தையொடு | அதற்குரிய சந்த, ஸ்வரங்களோடு வேதமந்திரங்களால் |
புகழ்வேனோ | உன்னைப் போற்றித்துதிக்கும்படியான பேறு பெறுவேனோ |
எட்டு இரண்டு அறியாத | எட்டு என்ற எண்ணைக்குறிக்கும் அகரமாகிற சிவதத்துவத்தையும், இரண்டுக்குக் குறியீடான உகரமாம் சக்தியையும் இவர்களின் சேர்க்கையே இப்பிரபஞ்சமும், இந்த தேகமாகிற குடிலும், அதன் உள் உறையும் எட்டு இரண்டின் காட்டான 10ஐக்குறிக்கும் யகரமாம் ஆன்மா, சிவனின் கூறுதான் என்றும் அறியாது இருந்த |
என் செவியில் | அடியேனுடைய காதுகளில் |
எட்டு இரண்டும் | அந்தத் தத்துவங்களை |
வெளியாக மொழிந்த | வெளிப்படையாக விளங்கும்படி உபதேசித்த |
குரு முருகோனே | குருநாதனாய் வந்த முருகப்பெருமானே |
எட்டு இரண்டு திசை ஓட செங்குருதி | பத்து திசைகளிலும் சிவந்த ரத்தம் ஆறாக ஓடும்படி |
எட்டு இரண்டும் | எண்ணிரண்டு பதினாறு |
உருவாகி | வடிவங்கள் எடுத்து |
வஞ்சகர் மெல்(மேல்) | கபடம் சூது மிகுந்த, |
எட்டிரண்டு திசையோர்கள் | பத்து (எண் திசைகளும் மேல், கீழ் என பத்து) புறங்களிலும் இருந்த அசுரர்கள் |
பொன்ற | அழிந்துவிடும்படி |
அயில் விடுவோனே | கூர்மையான வேலை விடுத்தவனே |
செட்டி என்று | வளையல் வியாபாரி போல் வேடம் தரித்த |
சிவகாமி தன் பதியில் | தன் காதல் மனைவி, மலயத்வஜ பாண்டியனுக்கு மகளாக அவதரித்து மீனாக்ஷியாக ஆண்ட அந்த மதுரையம்பதியில் |
கட்டு செங்கை வளை | பெண்கள் தம் அழகான கைகளில் அணியும் வளைக்கட்டுகளை |
கூறும் எந்தை இட | "வளையல் வாங்கலையோ" எனக்கூவி விற்று எம் (உலகத்) தந்தை முன்பு தாருகா வனத்து ரிஷிபத்தினிகளாக இருந்து இப்போது மதுரைவாசிகளாய் இருக்கும் அம்மாதர்களுக்குப் பூட்டி விட்ட |
சித்தமும் குளிர | அந்தச் சிவனார் தம் சித்தமும் மகிழ்ந்து புளகாங்கிதம் அடையும்படி |
அநாதி | ஆதி அந்தமில்லாத பிரணவத்தின் |
வள் பொருளை | வளமையான உட்பொருளை |
நவில்வோனே | எடுத்து உரைத்தவனே |
செட்டி என்று வன மேவி | தானும் தன் தந்தை போலவே வளையல் வணிகனாக (வேடம் பூண்டு) (வள்ளிப்பிராட்டி வாழ்ந்த) வள்ளி மலைக்காட்டில் சென்று |
இன்ப ரச சத்தியின் | இச்சா சக்தியின் |
செயலினாளை | செயல் புரிபவளான வள்ளியை |
அன்பு உருக தெட்டி வந்து | அவளிடம் மிகுந்த காதலினால் உருகி அவள் குலத்தவரான குறவர்களிடமிருந்து திருடிக் கொண்டு |
புலியூரில் மன்றுள் | சிதம்பரப்பதியில் வந்து இத்தில்லை அம்பலத்தில் |
வளர் பெருமாளே | கீர்த்தியோடு வாழும் எங்கள் தலைவனே. |
Comments
Post a Comment