கந்த புராணம் : பகுதி 12

கந்தபுராணம் : பகுதி 9கந்தபுராணம் : பகுதி 10
கந்த புராணம் : பகுதி 11

பானுகோபன் யுத்தத்திலிருந்து பின்வாங்கலும் சபதமும்

பானுகோபன் மாயயால வித்தைகள் செய்து போர் செய்யும் வல்லமை படைத்தவன். வீரபாகுவும் அவனுக்கு சற்றும் சளைத்தவன் அல்ல. இருவரும் ஒருவர் மாறி ஒருவர் மயக்கநிலைக்குச் சென்று மீளுமளவு போராடினர். எத்தனை அஸ்திரங்களை மாறி மாறி எய்தாலும், அவர்களால் ஏதும் செய்ய முடிய வில்லை. கடைசியாக தன்னிடமிருந்த மோகாஸ்திரத்தை பானுகோபன் எய்தான். இது எப்பேர்ப்பட்டவரையும் கட்டி போட்டுவிடும். அவன் எதிர்பார்த்தபடியே வீரபாகுவும், பூதப்படைகளும் அந்த அஸ்திரத்துக்கு கட்டுப்பட்டனர். மயங்கிக் கிடந்த அவர்கள் மீது பாணங்களை எய்தான் பானுகோபன். ரத்த வெள்ளத்தில் பலர் மடிந்தனர். கருணைக்கடலான முருகப்பெருமான் தன்னிடமிருந்த அமோகாஸ்திரத்தை பானுகோபன் மீது எய்தார். அது மோகாஸ்திரத்தை அடித்து நொறுக்கியது. மோகாஸ்திரம் சக்தி இழந்ததும் மயங்கிக் கிடந்த பூதப்படைகள் எழுந்து ஆக்ரோஷமாக சண்டையிட்டனர். வீரபாகு தன்னிடமிருந்த பாசுபதாஸ்திரத்தை எடுத்து பானுகோபன் மீது எய்யத் தயாரானான். இந்த அஸ்திரத்தை தடுக்கும் அஸ்திரத்தை பானுகோபன் கொண்டு வராததால் போரில் இருந்து பின் வாங்கினான் அவனை அவமானம் பிடுங்கித் தின்றது. 'மீண்டும் போர்க்களம் போய் அந்த வீரபாகுவை ஒரு நாழிகையில் கொல்வேன் இல்லாவிட்டால், அக்னி வளர்த்து அதில் விழுந்து உயிரை விடுவேன்,' என்று சபதம் செய்தான்.

தன் குமாரன் பானுகோபனின் தோல்வி சூரபத்மனை எரிச்சலடைய செய்தது. கடும் கோபமாக இருந்த அவன், மறுநாள் தன் தம்பி மகன்களான அதிசூரன், அசுரேசன் ஆகியோர் தலைமையில் படைகளை அணிவகுக்கச் செய்தான். சூரபத்மன் போர்க்களத்திற்கு வந்த செய்தி அவர் தலைவன் இந்திரன் மூலமாக முருகனுக்கு தெரியவந்தது. முருக பெருமான் பூத படைகளுடன் போர்களத்தை சென்றடைந்தான். கடும் போர் நடந்தது.

அதிசூரன்-உக்கிரன் யுத்தம்

சிங்கமுகனின் மகனான அதிசூரன், பூதங்களில் மிகவும் பலமிக்க உக்கிரன் என்பவனை தடுத்து நிறுத்தி தண்டாயுதத்தால் மார்பில் அடித்தான். அதிசூரன் விடுத்த பாணங்களை எல்லாம் உக்கிரன் விழுங்கி ஏப்பம் விட்டுவிட்டான். இதனால் அதிசூரனுக்கு கடும் கோபம் ஏற்பட்டது. யாரும் எதிர்பாராத வகையில் நாராயண அஸ்திரத்தை எடுத்து உக்கிரன் மீது எய்தான். தனது உயிர் போகப்போவது உறுதி என தெரிந்ததும் உக்கிரன் தன் மனதில் முருகப்பெருமானை நினைத்தது, தன் நாக்கை வெளியே நீட்டினான். நாராயண அஸ்திரம் அவனது நாக்கில் வந்து விழ, அதை அப்படியே விழுங்கி ஏப்பம் விட்டான்.

தன்னிடமிருந்த வலிமை வாய்ந்த அஸ்திரத்தையே விழுங்கிவிட்ட உக்கிரனைப் பார்த்து அதிசூரனும் தேவர்களும் ஆச்சரியமடைந்தனர். இதன்பிறகு அதிசூரன் பாசுபதாஸ்திரத்தை பிரயோகித்தான். அதையும் தடுக்க இயலாமல் உக்கிரன் தலைகுனிந்து நின்றான். ஆனால் உள்ளத்திற்குள் சிவபெருமானை பக்தியோடு தியானித்துக் கொண்டிருந்தான். இதனால் அந்த அஸ்திரம் அவனை தாக்கவில்லை. சிவபெருமானையே சென்றடைந்தது. யார் ஒருவன் ஆயுதம் இல்லாமல் போர்க்களத்தில் நிற்கிறானோ, அவன் மீது பாசுபதாஸ்திரத்தை பிரயோகித்தால் அது இறைவனிடமே சென்றடைந்துவிடும் என்ற ரகசியத்தை அறிந்திருந்தும், அறிவில்லாமல் அதிசூரன் செய்த காரியத்தால் எந்த ஆயுதமும் இல்லாமல் அவனும் போர்க்களத்தில் நின்றான். இதன்பிறகு தண்டத்தை எடுத்துக்கொண்டு உக்கிரன்மீது அதிசூரன் பாய்ந்தான். அதை பிடுங்கிய உக்கிரன், அதிசூரனை அடித்தே கொன்றுவிட்டான். இது கண்டு முருகனின் படையினர் ஆரவாரம் செய்தனர்.

அசுரேந்திரன் மரணம்

தன் பெரியப்பா சிங்கமுகனின் மகன் அதிசூரன் கொல்லப்பட்டது கண்டு தாரகனின் மகனான அசுரேந்திரன் உக்கிரன் மீது பாய்ந்தான். பல்லாயிரம் பூத வீரர்கள் அவனை சூழ்ந்தனர். இருந்தாலும் அவர்களையெல்லாம் தன் ஒற்றைக் கையினால் அடித்து விரட்டினான் அசுரேந்திரன். வீரபாகுவையும் அவன் விட்டுவைக்கவில்லை. அவனுடைய ரதத்தை உடைத்தெறிந்தான்.

அதிபயங்கர கோபத்துடன் வீரபாகு வானில் பறந்தான். முருகப்பெருமானை வணங்கியபடியே வாள் ஒன்றை எடுத்து அசுரேந்திரன் மீது பாய்ந்து அவனுடைய ஒரு கையை வெட்டினான். அசுரேந்திரன் கலங்கவில்லை. தன் மற்றொரு கையால் தண்டாயுதத்தை எடுத்து வீரபாகுவை அடித்தான்.இருவரும் கடுமையாக போரிட்டனர். ஒரு வழியாக அசுரேந்திரனை வெட்டி வீழ்த்தினான் வீரபாகு. பயந்துபோன அசுர வீரர்கள் திசைக்கு ஒருவராக ஓடினர்.

கந்த புராணம் : பகுதி 13

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே