கந்த புராணம் : 9
கந்தபுராணம் : பகுதி 7 A | கந்தபுராணம் : பகுதி 7 B |
கந்தபுராணம் : பகுதி 8 A | கந்தபுராணம் : பகுதி 8 B |
அசுரேந்திரன் ஓலமும் சூரபத்மன் கொந்தளிப்பும்
அசுரேந்திரன் அரண்மனைக்குள் ஓடிச் சென்று பெரியப்பாவின் காலில் விழுந்து விக்கி விக்கி அழுதான். விசும்பலுக்கு நடுவே ஒரு சிறுவன் தந்தையை கொன்றதையும் தன் தாய் கணவனோடு உடன்கட்டை ஏறினதையும் கூறினான்.
சிறிது நேரம் கழித்து தான் நிலைமையை ஓரளவு புரிந்து கொண்ட சூரபத்மன் அதிர்ச்சியும் சோகமும் ஒன்று சேர புலம்ப தொடங்கினான். 'யாராலும் நம் வம்சத்தை அழிக்க முடியாது என்று இறுமாப்பு கொண்டிருந்தேனே! ஐயோ! அசுரகுலத்தின் ஒளி விளக்கே! அந்த முருகன் யாருடைய மகனாயிருந்தாலும் அவனைக் கொன்று கூறு போடுகிறேன்,' என ஆர்ப்பரித்தான். சேதியறிந்து சூரபத்மனின் மனைவியர் ஓடிவந்தனர். அசுரேந்திரனுக்கு ஆறுதல் சொல்லி கண்ணீர் வடித்தனர். சூரபத்மனின் இன்னொரு தம்பி சிங்கமுகன் தகவலறிந்து வந்தான். சோகத்தில் சுருண்டு உணர்வற்று கிடந்தான். தாரகன் மீது அன்பு கொண்ட அசுர உள்ளங்கள் ஒரு வழியாக தன்னிலைக்கு திரும்பி சோகமும் ஆத்திரமும் கொப்பளிக்க படையெடுப்புக்குத் தயாராயினர்.
அமோகன் அறிவுரை
அப்பொழுது சூரபத்மனின் அமைச்சரான அமோகன் சூரபத்மனுக்கு எதிரியின் பலம் தெரியாமல் அவசரப்பட வேண்டாம் என்று அறிவுரை கூறினார். 'அந்த சிவமைந்தன் சிறந்த பராக்கிரமசாலி. சிவனுக்கு கட்டுப்பட்டே நாம் இயங்குகிறோம். அறியாமை காரணமாக நம் தாரகனார் அவனோடு போரிட்டு இறந்து விட்டார். எதிரியின் வயது மட்டும் வெற்றிக்கு தகுதியானதாகி விடாது. அவனுடைய பலம், பக்கபலம், ஆலோசகர்கள், தாக்குதலுக்கு காரணம் எல்லாவற்றையும் ஆராய்ந்தால் தான் நமக்கு வெற்றி உறுதியாகும்' என்ற அமோகனின் வார்த்தைக்கு செவி சாய்த்தான் சூரபத்மன். உடனடியாக கிளி, மயில், பருந்து ஆகிய வடிவங்களில் உருமாறும் அசுரர்களை அழைத்து மாற்று உருவில் அலைந்து திரிந்து, அந்த முருகனைப் பற்றி ரகசியங்களை அறிந்து வருமாறு கட்டளையிட்டான். அந்த அசுர பறவைகள் உயரப் பறந்தன.
முருகப்பெருமான் செந்தூரில் முகாம்
அதே சமயம், முருகப்பெருமானும் பல சிவத்தலங்களை தரிசித்தார். இப்போது சேங்கனுர் என்று அழைக்கப்படும் ஊர் கும்பகோணம் - திருப்பனந்தாள் பேருந்து வழியில் உள்ளது. சேய் என்பது முருகனைக் குறிக்கும். சேய்க்கு நல்லதாக அமைந்த ஊராதலின் சேய் + நல் + ஊர் = சேய்ஞலூர் என்று பெயர் பெற்றது. சேய்ஞலூர் தலத்தின் சிறப்பைப் பற்றி கந்தபுராணத்தில், வழிநடைப் படலத்தில் விரிவாக கூறப்பட்டுள்ளது. சத்தகிரீசுவரர்-சகிதேவியார் குடியிருக்கும் கோயிலின் தீர்த்தம் மண்ணியாறு. இந்த ஆற்றங்கரையில் சிவபிரானுக்கு ஆலயம் எழுப்பச் சொல்லி முருகன் தேவதச்சனைப் பணிக்கிறார். சிவ பெருமான் சர்வசங்கார உருத்திர பாசுபதத்தை முருகனுக்கு அளிக்கிறார்.
வீரவாகுதேவர் தூது செல்லல்
பிறகு கடலை ஒட்டிய செந்தூர் என்னும் தலத்துக்கு வந்து சேர்ந்த முருகனை பராசர முனிவரின் புதல்வர்களும் (சனகர், சனாதனர்,சனந்தனர், சனற்குமாரர்) வரவேற்று வீழ்ந்து வணங்கினர். தேவகுருவான குருபகவானிடம் சூரபத்மனின் முழுக் கதையையும் சொல்லுமாறு கேட்கின்றார். அதன் பின்னர் தன் தம்பியருடன் சூரனை அழிப்பதற்கான மந்திராலோசனையில் ஈடுபட்டார். வீரவாகுதேவரை மட்டும் சூரபதுமன் ஆட்சிசெய்யும் வீரமகேந்திரபுரத்திற்கு தூது அனுப்ப முடிவு செய்கிறார்.
பின்னர் சூரனை அழிப்பதற்குரிய வழிவகைகளை ஆய்வு செய்யவும், சூரனின் மகன் பானுகோபனால் பிடித்துச் செல்லப்பட்ட இந்திரனின் மகன் ஜெயந்தன் மற்றும் சூரனால் சிறையில் அடைக்கப்பட்ட தேவாதிதேவர்களையும் அழைத்து வரவும், சூரபத்மனை எச்சரித்து முருகனிடம் அடைக்கலம் புகுமாறு அறிவுரை கூறவும் வீரபாகுவை அனுப்பினார்.
Comments
Post a Comment