குருவாய் வருவாய் அருள்வாய்

உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.

உருவாய் (uruvaay) : ஆறுமுகமும் பன்னிருதோளும் கொண்ட தடஸ்த நிலையிலும் ('மேனியாகி கருணை கூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டே ஒரு திருமுருகன் வந்து அங்கு உதித்தனன் உலகம் உய்ய') ,

அருவாய் (aruvaay) : குணம், குறி, நாமம் அற்ற சொருப நிலையிலும் ('பிரம்மமாய் நின்ற சோதிப் பிழம்பு’),

உளது ஆய் (uLathu aay) : உண்டு என்பவருக்கு உள் பொருளாகவும் எங்கும் நிறைந்து விளங்குபவனாகவும்,

இலது ஆய் (ilathu aay) : காணவியலாத பொருளாகவும்; இல்லை என்பாருக்கு இல் பொருளாகவும் தன்னை வெளிப்படுத்தாமல் மறைந்து இல்லாதது போல் இருப்பவனும்; அதாவது நம்முடைய ஐம்புலன்களின் குறுகிய புரிதலில் இல்லாதவனாக அவன் இருக்கின்றான். வித்தில் மரம் தெரியாது. அதனால் மரம் இல்லை என்று பொருள் கொள்ள முடியாது. இன்மையாகிய பொருள் உள்ள பொருளே. ,

மலராய் (malaraay) : மலராகவும்,

மருவாய் (maruvaay) : அம் மலரின் மணமாகவும்,

மணியாய் (maNiyaay) : மாணிக்கமாகவும்,

ஒளியாய்(oLiyaay) : அதன் ஒளியாயும்,

கருவாய் (karuvaay) : சகல உயிர்களையும் பிரளய காலத்தில் தன் மேனியில் வைத்து காப்பவனும்,

உயிராய் (uyiraay) : சிருஷ்டிக்கும் போது சகல ஜீவன்களுக்கும் உயிருக்கு உயிராகவும் ஆன்மாவாகவும் திகழ்பவனும்,

இறைவன் உயிர்கள் அடைய வேண்டிய பொருளாயும் (கதி) அவனை அடைகின்ற வழியாயும் இருக்கிறான் (விதி) .

விதியாய் (vithiyaay) : படைப்பின் இயக்கத்திற்குக் காரணமாக கருதும் விதியும், அந்த உயிர்களின் வினைப் பயனாகவும் விதியை நிர்ணயிப்பவனுமாக திகழ்பவனும்,

கதியாய் (gathiyaay) : விதியின் பிடியிலிருந்து விடுபடுவதற்கான கதி; உயிர்கள் சென்றடையும் கடை நிலையாக இருக்கும் முத்தி நிலையில் ,

குகனே (guganE) : உள்ள முருகக் கடவுளே

குருவாய் வருவாய் அருள்வாய் (guruvaay varuvaay aruLvaay) : என் குருவாக வந்து எனக்கு அருளி என்னை ஆட்கொண்டவன்.

பொழிப்புரை

கடவுளின் ரூபங்கள் 9 வகை.
அரூபம்
1.சிவம்
2.சக்தி
3.நாதம்
4.விந்து
ரூபாரூபம்
5.சதாசிவம்
ரூபம்
6.மகேசுவரன்
7.உருத்திரன்
8.மால்
9.அயன்
ஆறுமுகமும் பன்னிரு விழியும் கொண்ட சகள வடிவாகவும், குணம் குறி நாமம் அற்ற அகளமாயும், உண்டு என்பார்க்கு உள்பொருளாயும், இல்லை என்பார்க்கு இல் பொருளாயும், மலராயும், அம் மலரின் மணமாகவும், மாணிக்கமாகவும், அதன் ஒளியாயும், சகல உயிர்களையும் பிரளய காலத்தில் தன் மேனியில் வைத்துத் தாங்குபவனும், சிருஷ்டிக்கும் சமயம் சகல உயிர்களுக்கும் உயிராய், ஆன்மாவாய் திகழ்பவனும், அவ்வுயிர்களின் வினைப்பயனாய் உள்ளவனும், முத்தி நிலையில் அவ்வுயிர்கள் சென்றடையும் நிலையாக உள்ளவனும் திகழும் கந்தக் கடவுளே, நீயே குருவாக வந்து என்னை ஆட்கொண்டவன். பரம் பொருளே உருவாகவும் அருவாகவும் இருப்பான். உளதாகவும் இலதாகவும் இருப்பான். பிரபஞ்சத்திற்கு முடிவான கதியாகவும், ஜீவாத்மாக்களை நடத்தி வைக்கும் விதியாகவும் இருப்பான். எல்லாம் ஒடுங்கிய நிலையில், உயிர்கள் தன் கேவல நிலையில் பரம் பொருளாகிய கருவில் மறைத்து இருக்கிறான்


கி.வா.ஜகன்னாதன் அவர்களுடைய விளக்க உரை

உருவாய் வருவாய்; அருவாய் அருள்வாய்
"எம்பெருமானே, எல்லோருடைய உள்ளத்திலும் தகராகாச குகையூடே நிற்கும் குகப் பெருமானே, நீ பரப்பொருளாக காட்சி தந்து நுண்பொருளாக அருள் கூட்ட வேண்டும். நீ என் கண் காணவு காது கேட்கவும் உள்ளம் களிக்கவும் அழகிய திருக்கோலம் உடையவனாய் உருவம் கொண்டு காட்சி தர வேண்டும். அந்த காட்சியிலே நான் ஈடுபட்டு மனம் கரைய என்னை மறந்து போவேன். அப்போது நீ அருவாக நின்று என்னையும் அருவாக்கி உன்னோடு இணைத்துக் கொண்டு அநுபூதி தந்தருள வேண்டும். இந்தக் கருத்தை சொல்கிறார்:

இப்படியே உரு அரு என்பன போல வரும் இரட்டைகளோடு வருவாய் அருள்வாய் என்னும் இரட்டைகளை இணைத்து பொருள் கொண்டால் உயர்ந்த நுட்பமான கருத்து புலனாகும்.

உளதாய் வருவாய்; இலதாய் அருள்வாய்;
நீ பொறிகளுக்கு தென்படாதலால் நீயே இல்லை என்று கூறுகிறார்கள். நீ என்பால் இரங்கி திட்பமான கோலத்தோடு எழுந்தருளி வந்து காட்சி அளிக்க வேண்டும்.பிறகு அப்பாலுக்கப்பாலாய் ஏதும் இல்லாத வெளியில் வெளியாகின்ற பரமசூனிய நிலையில் என்னை இணைத்துக் கொண்டு அருள் புரிய வேண்டும்.

மலராய் வருவாய்; மருவாய் அருள்வாய்;
பொறிகளுக்கு இன்பம் தரும் மலராக நீ நிற்க, கண்டு மகிழ்ந்துதொட்டு இன்புற்று மோந்து மணம் நுகர்ந்து மதுவையும் உண்டு நான் வண்டாக விளங்கும் படி ஆடச் தருவாயாக. பிறகு மணத்தோடு மனமாக நான் கரைந்து இழைந்து ஒன்றும் படி நீ நுண்பொருளாகி எனக்கு அருள் புரிய வேண்டும்.

மணியாய் வருவாய்; ஒளியாய் அருள்வாய்;
நீ ஒளி சிறந்த (பருப்பொருளான) மணியாக வர வேண்டும். உன் ஒளியினால் ஒளி பெற்று உன் அற்புத கோலத்தில் என்னை மறப்பேன். நீ ஒளியாலே என்னையும் கரைத்துக் கொண்டு உன் அருளை வழங்க வேண்டும்.

கருவாய் வருவாய்; உயிராய் அருள்வாய்;
நீ கருவாகி, உடம்புடையவனாகி எழுந்தருளி என் கண் காண காட்சி தர வேண்டும். என் பக்குவம் உன் காட்சியால் உயர்ந்து விடுமாதலால், உடனே நான் உயிராக நின்று என் உயிரை இணைத்துக் கொள்ள வேண்டும்.

கதியாய் வருவாய்; விதியாய் அருள்வாய்;
செல்லும் நெறி தெரியாமல் மயங்கும் எனக்கு நான் தெரிந்து கண்டு கொண்டு நடக்கும் வழியில் பருப்பொருளாகத் தோன்றி காட்சி தர வேண்டும். அவ்வழியே செல்லும் என்னை முடிந்த முடிபாக உன்னிலே அழுத்தி அருள் புரிய வேண்டும்.

இவ்வாறு எளிதிலே கண்டு அணுகுவதற்கு உரிய பருப்பொருளாக வர வேண்டும் என்று தடத்த உருவை எண்ணி வேண்டிக் கொண்டு பின் அறிதற்க்கரிய நுண் பொருளாக நின்று அருளை வழங்க வேண்டும் என்று அருணகிரியார் யாசிக்கிறார்.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே