மூளும் வினை — தேவகி ஐயர் உரை

By Mrs Devaki Iyer, Pune

For the translation of the song mooLum vinai in English, click the undelined hyperlink.

மூளும் அதி விரைவில் பெருகும் ( நெருப்பைப்போல)
வினை சேர மனிதப் பிறவி எடுத்த நாம் செய்து சேர்த்துக்கொள்ளும் நல்ல, பெரும்பாலும் தீய வினைகளினால்
மேல் கொண்டிடா நின்றநாம் மேற்கொண்டிருக்கின்ற
ஐந்து பூத ஐந்து பூதங்களின் தொகுதியான இவ்வுடலில்
வெகுவாய மாயங்கள்பல விதமான கவர்ச்சிகள் தானே வந்து
நெஞ்சில் மூடிநம் அறிவை மூடிவிட
நெறி நீதி (அதனால்) மனிதனுக்கு வகுக்கப்பட்ட நல்ல வழிகளில்
ஏதும் செ(ய்)யா(நல்ல) செயல்கள் ஏதும் செய்யாமல்
வஞ்சி அதிபார மோக மிகப் பெரியதான பெண்மயக்கத்தைப் பற்றிய (சிற்றின்பத்தின்)
நினைவானநினைவிலே மூழ்கி
போகம் செய்வேன்காமக் கேளிக்கைகளில் ஈடுபடுகின்ற நான்
அண்டர் தேட அரிதானதேவர்களுக்கும் தேடி அடைய முடியாததான
ஞேயங்களாய் நின்ற ஞானத்தால் (ஞானிகளால்) அறியப்படு பொருளான நித்திய வஸ்துவை
மூலபிறவிக்குக் காரணமான முன் வினைப்பயன் ஆகிய குண்டலினி சக்தியை (மூலாதார சக்ர ஸ்தானத்தில் 2 1/2 அங்குலப்பாம்பு போல் சுருண்டு இருக்கும் அதை எழுப்பி)
பர(ஆறு சக்கரங்களூடே செலுத்தி முடிவில் கடைசி நிலையான, பிரபஞ்சத்துக்கு அப்பால் பட்ட) சிவ தத்துவத்தில்
யோக மேல் கொண்டிடா நின்ற அது இணைக்கும் முயற்சியான வாசியோகத்தை
உளதாகி கைக்கொண்டு
நாளும் (அதி வேக) கால் கொண்டுதினமும் பயிற்சி செய்து அதனால் ப்ராணவாயுவின் துணையால்
அதிவேக தீ மண்டயோக நெருப்பானது வெகு வேகமாய் எழ (குண்டலினி எழுந்து அதனால் பல சக்திகள் உண்டாகும், அதில் ஒன்று யோக அக்னி, அவற்றைத்தாங்குவது கடினம், பல உபாதைகளும் உண்டாகலாம் எனவேதான் தேர்ந்த குருவின் மேற்பார்வையில்தான் பயிற்சி செய்யவேண்டும்)
வாசி அனலூடு போய்அந்தப்ராண வாயுவான குதிரை நெருப்போடு மேல் நோக்கிப்பயணம் செய்து சக்கரங்களைக் கடந்து
வானின் கண் ஒன்றி சிதாகாசம், தஹராகாசம் என்னும் உடல் உணர்வு கடந்த (ஸமாதி) நிலை அடைந்து
நாம மதிபெயர்பெற்ற சந்திர வெளியில்
மீதில் ஊறும் கலாஅங்கு சுரக்கும் அமிர்த கலையாகிற
இன்ப அமுது ஊறல்ஆனந்தம் தரும் இனிமையான ஊற்றில்
நாடி மனதைச் செலுத்தி
அதன் மீது போய் நின்ற அதற்கும் மேலே சென்று அங்குள்ள
ஆனந்த மேலை வெளி ஏறி பரம ஆனந்தமான த்வாதச அந்தம் என்னும் சூன்யத்தை அடைந்து
நீ இன்றி நான் இன்றி ஜீவாத்மா பரமாத்மா இரண்டும் வேறு வேறாக தனித்தனியாக இல்லாமல்
நாடி இ(ன்)னும் வேறு தான் இன்றி(நாடி)விரும்பி, வேறு பிரபஞ்சம் போன்ற எந்தப்பொருளும், மனம் அறிவு போன்ற கரணங்களும் இல்லாது
வாழ்கின்றது ஒரு நாளேஅந்த நிலையை அனுபவிப்பது என் வாழ்நாளில் ஒருநாள் நடைபெறுமோ?
காள விடம் ஊணிகருத்த நஞ்சை (சிவனுடைய அம்சமே ஆனதால்) உண்டவள் (தேவர் துயர் தீர)
மாதங்கிமதங்க ரிஷியின் பிரார்த்தனைக்கு இணங்கி அவருக்கு மகளாகப்பிறந்ததால் மாதங்கி எனப்பெயர் பெற்றவள்
வேதம் சொல் பேதைபரம் பொருள் இது என்று வேதங்களால் குறிக்கப்படுபவள் (வேதங்கள் அவன் அவள் அது என்பவற்றுக்குப் பொதுவான சொல்லையே உபயோகிக்கின்றன பரம்பொருளாகிய பிரம்மத்துக்கு)
நெடு நீலி பெருமை பொருந்திய நீலியான காளி, துர்கை
பாதங்களால் வந்ததன் திருப்பாதத்தால் (பக்தனான சிறுவன் மார்க்கண்டனுடைய உயிரைப் பறிக்க) வந்த
காலன் விழ யமன் உயிரற்று விழும்படி
மோது சாமுண்டி தாக்கிய பிரம்மனின் தலையைக் கையில் கொண்டவள்
பார் அம்பு ஒடு அனல் வாயு நிலம் நீர் நெருப்பு காற்று
காதி முதிர் வானமே தங்கி வாழ்ஒளிர்கின்ற பழமையான ஆகாயம் (இவ்வழக்கு பூதங்களுள்) இவற்றுள் நிலை பெற்று வாழ்கின்ற
வஞ்சி (அத்தனை பலமும் பெருமையும் பழமையும் கூடியவள் ஆனாலும் மென்மையும் இளமையுமான) கொடி போன்றவள்
ஆடல் விடை ஏறி ஆடலுக்குப்பெயர் போன காளை வாகனத்து சிவபெருமானின்
பாகம் குலா(வு) மங்கை இடப்பாகத்தில் சேர்ந்து இருக்கின்ற பெண்
காளி கரு நிறத்தவள்
நடம் ஆடி சிவ பிரானுடன் போட்டி நடனம் ஆடியவள்
நாள் அன்பர் தாம் வந்து தொழும் மாது நித்தமும் பக்தர்கள நாடி வந்து வணங்கப்படுகின்ற தேவி
வாள முழுதும்சக்ரவாளம் எனும் மலைகளால் சூழப்பட்ட அண்டங்கள் முழுவதையும்
ஆளும் நிர்வகிக்கின்ற (காக்கின்ற)
ஓர் ஒப்பற்றவரான
தண் துழாய் தங்குகுளிர்ந்த துளப மாலை அணிந்த
சோதி மணி மார்பகௌஸ்துபம் எனும் ஒளி வீசும் மணி அலங்கரிக்கும் மார்பு உடைய
மாலின் திருமாலின்
பி(ன்)னாள்பின்வந்தவள் அதாவது தங்கை
இன்சொல்இனிமையாகப் பேசுபவள்
வாழும் உமை மாதராள்என்றும் நித்தியமாக உள்ள உமாதேவியின்
மைந்தனே திருக்குமாரனே
எந்தை இளையோனே எமக்குத் தந்தையான சிவ பெருமானின் இளைய மகனே (ஆனைமுக வனுக்குத் தம்பியே என்பது குறிப்பு)
மாசில் மன மாசுகள் அற்ற ( காமம், க்ரோதம், லோபம், மோகம், மதம், மாத்சர்யம் ஆகிய இவை எல்லாமே அகங்காரத்தின் வெளிப்பாடு, இவை குறையக்குறைய இறைவன் நம்மை நெருங்குகிறார்)
அடியார்கள்உன்னைச்சரணம் என்று அடைந்த பக்தர்கள்
வாழ்கின்ற ஊர் (தேடி) சென்று வாழ்கின்ற இடங்களைத் தானே தேடிச் சென்று
விளையாடியேஅவர்கள் மகிழும்படியாகப் பல திருவிளையாடல்கள் புரிந்து (ஸ்ரீ வள்ளி, ஔவையார், அருணகிரி நாதர்,... இப்படியே பட்டியல் நீளும்)
அங்ஙனே நின்று வாழுமயில் வீரனேஅவர்களுடன் அத்தலங்களிலேயே நிரந்தரமாகத் தங்கும் மயில் வீரனே,
செந்தில் வாழ்கின்ற பெருமாளேதிருச்செந்தூர்ப் பதியில் எழுந்தருளியுள்ள பெருமாளே.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே