அழுதும் ஆ ஆ என - J.R. விரிவுரை

Posted by Smt. Janaki Ramanan, Pune

For an English version of the paraphrase of this song, click azhuthum avaavena

சோணாசலத்தின் ஞானச்சுடரே சரணம். "அழுதும் ஆ ஆ எனத் தொழுதும் " எனத் தொடங்கும் திருவண்ணாமலைத் திருத்தலப் பாடல்.

முன்னுரை

மிகச் சிறந்த வேண்டுதல்களைச் செவ்வேளிடம் வைக்கும் அருணகிரிநாதரின் பக்குவ நிலையைப் இதில் பார்க்கிறோம். விதண்டா வாதம் செய்யும் மதவாதிகளால் என்றுமே புரிந்து கொள்ள முடியாத புனிதமான பக்தி நிலை கேட்கிறார். மாசு மருவற்ற தெளிந்த ஞானம் கேட்கிறார். கர்ம வினையால் திரும்பத் திரும்ப பிறவிச் சுழலில் சுற்றிச் சுற்றி வந்து களைப்பதோ, எனக் கதறுகிறார். சரவணப் பொய்கையில் தவழ்ந்து, அறுவர் அமுதம் உண்ட ஆறுமுகமே அனைத்திற்கும் மேற்பட்ட மெய்ப்பொருள் என்ற உன்னத உணர்வில் திளைக்கிறார்.

அழுதும் ஆஆ எனத் தொழுதும் ஊடூடு
நெக்கு அவசமாய் ஆதாரக் கடலுற்று

அழுவதும், "என் ஐயா" என விம்மித் தொழுவதும், நெகிழ்வதும், ஜீவாதாரமான உன் மேல் பெருகி வரும் அன்புக் கடலில் என்னை மறந்து திளைப்பதுமான உன்னத பக்தி நிலை கேட்கின்றேன், முருகா!

அமைவில் கோலாகலச் சமய பாதகர்க்கு
அறியொணா மோன முத்திரை நாடி

பக்தர்களுக்காகக் குரல் கொடுப்பதாகச் சொல்லிக் கொண்டு மதத்தின் பெயரால் விதண்டா வாதங்கள் செய்து அமைதியைக் குலைக்கும் வீணர்களுக்கு நீ என்றுமே எட்டுவதில்லையே. மாறாக மெளனத்தில் ஆழ்ந்து உன்னையே தேடும் த்யானத்தில் நிலைப்போரை நீயே தேடி வருகின்றாய்.

பிழைபடா ஞான மெய்ப்பொருள் பெறாதே வினை
பெரிய ஆதேச புற புதமாய

அப்படிப்பட்ட பழுதற்ற ஞான மாரக்கத்தில் நடந்து உன்னைச் சேரத் துடிக்கிறேன் ஐயா. அந்த ஞான ஒளி கிடைக்காமல் அஞ்ஞான இருளில் இடறி விழுந்து மீண்டும் மீண்டும் கர்ம வினைகள் புரிந்து ஈ முதல் மனிதன் ஈறான Uல்வேறு வடிவங்கள் எடுத்துத் தோன்றி தோன்றி மறைகின்ற நீர்க்குமிழி போன்ற

பிறவி வாராகரச் சுழியிலே போய் விழப்
பெறுவதோ நானினிப் புகல்வாயே

எண்ணற்ற பிறவிகள் எடுத்துச் சம்சாரச் சுழலாம் அலைகடலில் நான் விழுந்து சுற்றிச் சுற்றி வருவது தான் என் கதியோ? சொல்வாய் வேலவா!

பழைய பாகீரதிப் படுகை மேல் வாழ்வெனப்
படியும் ஆறாயினத் தனசாரம் பருகும் ஆறானனச்
சிறுவா சோணாசலப் பரம மாயூர வித்தகவேளே

புனித கங்கையின் மடியான சரவணப் பொய்கையில் , ஆறு உருவங்களாகத் தாமரையில் தவழ்ந்தாய். ஆறு கார்த்திகைப் பெண்களின் அமுதப் பால் உண்டாய். ஆறுமுகமாய் அவதரித்த அற்புதக் குழந்தையே. சோணாசலத்தில் குமரனாய் கோயில் கொண்டிருக்கும் பரம்பொருளே மயில் ஏறி வரும் மாமணியே ஞான பண்டிதா, எம் கந்தவேளே!

பொழுது சூழ் போது வெற்பு இடிபடா
பார் முதற் பொடிபடாவோட முத்தெறி மீனப்
புணரி கோ கோ வெனச் சுருதி கோ கோ வெனப்
பொருத வேலாயுதப் பெருமாளே

இருள் விலக்கத்தானே உன் அவதாரம்! இருள் சூழ்ந்து வந்த அந்திமாலையில், இருளாய், மருளாய் எழுந்து நின்ற க்ரவுஞ்ச மலை பொடிப்பொடியாக, பூமி முதலான அண்ட சராசரமும் நடு நடுங்க, முத்துக்கள் தெறிக்கும் மீன்கள் பாய்ந்தோடும் ஆழ்கடல் ஹோ ஹோவென்று அலற, "வேதநாயகா காப்பாற்று" என நான்மறைகள் கதறப், போர்க் கோலம் பூண்டு, தீய சக்திகளைத் துண்டாடிய தூயவனே! வேலாயுதா! சோணாசலத்தின் ஞானப் பிழம்பே! சரணம்.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே