வள்ளி சன்மார்க்கம்
முருகன் வள்ளியின்பால் நடத்தியது வெறும் காதல் அல்ல. இது இறைவன் பக்குவ ஆன்மாக்களுக்கு தானே வந்து அருளும் நிலை. வள்ளி சன்மார்க்கம் என்றால் வள்ளி கடைப்பிடித்த நன்னெறி. அவள் முருகன்பால் மேற் கொண்ட தீவிர அன்பு நெறி. இது, அடியார்களை முருகப்பெருமான் வலிந்து ஆட்கொள்ளும் பேரருள் திறத்தைப் புலப்படுத்துகிறது. வள்ளி பக்குவப்பட்ட ஆன்மாவின் வடிவம். யான், எனது என்ற செருக் கற்று இறைவன் திருவடிகளில் சரணடைந்தது வள்ளியின் தன்மையாகும். இதனையே 'வள்ளி சன்மார்க்கம்’ என்றும், வள்ளி அனுஷ்டித்த நன்னெறி என்றும் போற்றுகிறார் அருணகிரிநாதர். போகியாய் இருந்து உயிர்க்கு போகத்தைப் புரிதல் இறைவனின் தன்மை. வேலவனின் இச்சா சக்தியாக திகழ்வது வள்ளி. ஆதலின், உலகில் இல்வாழ்க்கை நடத்தற்பொருட்டு முருகன் தன்னுடைய ஒரு திருமுகத்தால் வள்ளியம்மையுடன் பேசி மகிழ்ந்து அமர்ந்திருக்கின்றான்; இது உலக உயிர்கள் நன்மை அடைவதன் பொருட்டாகும்.