தீப மங்கள ஜோதி நமோநம
ஆண்டவனின் ஜோதி ஸ்வரூபத்தை கற்பூர ஹாரத்தி அளித்து போற்றுகிறோம். கற்பூரம் வெள்ளையானது. அது சுத்த தத்துவமுள்ள ஆன்மாவைக் குறிக்கிறது. கற்பூரத்தை ஏற்றியவுடன் அது தீபம் போல் எரிவது ஞானாக்கினியால் பாபம் நீங்கப் பெற்ற ஆத்மா புனிதம் பெற்று நிற்பதை குறிக்கும். கற்பூரம் இறுதியில் ஒன்றும் இல்லாது கரைந்து போவது போல ஜீவாத்மாவும் இறைவனுடைய அருட்ஜோதியில் கரைந்து அதனுடன் ஒன்று பட வேண்டும் என்பதற்காக கற்பூர ஆரத்தி எடுத்து 'தீப மங்கள ஜோதி நமோ நம' என்று பாடுகிறோம். ஞான ஒளி ஈந்தருளும் பெருமானை 'நிர்த்த ஜெக ஜோதி பெருமாளே' என்றும் 'ஜோதி யிற்ஜக ஜோதீ மஹாதெவர் தம்பிரானே' என்றும் போற்றுகிறோம்.
இறைவனை வழிபட நமக்கு அமைந்த உடல் உறுப்புகள் யாவும் ஆண்டவனின் திருப்பணிக்கேயாம். வாழ்த்த வாயும், நினைக்க நெஞ்சும், தாழ்த்த சென்னியும் தந்தது இறைவன் அல்லவா? 'கந்தனின் தண்டயந்தாள் சூடாத சென்னியும், நாடாத கண்ணும்,பாடாத நாவும், தொழாத கையும் படைத்தனனே அந்த நான்முகனே' என்று வருந்துகிறார் அருணகிரிநாதர். அருணகிரிநாதர் உபதேசிப்பது போல் மனக்கவலையும் உடல் துன்பத்தையும் போக்குவதற்கு ஆண்டவனைப் பற்றி சிந்தித்தும் அவன் திருப்பாதங்களை சேவித்தும் குறுகிப்ப் பணிந்து அவன் திருவடிகளை வீழ்ந்து நமஸ்கரிக்க வேண்டும்.
நித்திய பூஜையில் புஷ்பாஞ்சலி என்னும் அர்ச்சனையே சிறப்பான பகுதி. வாழ் நாள் வீணாள் படாது உய்ந்திட ஆண்டவன் புகழை அன்புடன் பாடி ஆசார பூஜை செய்ய வேண்டும் (கொம்பனையார்). ஆண்டவனின் திருநாமத்தை வாயினால் சொல்லி அர்ச்சனை செய்யவேண்டும் என்பதற்காகவே இறைவன் பெயர் வரிசைகளை நாமாவளிகளாக அமைத்திருக்கிறார்கள். வாச மலர் இட்டு பணிவுடன் அர்ச்சிக்கும் பொழுது நாமத்தை விருப்புடன் மனத்தையும் ஈடு படுத்தி பிழையின்றி சொல்ல வேண்டும். "தகட்டிற் சிறந்த கடம்பையும் நெஞ்சையும் ஆண்டவன் தாளிணைக்கே புகட்ட வேண்டும்" என்று அருணகிரிநாதர் குறிப்பிடுகிறார். 'நமோநம, நமோநம'— 'என்னுடையது இல்லை, என்னுடையது இல்லை' என்ற பொருள் உணர்ந்து கூறி உணர்வுபூர்வமான அன்புடன் அர்ச்சிக்க வேண்டும்."எனது" என்ற புறப்பற்று விட்டு பிறகு "நான்" என்ற அகப்பற்று உணர்வையும் விடவேண்டும். இக்கருத்தை பிரதிபலிக்கும் அருணகிரிநாதரின் வாக்கையும் வேண்டுகோளையும் நினைவு கூர்வோம்.
"எனது யானும் வேறாகி, எவரும் யாதும் யானாகும் இதய பாவனாதீதம் அருள்வாயே" (அமல வாயு ஓடாத)
ஜீவன் தனக்குத் தானே உரியவன் அல்லன். பரம் பொருளுக்கே உடையவன். ஜீவனுக்கு தன்னைக் காத்துக் கொள்ள உரிய சக்தி இல்லை. "யாதும் அவன் செயலே" என்ற கருத்தைக் கொண்ட திருப்புகழ் பாடலை ('என்னால் பிறக்கவும்') நினைவில் கொள்வோம்.
அருணகிரிநாதர் அருளிய திருவாவினன்குடி திருப்புகழ் பாடல் (நாத விந்து கலாதீ நமோநம) சிறப்பானது. அடியார்கள் ஆண்டவனுக்கு திருப்புகழ் பாக்கள் மூலமாகவே மாத்ருகா புஷ்பா மலை அணிவித்து, அர்ச்சனை, தூபம், தீபம்,நைவேத்தியம் என்ற பஞ்சோபசாரங்களை நிகழ்த்தி தொடர்ந்து மகாதீபாராதனையாக தீப மங்கள ஜோதியாக கற்பூர ஹாரத்தியை சமர்பிக்கும் பொழுது இந்த திருப்புகழ் பாடலை பாடி "அருள் தாராய்" என்று உள் ஒளி பெருக ஆண்டவன் திருவருளை வேண்டுகிறோம்.
இதர பல திருப்புகழ் பாடலிலும் முருகபெருமானின் சிறப்புகளை குறிப்பிட்டு 'நமஸ்காரம், நமஸ்காரம்' என்று சொல்லி வணங்கி வேண்டுகிறோம்.
- உம்பர்கள் சுவாமி நமோநம (கொம்பனையார்)
- போதகம் தரு கோவே நமோநம (போதகம்)
- சத்தி பாணி நமோநம (சத்தி பாணி)
- சீதள வாரிஜ பாதா நமோநம (சீதள வாரிஜ)
- சரவண ஜாதா நமோநம (சரவண ஜாதா)
- போத நிர்குண போதா நமோநம (போத நிர்குண)
- வேத வித்தகா சாமீ நமோநம (வேத வித்தகா)
Comments
Post a Comment