கருணை சிறிதுமில் : ஜானகி ரமணனின் கருத்துரை
For an explanation of this song in English, click karunai sirithumil அருணையின் கருணை மழையே சரணம் . " கருணை சிறிதுமில்" என்று தொடங்கும் திருவருணை திருத்தலப் பாடல். முன்னுரை : அருணையில் அன்றொரு நாள், பழைய அடியவரான அருணகிரியாரை முருகன் ஆட்கொண்டது உண்மை தான். ஆனால் பேரின்பமாம் முக்தி நிலை அடைய அவர் ஏற வேண்டிய உயரங்கள், தூண்ட வேண்டிய நல் உணர்வுகள், தாண்ட வேண்டிய தடைகள், விட வேண்டிய பற்றுக்கள், பட வேண்டிய சிரமங்கள் என்னென்ன என்பதை அவருக்கு உணர்த்தி விடுகிறான். தான் உணர்ந்ததை, இந்தப் பாடல் மூலம் உலகுக்கு உணர்த்துகிறார் அருணகிரிநாதர், இது நல்லதொரு ஆன்மீக வழிகாட்டல். சாரத்தை விட்டுச் சக்கைகளைச் சேகரிக்கும் சமய வாதிகளுக்குச் சாட்டை அடி கொடுக்கிறார். சக்தியின் சிறப்புக்கள் சொல்லிச் சக்தி உமை பாலனைப் பாடிப் பரவசம் அடைகிறார். பொருள் பொதிந்த பாடல் வரிகளை பிரித்துப் பார்த்துப் புரிந்து கொள்வோம்.