கந்தபுராணம் : பகுதி 14
கந்தபுராணம் : பகுதி 9 | கந்தபுராணம் : பகுதி 10 |
கந்தபுராணம் : பகுதி 11 | கந்தபுராணம் : பகுதி 12 |
கந்த புராணம்: பகுதி 13 |
வீரபாகு பானுகோபன் யுத்தம்
எல்லாம் அறிந்த முருகப்பெருமான் வீரபாகுவிடம் பானுகோபன் அவனை மயக்கிப் பிடிக்கும் மோகனாஸ்திரம் மூலம் தாக்க வருவதாக கூறினார். இருப்பினும் தன்னிடம் அதையும் விட சக்தி வாய்ந்த வேலாயுதம் இருப்பதால் கவலைப்பட வேண்டாம் எனக்கூறி வாழ்த்தி வழியனுப்பினார்.
சேனைகள் அணிவகுத்துச் சென்றன. பானுகோபனும், வீரபாகுவும் பல்வேறு அஸ்திரங்களுடன் போராடினர். வீரபாகு சாதாரணப்பட்டவன் அல்ல என்பது பானுகோபனுக்கு தெரியும். எனவே பாசுபதாஸ்திரத்தை எய்தான். அதற்கு எதிராக வீரபாகு எய்த அஸ்திரங்கள் ஒன்றுக்கொன்று மோதும்போது ஏற்பட்ட வெப்பத்தின் உக்கிரத்தில் கடல் வற்றியது; சப்தம் அகில உலகத்தையும் நடுங்கச் செய்தது. அந்த அஸ்திரங்கள் ஒன்றையொன்று அழிக்க முடியாத காரணத்தால் எய்தவர்களிடமே வந்து விட்டன. வீரபாகுவை எந்த வகையிலும் ஜெயிக்க முடியாது என்பதைப் புரிந்து கொண்ட பானுகோபன், வேறு வழியே இல்லாமல் வான்வெளியில் தன்னை மறைத்து நின்றான். அங்கிருந்து பாட்டி கொடுத்த மோகனாஸ்திரத்தை எய்தான். அந்த அஸ்திரம் வீரபாகு உள்ளிட்ட அனைவரையும் மூர்ச்சையடையச் செய்யவே, ஆரவாரம் செய்த பானுகோபன் அவர்களின் கை, கால்களைக் கட்டி கடலுக்குள் தூக்கி வீசிவிட்டான்.
இந்த விபரம் முருகனுக்கு தெரிய வரவே, அவர் கோபத்துடன் தன் வேலாயுதத்தை கடல் மீது வீசி எறிந்தார். அது கண்டு கடலரசன் நடுங்கினான். அந்த வேல், மோகனாஸ்திரத்தின் பிடிக்கு அகப்பட்டு மூச்சுத் திணறிக் கொண்டிருந்த எல்லாரையும் விடுவித்தது. கடலின் மேல்மட்டத்திற்கு வந்த பூதகணங்களும், வீரபாகுவும் முருகனை வாழ்த்தினர்.
பானுகோபன் மரணம் : வீரபாகு வேண்டிய வரம்
'தன்னை மடக்கிப்பிடித்த பானுகோபனை அழிப்பேன். அல்லது தீக்குளித்து இறப்பேன்' என வீரபாகு சபதம் செய்தான். பானுகோபன் விண்ணிலிருப்பதை அறிந்த வீரபாகு விண்ணில் பாய்ந்து அவனது கை கால்களையும் பின்னர் தலையையும் வெட்டி வீழ்த்தினான். பின்னர் ஏமகூடம் அடைந்து முருகனிடம் நடந்தது கூற, மனமகிழ்ந்த முருகன் வீரபாகுவை வேண்டிய வரம் கேட்குமாறு கூறினார். அதற்கு வீரபாகு கந்தன் திருவடிகளை என்றும் மறவாதிருக்கும் வரம் வேண்டிப் பெற்றான்.
3ஆம் நாள் போரில் பானுகோபன் மரணம் அடைந்தான் என்னும் செய்தியைக் கேட்டு சூரபத்மன் துயரக்கடலில் ஆழ்ந்தான். ‘புதல்வனே! நீ புகன்றதை எல்லாம் புறக்கணித்தேன். இப்போது உன்னையே இழந்து தவிக்கிறேனே.' என்று கலங்கினான்.
இரணியன் அறிவுரை
அப்போது சூரனின் மகன் இரண்யன் வந்தான். அரக்கர்களிலே ஞானம் வாய்ந்தவன்; மறைகளும் கற்றவன்; மாயப் போரிலே வல்லவன். தந்தைக்கு நல்ல புத்தி சொன்னான். 'சிவனால் தான் நாம் இவ்வளவு பாக்கியம் அடைந்தோம். அந்த சிவ மைந்தனையே அழிக்க துடிப்பது எவ்வகையிலும் நியாயமல்ல. மேலும், அவனை அழிக்கவும் முடியாது. இந்த முயற்சியில் நம் அசுரகுலம் அழிந்து விடும்,' என எச்சரித்தான்.
சூரபத்மனுக்கு அது எரிச்சலைத் தந்தது. கடுமையாக மகனை கண்டித்தான். இரண்யன் வேறு வழியின்றி வீரபாகுவை எதிர்த்து களத்திலே கடுமையாகப் போர் ஆற்றினான். பூதப்படைகளை ஓட ஓட விரட்டினான். வீரவாகுவுடன் கடுமையான போர் நடந்தது. அதில் வெற்றி பெற முடியாமல் தவித்த இரணியன் மனதில் நினைத்தான். "இந்தப் போரிலே அரக்கர்கள் தோற்றுவிடுவார் ; தந்தையும் இறந்து விடுவார். அவர் இறந்துவிட்டால் அவருக்கு ஈமச்சடங்குகள் செய்வதற்காக இங்கிருந்து வேறு உருவில் தப்பித்துச் செல்லுதல் முறை" என முடிவு செய்து, தனது மாய சக்தியினால் வானில் பறந்து கடலுள் யாரும் காண முடியாத ஆழத்தில் ஒரு மீனாக மாறி சென்று வாழத் தொடங்கினான். செய்தி அறிந்த சூரன் மிகவும் வேதனை அடைந்தான்.
அடுத்து சூரனின் இன்னொரு மகனும், பத்ரகாளியின் பக்தனுமான அக்னிமுகன் போருக்கு கிளம்பினான். சிவப்படையைக் கையில் எடுத்தான். அதனை அக்னிப்படை என எண்ணிய வீரவாகுவின் உடன்பிறப்புகள் எழுவர் வருணப்படையை அதற்கு மாற்றாக ஏவினர். சிவப்படை அந்த எழுவரையும் அழித்தது; அக்னி முகன் மகிழ்வடைந்தான். ஒரு தருணத்தில் வீரவாகுவிடம் கடுமையாகப் போரிட்டும் தன் உயிருக்கு மன்றாட வேண்டிய நிலையில் அவனுக்குக் கட்டுப்பட்ட காளியை மனதில் எண்ணினான். காளியும் சிங்கவாகனத்தில் வந்து சூலத்துடன் வீரபாகுவை தாக்கினாள். வீரபாகு தயங்காமல் அவளுடன் போரிட்டு விண்ணில் பறந்து அவளது மார்பில் அடித்து கீழே தள்ளினான். காளிதேவி தன் தோல்வியை ஒப்புக்கொண்டு, சிங்கவாகனத்தில் ஏறி தன் இடத்திற்கு போய்விட்டாள். தவறு செய்தனாயினும் தன்னை வணங்கிய புண்ணியத்திற்காக காளி அவனுக்கு உதவினாள். அந்தக் காலம் முடிந்ததும் பின்வாங்கி விட்டாள். அதுகண்டு கலங்காத அக்னிமுகன் வீரபாகுவுடன் கடுமையாக மோதினான். முடிவில் அவனும் விண்ணுலகையே அடைந்தான்.
தன் ஏழு தம்பியாின் உயிரை இயமன் எடுத்துச் சென்றதை அறிந்த வீரபாகுவின் ஆக்ரோஷத்தை கண்டு நடுங்கிய கூற்றுவன் எழுவரையும் திரும்பவும் உயிர்ப்பித்தான்.
புத்திரர்களை இழந்த சூரன் : சிங்கமுகன் வரவு
இதற்கு பிறகு சூரனின் மூவாயிரம் புதல்வர்களும் தந்தையுடைய ஆசியுடன் புறப்பட்டு பூதர்களுடன் போரிட்டனர்; அவர்களை அழித்தனர். ஆயினும் பிரம்மதேவன் கொடுத்த வரத்தால் சூர புத்திரர்கள் மீண்டும் உயிர் பெற்று எழுந்தனர். அவர்களோடு போர் புரிந்த விசயன் என்ற பூதர் முருகனை வணங்கி வேண்டினார். முருகன் அவருக்கு ஓர் படையை அளித்தார். அதன் வழியே வெட்டுண்ட அனைவரும் மாண்டு போனார்கள். விசயன் வெற்றி பெற்றான்.
தன் பிள்ளைகளையெல்லாம் பறி கொடுத்த சூரன் மீண்டும் சோகத்தில் ஆழ்ந்தான். பிறகு, தம்பி சிங்கமுகனை போருக்கு கூப்பிட்டு அனுப்பினான்.
Comments
Post a Comment