கந்தபுராணம் : 10

கந்தபுராணம் : பகுதி 7 Aகந்தபுராணம் : பகுதி 7B
கந்தபுராணம் : பகுதி 8 Aகந்தபுராணம் : பகுதி 8 B

வீரமகேந்திரபட்டணத்திற்கு வீரபாகு புறப்பாடு

ராமாயணத்தின் அனுமானைப் போல், கந்தபுராணத்தின் வீரபாகு பறக்கும் தன்மை கொண்டவன். முருகனின் உத்தரவை கேட்ட மாத்திரத்தில், அவரை மனதார வணங்கி, விஸ்வரூபம் எடுத்தான். விண்ணில் பறந்தான். கந்தமாதன மலையில் வந்து இறங்கினான். அவன் வந்து இறங்கிய வேகத்தில் அந்த மலை பூமிக்குள் புதைந்து விட்டது. அந்த மலையில் தான் இறந்து போன தாரகாசுரனின் வீரர்கள் தங்கியிருந்தனர். அவர்கள் பூமியில் அழுந்தி இறந்து விட்டனர்.

மீண்டும் அவன் பறந்து போய் இலங்கை பட்டணத்தை அடைந்தான். அங்கே யாளிமுகன் என்ற அசுரன் ஆண்டு வந்தான். அந்த அசுரனின் படைத்தளபதி வீரசிங்கன் பறந்து செல்லும் வீரபாகுவை பார்த்து விட்டான். 'டேய்! நீ யார் ? எங்கே போகிறாய்?' என்று பாணங்களைத் தொடுத்தான். அத்தனை அஸ்திரங்களையும் பொடிப்பொடியாக்கிய வீரபாகு, முதலில் வீரசிங்கனின் படைகளை ஒழித்தான். பின்னர் வீரசிங்கனின் இலங்கைப்பட்டிணத்தில் குதித்தான். அவன் குதித்த வேகத்தில் அந்த பட்டணமே பூமிக்குள் புதைந்து விட்டது. ஏராளமான அசுரர்கள் இறந்தனர். அங்கிருந்து தப்பித்த யாளிமுகனின் மகன் அதிவீரன் வீரபாகுவிடம் போர்புரிய ஓடி வந்தான். அவனது ஆயுதங்களையெல்லாம் சுக்குநூறாக்கிய வீரபாகு, அதிவீரனைக் கொன்றான். பின்னர் சூரபத்மன் வசித்த வீரமகேந்திரபட்டணத்தை நோக்கிப் பறந்தான்.

கஜமுகன் மரணம்

மகேந்திர பட்டண எல்லைக்குள் நுழைந்த வீரபாகு, அங்கே நான்கு திசை வாசல்களிலும் இருக்கும் பலத்த பாதுகாப்புகளையும் மீறி நகருக்குள் செல்லும் வழி பற்றி ஆலோசித்தான். பாதுகாப்பு காவலர்களுடன் மோதி தன் மீது கவனத்தை ஈர்க்காமல் தன் தூது பணிக்கே முழு கவனமும் செலுத்த எண்ணினான். பலத்த காவல் இருந்த வடவாயிலையும் கிழக்கு வாயிலையும் தவிர்த்து அப்போது தெற்குவாசலைக் நோக்கி பறக்கும்போது அங்கே காவல் செய்த யானை முகம் கொண்ட கஜமுகன் என்ற காவல்படை தலைவன் அவனை நோக்கி ஒரு மலையைத் தூக்கி எறிந்தான். விஸ்வரூபம் எடுத்திருந்த வீரபாகுவின் மீது விழுந்த அந்த மலை நொறுங்கியது. பின்னர் கஜமுகன் ஆயிரம் ஆலமரங்களை பிடுங்கி மொத்தமாகச் சேர்த்து கட்டி வீரபாகு மீது வீசினான். அவற்றை வீரபாகு ஒரு அஸ்திரத்தை வீசி தூள்தூளாக்கி விட்டு, வலிமை மிக்க அஸ்திரம் ஒன்றை எய்து, கஜமுகனை காலால் எட்டி உதைத்தான். வலி தாங்காமல் புரண்ட கஜமுகன் உயிரை இழந்தான்.

மகேந்திரபுரியின் செழிப்பு

பின்னர் தனது உருவத்தை சுருக்கி அணுஉருவம் எடுத்த வீரபாகு, ஒரு கோபுரத்தின் மீது ஏறி மகேந்திரபுரியை நோட்டமிட்டான். நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட மாடமாளிகைகள், சூரபத்மனின் அரண்மனை, செழிப்பான சோலைகள், அகில் மணம் வீசும் காற்று, இன்னிசை ஆடல் பாடல்களுடன் மகிழ்ச்சியில் இருக்கும் மக்கள்...எல்லாம் கண்டான்.

அந்நேரத்தில் ஜெயந்தனின் கனவில் தோன்றிய வடிவேலன், 'ஜெயந்தா! என் தூதன் வீரபாகு இப்போது நீங்கள் தங்கியிருக்கும் நகரில் புகுந்து விட்டான். சூரனை நிச்சயம் சந்தித்து, அவனை என்னிடம் சரணடையச் சொல்வான். அப்படி மறுத்தால் போர் பிரகடனம் செய்ய ஏற்பாடு செய்து விட்டேன். கொஞ்சம் பொறுத்திரு,' என்றார். ஜெயந்தன் மகிழ்ந்தான்.

வீரபாகு ஒருவரும் அறியாவண்ணம் நகர்வலம் வரும்போது, ஓரிடத்தில் இருந்த சிறைச்சாலையில் ஒரு அறையில் தேவர்களும், ஒரு அறையில் தேவமாதர்களும் அடைக்கப்படிருந்ததைப் பார்த்தான். தன்னை மணக்க சம்மதித்த தேவமாதர்களைத் தவிர மற்றவர்களை சிறையில் அடைத்து வைத்திருந்தான். அவ்வூரில் குவியும் குப்பையையும், தூசையும் வாயுபகவான் காற்று வீசி ஒரே இடத்தில் கொண்டு சேர்க்கும் துப்புரவு பணியைச் செய்து கொண்டிருந்தான். ஜெயந்தனும், தேவர்களும் தங்கியிருந்த அறைக்குச் சென்ற சில அசுரர்கள் இந்திரன், இந்திராணியுடைய இருப்பிடத்தை கூறச் சொல்லி அவர்களைச் சித்ரவதை செய்தனர். அவர்கள் சென்றதும் ஜெயந்தன் வேதனை தாளாமல் புலம்பினான்.

அந்த தருணத்தில் வீரபாகு பல கட்டுக்காவல்களை மீறி, ஜெயந்தனும் தேவர்களும் அடைக்கப்பட்டிருந்த சிறைக்குள் வந்து குதித்தான். ஜெயந்தனுக்கு நம்பிக்கையும் ஆறுதலும் கூறி விடை பெற்றான்.

வீரபாகுவிற்கு சிம்மாசனம்

பின்னர் சூரபத்மன் அரண்மனைக்குள் நுழைந்து, பொன்னாலும் மணியாலும் இழைக்கப்பட்ட அத்தாணி மண்டபத்தில், கந்தர்வர்கள் இன்னிசை முழங்க, தேவமாதர்கள் நடனமாட, இரத்தின சிம்மாசனத்தில் கம்பீரமாக வீற்றிருக்கும் சூரபத்மன் முன் நின்றான். இவன் முன்னால் நின்று கொண்டு பேசினால் நமக்கு அவமானம் எனக் கருதிய வீரபாகு முருகப்பெருமானை துதித்தான், உடனே சூரன் அமர்ந்திருந்த சிம்மாசனத்தை விட மிக அற்புதமான சிம்மாசனம் வந்து இறங்கியது. வீரபாகு மகிழ்ச்சியுடன் சிம்மாசனத்தை இழுத்துப் போட்டுக்கொண்டு சூரனின் முன்னால் கால் மேல் கால்போட்டு அமர்ந்தான்.

வீரபாகு தன்னைப் பற்றியும், தான் வந்த விஷயம் பற்றியும் தெளிவாகச் சொன்னான். சிவபெருமானின் உத்தரவுப்படி, முருகன் தோன்றியுள்ளதையும், ஏற்கனவே தாரகனைக் கொன்றதையும் சுட்டிக்காட்டி, திருச்செந்தூரில் தங்கியுள்ள முருகனிடம் சரணடையும்படியும் கூறினான்.

சூரபத்மன் கோபம் கொப்பளிக்க 'அடேய்! அவனை அன்றைய தினமே கொல்ல நினைத்தேன். ஆனால், ஒரு குழந்தையைக் கொல்வது பாவம் என்பதால், கோபத்தை அடக்கிக் கொண்டேன். நாளையே என் படை அவனைச் சந்திக்கும். தூதராக வந்து என் முன்னால் சிம்மாசனத்தில் அமர்ந்த உன்னை சிறையில் அடைக்க உத்தரவிடுகிறேன்' என்றான். வீரபாகு 'ஏ சூரனே! தூதுவனாக வந்த இடத்தில் உன்னை ஏதும் செய்யக்கூடாது என்பதால், உன்னை உயிரோடு விடுகிறேன். என் தலைவன் முருகனை அவமானப்படுத்தும் வார்த்தைகளை இனியொரு முறை சொல்லாதே,' என கர்ஜித்தான். இதைக் கேட்டதும் ஆவேசமாக சூரபத்மன் ஆயிரம் தலைகள், இரண்டாயிரம் கைகள் கொண்ட அசுரர்களை வீரபாகுவைப் பிடிக்க ஏவினான். வீரபாகு எழுந்தான். அவன் எழவும் ரத்தின சிம்மாசனம் தானாக மறைந்து விட்டது. சூரபத்மனின் ஆஸ்தான மண்டபத்தை தன் கையாலேயே இடித்து நொறுக்கி இளக்காரமாய் சிரித்தான்.

வஜ்ராபாகுவின் மரணம்

சூரபத்மன் தன் மகன் வஜ்ரபாகுவை வரவழைத்தான். வஜ்ரபாகு பத்தாயிரம் குதிரை பூட்டிய தேரில் ஏறி வீரபாகு மீது எற்ற வந்தான். வீரபாகு தன் காலால் எட்டி உதைத்து தேரை நொறுக்கினான். பின்னர், வஜ்ரபாகுவின் ஆயுதங்களை முழுமையாக அழித்து விட்டு, அவனைப் பிடித்து இழுத்தான். நெஞ்சில் ஓங்கி மிதித்தான். அலறியபடியே உயிர்விட்டான் வஜ்ரபாகு. அதன் பிறகும் கோபம் தணியாத வீரபாகு வீரமகேந்திர பட்டணத்தை சின்னாபின்னப்படுத்தினான். பின்னர் அங்கிருந்து திருச்செந்தூர் சென்று விட்டான். சூரபத்மனும் அவன் மனைவி பத்மகோமளையும் மகனின் பிரிவால் அழுதனர்.

ஏமகூடத்தில் முகாம்

இலங்கை வழியாகப் முருகன் வீரமகேந்திரபுரியை (தற்பொழுது அது நீரில் மூழ்கி உள்ளது) நோக்கிச் சென்றபோது பிரமன், திருமால், இந்திரன் ஆகிய மூவரும் மகா பாவியான சூரபன்மன் இருக்கும் மகேந்திரபுரயில் அவர் திருப்பாதம் பதியத் தகாது என்று கூறி அந்நகருக்கு வடக்கே உள்ள தீவான இலங்கையில் உள்ள ஏமகூடத்தில் (தற்போது கதிர்காமம்) போர்செய்வதற்கான பாசறை அமைத்துக் கொள்ளலாம் என்று வேண்டிக்கொண்டார்கள். தேவதச்சனும் அவ்வாறே மாடகூடங்களும் மண்டபங்களும் சோலைகளும் கொண்ட பாசறை நிர்மாணம் செய்தான்.

பிரம்மா முருகன் அருகில் : சூரனுக்கு தகவல்

அப்போது சூரபத்மன் அனுப்பப்பட்ட ஒற்றர்கள் திரும்பி சூரனிடம் முருகன் கடலைத் தாண்டி முகாம் அமைத்ததை தெரிவித்தான். ஜெயந்தனையும், மற்றவர்களையும் சூரன் விடுதலை செய்யாவிட்டால், அவர்களுடன் போரிடவும் முருகன் தயாராகி விட்டார். மற்றும், பிரம்மாவும் முருகன் அருகிலேயே அமர்ந்து விட்டார் என்று தகவல் தெரிவித்தார்கள்.

கந்த புராணம்: பகுதி 11

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே