இருவர் மயலோ - பதவுரை

Posted by Smt. Janaki Ramanan, Pune.

Read here the meaning in English for the song Iruvar mayalo

"இருவர் மயலோ" என்று தொடங்கும் திருவண்ணாமலைத் திருத்தலப் பாடல். ஆதி முதற் பொருளாக, அண்டமெலாம் வியாபித்து நிற்கும் விஸ்வரூபனாக, பூத நாயகனாக, முருகனைக் கண்டு மலைக்கும் அருணகிரியாரின் பரவச நிலை சொல்லும் பாடல். முருகனிடம் முறையிடும் வழிமுறைகள் பற்றிய கேள்வி ஞானம் கூட இல்லாத தன் குரல் அவனுக்கு எட்டுமோ எனக் கேள்வி எழுப்பும் அதே நேரம், அவன் கடாட்சம் தன் மேல் படாததற்குக் காரணம், அவன் கவனம் தன் இரு தேவியரிடமே நிலைப்பது தானோ, என நயம் படக் கேட்கும் உரிமையுள்ள தூய பக்தராக அருணகிரியாரைப் பார்க்கிறோம்.

விளக்கம்

இருவர் மயலோ

பக்தர்களின் முறையீட்டிலிருந்து உன்னை திசை திருப்பும் காரணம் தான் என்ன கந்தா? தேவியர் இருவரிடமும் நீ கொண்டுள்ள அளப்பரிய அன்பு, உன்னை அவர்களிடமே கட்டிப் போட்டு விட்டதா? உன் கருணா கடாட்சம் ஏழைகளான எங்கள் மீது படாவிட்டால் எங்கள் கதி என்னாவது?

அமளி விதமோ

உள்ளார்ந்த உயர்ந்த பக்தியுடன் த்யான நிலையில் உன்னிடம் நிலைப்பதற்குப் பதிலாக, பக்தி என்ற பெயரில் அமளி துமளிப் படும், வெற்று ஆரவாரங்களாம், கோயில் கொண்டாட்டங்களில் மனம் லயிக்காமல் திரும்பிக் கொண்டாயோ?

எனென செயலோ அணுகாத

உனக்குப் பிடிக்காத வேறெந்த வேண்டாத செயல்களால், இப்படி எங்களை விட்டு விலகி நிறகின்றாய் வேலவா?

இருடி அயன் மால் அமரர் அடியார் இசையும் ஒலி தான் இவை கேளா

ரிஷிகள், நான்முகன் திருமால், தேவரகள், அடியார்கள் எல்லாம் உன்னிடம் முறையான வேண்டுதல்களை வைத்து, வேண்டியதைப் பெறுகின்ற வழிகள் பற்றி ஏதும் அறியாத, பாவ ஜன்மம் நான்.

ஒருவன் அடியேன் அலறு மொழி தான் ஒருவர் பரிவாய் மொழிவாரோ

தனித்துத் தவித்து நிற்கின்றேன் ஐயா. என் கதறலை நீயாகவே, கேட்காவிட்டால், எனக்காகப் பரிந்து வந்து யார் உன்னிடம் பேசுவார்கள்?

உனது பத தூள் புவன கிரிதான், உனது கிருபாகரமேதோ

ஆனால், உன் எல்லையில்லாக் கருணை பற்றி என் உள்ளம் உணர்த்திக் கொண்டே தான் இருக்கிறது. நீ விஸ்வ௹பம் எடுக்கும் பொழுது உதிரும் உன் பாத தூளிகள் தான் மலைகளாய் உயரந்து நிற்கின்றன எனும் பொழுது, உன் அருளுககு அளவீடு ஒன்று உண்டா? பக்தரை நோக்கிப் பாய்ந்து வரும் புனித வெள்ளம் அல்லவா அது !

பரம குருவாய் அணுவில் அசைவாய்
பவன முதலாகிய பூதப் படையுமுடையாய்
சகல வடிவாய் பழைய வடிவாகிய வேலா

பரமனுக்கே ப்ரணவம் சொன்ன குருநாதா! அண்ட சராசரத்தின் அணுக்களுக்குள் எல்லாம் இயக்கமாய் இருப்பவனே. ஆகாசம், காறறு முதலான பஞ்ச பூதங்களும், உன் ஆணைக்கு அடங்கும் படைகள் அல்லவா. ச்ருஷ்டியின் சகல உருவங்களாகவும் வடிவெடுத்து வருபவனும், முழு முதற் பொருளும் நீ தானே வடிவேலா

அரியும் அயனோடு அபயம் எனவே
அயிலை இருள் மேல் விடுவோனே

முறையே படைத்துக் காக்கும் ப்ரம்மனும், திருமாலும், தத்தம் தொழிலைச் செய்ய விடாமல் தடுத்துக் கொண்டிருந்த, இருள் தொகுதி போன்ற கொடிய சூரர்களிடமிருந்து தங்களைக் காக்க வேண்டுமென வேண்டிய பொழுது, வேலெடுத்து, அசுரர் குலம் வேரறுத்த வீரத்தின் திரு உருவே!

அடிமை கொடு நோய் பொடிகள் படவே
அருணகிரி வாழ் பெருமாளே

அன்று, இந்தத் திருவண்ணாமலைத் திருத்தலத்தில் கொடிய நோயும், வறுமையும் என்னைத் தாக்கி, நான் உயிரை விடத் துணிந்த பொழுது, என் துன்பங்களைப் பொடிப் பொடியாக்கி, நோய் தீர்த்து, என்னை ஆட்கொண்ட அருணா புரியின் கருணைக் கடலே! சரணம்.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே