சுந்தரரின் தோழரும், அருணகிரி நாதரும்

You can read here the story of Paravai Nachiyar in English
"பரவைக்கு எத்தனை" என்று தொடங்கும் பொதுப் பாடலில், தன் அடியார்களுக்காக எதையும் செய்யத் தயங்காத மாண்பு கொண்டவர் அந்த மகாதேவன் என்பதையும், சுந்தர மூர்த்தி நாயனாரின் நண்பனாகவே தன்னை ஆக்கிக் கொண்டவர், கந்தனின் தந்தை என்பதையும் பாடிப் பரவசம் ஆகிறார் அருணகிரியார்.

"பரவைக் கெத்தனை விசை தூது
பகரற்கு உற்றவர் மாண் "

ஒரு பெரிய புராணத்தையே உள்ளடக்கிய வரிகள். உரிமையால் பக்தன் உத்தரவிட, கருணையால் அதைச் செய்து முடிக்கும் பரமன். பாசமும் நேசமும் இருவருக்கும் பாலமிடும் எழிற் கோலம். பழைய சிவ அடிமை சுந்தரர் ப்ராரப்தம் முடித்து முக்தி பெற எடுத்த பிறவி. சிவபக்தைகள் இருவர், பரவை நாச்சியாராகவும், சங்கிலி நாச்சியாராகவும் பிறந்து, சுந்தரரைக் கை பிடிக்கக் காத்திருக்க, இறைவன் திருவருளால் இகபர சுகம் பெற, திருவாரூரில் பரவையையும், திருவொற்றியூரில் சங்கிலியையும் மணம் புரிந்து கொள்கிறார் வன் தொண்டர் சுந்தரர். தன்னையும் ஊரையும் விட்டுப்போகக் கூடாது என்று சத்தியத்தால் கட்டுகிறாள் சங்கிலி. சிவஸ்தலங்களையும், பரவையையும் பார்க்கும் தாகத்தால் சத்தியத்தை மீறி தண்டனைகள் அனுபவித்து திருவாருர் வரும் சுந்தரரை பரவை பார்க்க மறுத்து விடுகிறாள். தாய் முகமே பார்க்கும் சேய் போல் சுந்தரர் இறையவரிடம் முறையிட்டுத் தனக்காகத் தூது போகச் சொல்கிறார். நந்தி வாகனத்தையும் துறந்து, சிவ பூஜை செய்ய வந்தவர் போல், நடந்தே பரவை மனை செல்கிறார் பரமேஸ்வரன். எவ்வளவு எடுத்துச் சொல்லியும் அவள் கேட்கவில்லை. இதை சுந்தரரிடம் சொல்ல, அவரும் சிவபெருமானையே மீண்டும் செல்லுமாறு சொல்கிறார். அப்படியே செய்யும் இறைவன் தகைமை. எத்தனை முறை வேண்டுமானாலும் தூது செல்லத் தயாபரர் தயாராய் இருப்பதை "பரவைக் கெத்தனை விசை தூது பகரற்கு உற்றவர் என்றும், அவர் மாண்பை' என மாண் " என்றும் பாடுகிறார் அருணகிரிநாதர். இறைவனே தூது சென்ற பின்னும் சேராமல் இருப்பாரோ அந்தத் தூய சிவன் அடிமைகள்!

திருவாரூர் நந்தி

தான் படுத்த நிலையில் இருந்ததால் தன்னைப் பார்க்காமலே, அன்று பரவை மனை சென்றாரோ பரமன், என நினைத்து எழுந்து, அவர் ஏறிக் கொள்ள வாகாகத் தயாராக இருப்பது போல், இன்றும், திருவாரூர் கோவிலில் நின்ற கோலத்தில் இருக்கிறாரா நந்தி பகவான்!


Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே