கந்த புராணம் : பகுதி 13

கந்தபுராணம் : பகுதி 9கந்தபுராணம் : பகுதி 10
கந்தபுராணம் : பகுதி 11கந்த புராணம் : பகுதி 12

போர்க்களத்தில் சூரபத்மன்

வேறு வழியே இல்லாததால் சூரபத்மன் களத்தில் இறங்கினான். அவனது வரவால் புது உற்சாகத்துடன் அசுரர்கள் முருகனின் படையினர் மீது பாய்ந்தனர். சூரன் ஒரே நேரத்தில் லட்சம் பாணங்களை எய்யும் சக்தி படைத்தவன். பாய்ந்து சென்ற அந்த பாணங்கள் முருகனின் படையைச் சேர்ந்த லட்சம் வீரர்களை தாக்கி அவர்களை மயக்கமடைய செய்தன. நவவீரர்களான வீரமார்த்தாண்டன், வீரராட்சஷன், வீரகேந்திரன், வீரதீரன், வீரமகேஸ்வரன், வீரகேசரி, வீரபுரூஹுதன், வீராந்தகன் ஆகிய அனைவருமே பத்மாசுரனால் தோற்கடிக்கப்பட்டனர்.

கலங்காத உள்ளம் படைத்த வீரபாகு சூரபத்மன் முன்னால் வந்து நின்றான். பத்மாசுரன் வீரபாகுவை எள்ளி நகையாடி, முருகனை தன்னிடம் சரணடைய கூறச் சொன்னான். வீரபாகு 'முடிந்தால் தோற்கடித்துப் பார்,' என்று சூரனுக்கு சவால் விட்டு யமாஸ்திரம், சூரியாஸ்திரம், நாராயணாஸ்திரம் போன்ற பல சக்தி மிக்க அஸ்திரங்களை எய்தான். அவற்றை சூரன் தன் கையாலேயே தடுத்து நொறுக்கி விட்டான்.

வீரபாகு கடைசியில் பல பாம்புகளின் விஷத்தை உள்ளடக்கிய பாசுபத அஸ்திரத்தை எய்தான். சூரனும் அதே போன்ற அஸ்திரத்தை எய்யவே ஒன்றையொன்று மோதிக் கொண்டு அஸ்திரங்கள் அவரவரிடமே திரும்பி வந்தன. ஒரு கட்டத்தில் சூரபத்மன் பல பாணங்களை அனுப்பி வீரபாகுவின் வில்லை ஒடித்து அவனை மயக்கமடையச் செய்தான். அதைக் கண்ட முருகன் பத்மாசுரனின் முன் நின்றான்.

சூரபத்மனும் பின்வாங்கினான்!

முருகனுக்கும் சூரபத்மனுக்கும் இடையே உக்கிரமான போர் நடந்தது. முருகப்பெருமான் தன் ஆயுதங்களால் பத்மாசுரனை நிராயுதபாணியாக்கி அவனது வெண்கொற்றக்குடை, கிரீடம் ஆகியவற்றை கீழே விழச்செய்தார் விட்டார். 'ஒரு சிறுவனிடம் ஆயுதங்களை இழந்தோமே' என சூரன் தலை குனிந்து நின்றபடி சூரன் யோசித்தான். இவன் சிறுவனாயினும் சாதாரணமானவன் அல்ல! இவனை அழிப்பதென்றால் பல்வேறு அஸ்திரங்களுடன் வர வேண்டும், என்று எண்ணி, அங்கிருந்து மறைந்து விட்டான் சூரன்.

சூரனை கொல்லாமல் விட்டதற்கு வருத்தப்பட்ட தேவர்களிடம் முருகன் 'எதிரியாயினும் ஆயுதமற்றவனைக் கொல்லுதல் அதர்மம். எதிரிகள் திருந்த வாய்ப்பு கொடுக்க வேண்டும். மீண்டும் அவன் வந்தால் அவனை நிச்சயம் நான் விடமாட்டேன்,' என்றார். பிறகு போர்க்களத்தில் மயங்கியும், இறந்தும் கிடந்த வீரபாகு மற்றும் நவவீரர்கள், படையினரை முருகன் தனது கருணையால் எழச்செய்தார். அவர்கள் ஆராவாரம் செய்து முருகனை வணங்கினர்.

மறுபடி பானுகோபன் வரவு

சூரபத்மன் போர் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்திருந்த வேளையில், அவனது மனைவி பத்மகோமளாவும், மகன் பானுகோபனும் வந்தனர். தந்தை ஒரு சிறுவனிடம் தோற்பதா என்ற ஆதங்கம் அவனுக்கு. தானே போய் முதலில் வீரபாகுவை பிடித்து வருவதாக உறுதி மொழி அளித்தான்.

வீரபாகுவின் வீரத்தை பற்றி பானுகோபனுக்கு தெரியும். அவனை வெற்றி கொள்ள சாதாரண அஸ்திரங்கள் போதாது என்ற எண்ணத்தில், தன் பாட்டி மாயையை நினைத்தான். அவள் அவனுக்கு தாக்கப்பட்டவர்களை மயங்க வைக்கும் அபூர்வமான மோகனாஸ்திரத்தை தந்தாள். மயங்கினவர்களை கட்டி இழுத்துப் போவது எளிது என்று கூறி, வாழ்த்தி, பேரனை உச்சிமுகர்ந்தாள். பானுகோபன் மகிழ்ச்சியுடன் சென்றான்.

கந்த புராணம் : பகுதி 14

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே