கருணை சிறிதுமில் : ஜானகி ரமணனின் கருத்துரை

For an explanation of this song in English, click karunai sirithumil

அருணையின் கருணை மழையே சரணம் . " கருணை சிறிதுமில்" என்று தொடங்கும் திருவருணை திருத்தலப் பாடல்.

முன்னுரை : அருணையில் அன்றொரு நாள், பழைய அடியவரான அருணகிரியாரை முருகன் ஆட்கொண்டது உண்மை தான். ஆனால் பேரின்பமாம் முக்தி நிலை அடைய அவர் ஏற வேண்டிய உயரங்கள், தூண்ட வேண்டிய நல் உணர்வுகள், தாண்ட வேண்டிய தடைகள், விட வேண்டிய பற்றுக்கள், பட வேண்டிய சிரமங்கள் என்னென்ன என்பதை அவருக்கு உணர்த்தி விடுகிறான். தான் உணர்ந்ததை, இந்தப் பாடல் மூலம் உலகுக்கு உணர்த்துகிறார் அருணகிரிநாதர், இது நல்லதொரு ஆன்மீக வழிகாட்டல். சாரத்தை விட்டுச் சக்கைகளைச் சேகரிக்கும் சமய வாதிகளுக்குச் சாட்டை அடி கொடுக்கிறார். சக்தியின் சிறப்புக்கள் சொல்லிச் சக்தி உமை பாலனைப் பாடிப் பரவசம் அடைகிறார். பொருள் பொதிந்த பாடல் வரிகளை பிரித்துப் பார்த்துப் புரிந்து கொள்வோம்.

கருணை சிறிதுமில் பறிதலை நிசி சரர்

விளக்கம் :அந்தச் சமணர்கள் "ஜீவ ஹிம்சை செய்வதில்லை" என்று சொல்லிக் கொண்டாலும், மற்ற மதத்தினர் என்று வரும் பொழுது, இரக்கமே இல்லாத அரக்கர்களாய் அவர்களைச் சொல்லாலும் செயலாலும் வாட்டுகிறார்கள். தம் தலைமுடியைக் கரத்தால் பறித்துப் பறித்து நீக்கும் வேண்டாத செயலகளைத் தம் கொள்கையாகக் கொண்டிருப்பவர்கள்.

பிசித அசன மறவரிவர் முதலிய

விளக்கம்: வேடுவர் போல், புலால் உண்ணவும் தயங்காதவர்கள். அத்தகைய சமணர்கள் முதலான

கலக விபரீத சமயிகள் பலர் கூடிக்

விளக்கம்: பல சமயவாதிகள் ஒன்று கூடுகிறார்கள் என்றால் அது வேற்றுமை வளர்க்கத் தான். கலகம் செய்வதற்கென்றே கூடும் விபரீத புத்தி கொண்டவர்கள்.

கல கலென நெறிகெட முறை முறை முறை கதறி வதறிய கதறிய

விளக்கம்: தத்தம் கொள்கைகளை வலியுறுத்தும் சமயக் கூட்டம் என்று சொல்லிக் கூடிக் கொண்டு, தங்கள் முறை வரும்பொழுது, பெருங் கூச்சல் எழுப்பிக் கொண்டு, நீதி நேர்மை என்ற வரம்புகளை மீறிக் கண்டபடிக் கத்திக் கொண்டு, மற்ற மதத்தினரை, வரைமுறை இல்லாமல் திட்டிச் சொற்களால் குத்திக் கிழிப்பவர்கள்.

கலை கொடு கருத அரியதை

விளக்கம்: முருகா!அறநூல்கள், அறவுரைகள் என்று ஆழ்ந்து படித்தாலும் எளிதில் புரிந்து கொள்ள முடியாத மெய்ப்பொருளாம் உன்னைக் காட்டுமிராண்டித் தனமான விதண்டா வாதங்களால் காட்டத் தான் முடியுமோ? காணத்தான் முடியுமோ?

விழிபுனல் வர மொழி குழறா அன்புருகி உனதருள் பரவு வகை வரில்

விளக்கம்: உன்னை அறிந்து கொள்ளவும், உணர்ந்து் கொள்ளவும் உன் தரிசனம் கிடைக்கவும் வேண்டுமானால், தூய பக்தி என்னுளே துளிர்க்க வேண்டும். என் விழிகள் ஆனந்தக் கண்ணீர் ஆட வேண்டும். நாத் தழுதழுத்து, மொழி குழறி, உன் மேல் கொண்ட அன்பில் நான் திளைக்க வேண்டும். உன் புகழ் பாடுவதையே பணியாகக் கொள்ள வேண்டும்.

விர கொழியில் உலகியல் பிணை விடில்

விளக்கம்: பக்தி என்ற பெயரில் நடத்தப் படும் கபட நாடகங்களை நான் விட்டு விட வேண்டும். பொன்னோடு பொருளோடு உறவோடு உலகோடு என்னைப் பிணைத்திருக்கும் கட்டுக்களிலிருந்து நான் விடுபட வேண்டும்.

உரை, செயல் , உணர்வு கெடில்

விளக்கம்: பேச்சுக்கள், செயல்கள், உணர்வுகள் எல்லாம் அற்று, உன்னையே நினைத்திருக்கும் த்யான நிலை வேண்டும்.

உயிர் புணர் இருவினை அளர் அது போக உதறி

விளக்கம்: என் உயிரோடு கலந்ததாய் என்னைப் பந்தாடும் இரு வினைகள் என்னும் சேற்றினை உதறி நான் புதியவனாய் வெளிவர வேண்டும்.

எனது என்ற மலமறி

விளக்கம்: எனது என நான் இறுகப் பிடித்திருக்கும் ஆசைகள் இற்றுப் போய் அற்றுப் போக வேண்டும். அப்படி என்னைப் புடம் போடுவாயா புண்ணிய மூர்த்தியே, சுப்ரமண்யா!

அறிவினில் எளிது பெறவென மறை பறையறைவதோர்
உதய மரணமில் பொருளினை அருளுவது ஒரு நாளே

விளக்கம்: எந்த ஒரு மெய்ஞானம் கிடைத்து விட்டால் ஒளி கண்டு ஓடி விடும், இருள் போல் மாயை அகன்று மெய்ப்பொருள் புலப்பட்டு விடும், என நான்மறைகள் பறையறைந்து அறிவிக்கிறதோ, அந்தத் தெளிந்த ஞான ஒளி தந்து, உதயம் என்ற ஜனனமும் மரணம் என்ற முடிவும் இல்லாத மெய்ப்பொருளாம் உன்னை நான் அடைய அருள்வாயா, முருகா?

தருண சத தள பரிபுர சரணி தமனிய
தநுதரி திரிபுர தகனி கவுரி பவதி பயிரவி சூலி

விளக்கம்: சக்தி உமை பாலா! உன் அன்னையின் மகிமைகள் சொல்லுக்குள் அடங்குவதோ! அர்த்த நாரி உருவத்தில் இருக்கும் உன் அன்னையையும் தந்தையையும் நாமங்களால் செயல்களால் பிரித்துப் பார்க்க முடியுமோ! உன் அன்னை நித்ய யெளவனா; நூறு இதழ் தாமரை போல் எழில் சிந்தும் பாதச் சிலம்போசையில் வேதநாதம் எழுப்பும் வித்தகி; மேருவை வில்லாய் வளைத்து அசுர குலம் அழியப் போர் தொடுப்பவள்; நெற்றிக் கண் நெருப்பில் திரிபுரம் எரிக்கும் திரிபுராந்தகி; கெளரி, பார்வதி, பகவதி, பைரவி என்ற திருநாமங்கள் கொண்டு அருள் புரிபவள்; திரிசூலம் ஏந்தியவள்.

சடில தரி அநுபவை உமை திரிபுரை
சகல புவனமும் உதவிய பதிவ்ருதை
சமய முதல்வி தனய பகிரதி சுத

விளக்கம்: ஜடாமுடி தரித்தவள். அனைத்து அனுபவங்களாகவும், அனுபவிப்பளாகவும் இருப்பவள். உமாதேவியாய், திரிபுர சுந்தரியாய், ஜகன் மாதாவாய், அகிலம் காப்பவள். சதாசிவனையே சதா நினைந்துருகும் பதிவ்ருதை, சமயங்களின் தோற்றமாகவும், அவை வந்து சேரும் இடமாகவும் இருப்பவள். அத்தகைய ஒப்பற்ற அன்னையின் செல்வக் குமரா. கங்கை ஏந்திச் சரவணத்தில் தவழவிட்டதால், அவள் புதல்வனாம் காங்கேயன் என்ற திரு நாமம் கொண்ட தலைவா!

சத கோடி அருண ரவியினும் அழகிய ப்ரபை விடு
கருணை வருணித தனுபர குருபர
அருணை நகருறை சரவண குரவணி புயவேளே

விளக்கம்: நூறு கோடி சிவந்த சூரியர்களின் எழிலையும் ப்ரகாசத்தையும் வென்று நிற்கும் ஜோதி ஸ்வரூபனே! கருணையையே அலங்காரமாய் அணிந்திருக்கும் தீனதயாளா! அருணையில் கோயில் கொண்டிருக்கும் சரவணபவா! குராமலர்கள் அலங்கரிக்கும் தண் தோள் தலைவா!

அடவி சரர் குல வனிதையும்
அமரர் குமரியும் அனவரதமும் அருகு
அழகு பெற நிலைபெற அருளிய பெருமாளே

விளக்கம்: வேடர் குலத்தின் பச்சைக் கிளியாய் தன் இச்சைப்படி தினைப் புனத்தில் பறந்து திரிந்த மான் மகளாம் வள்ளியும், அமரர் கோன் மகளாம் தெய்வானையும், என்றென்றும் தன் இரு புறமும் எழிலாய் இணைந்திருக்க, அருளை வாரி வழங்கும் வள்ளலே, ஆறுமுகா, சரணம்.

Comments