குமரி காளி - J.R. கருத்துரை

By Smt Janaki Ramanan

You may read Kumari Kali for an explanation in English.

சோணாசலத்தின் சுந்தரா சரணம். "குமரி காளி" என்று இதமாய் இடையில் தொடங்கும் திருவருணைப் பாடல் (ஆரம்ப வரி - அமுதமூறு சொலாகிய)

முன்னுரை

ஒப்புயர்வற்ற அத்தனுக்கும், அன்னைக்கும் செல்வக் குமாரன், குமரன். எத்தனையோ திருப்புகழ் பாடல்களில் அந்தப் பெற்றோரின் ஆற்றலை, கருணையை, பாடிக் களிக்கிறார் அருணகிரியார். ஷண்முகனைப் பாடும் பொழுதே ஷண்மதத்தின் தலையாய தெய்வங்களையும் பாடி மத இணைப்புக்கும், மன இணைப்புக்கும் வழி வகுக்கிறார். இந்தப் பாடலில் 35 நாமங்களால் ஜகன் மாதாவைத் துதிக்கிறார். அன்னையின் ஒவ்வொரு நாமமும் அமுத ஊற்று. ஊற்றுக் கண் திறப்போம்.

குமரி

விளக்கம் : அன்னை தான் அவள். ஆனாலும் மூப்பே இல்லாத என்றும் இளமை கொண்ட அழகிய குமரி. மனிதன் மனதால், உடலால், வயதால் தளரும் பொழுது, இந்த இளையவனைச் சார்ந்து சக்தி பெறுகின்றான்.

காளி

விளக்கம் : வெள்ளை உள்ளம் கொண்ட அன்னை, தீயோருக்குக் காட்டுவதோ, கரிய நிறம் கொண்ட காளி என்னும் உக்ர உருவம் தீமையை எரிக்கும் தீப்பிழம்பு

வராகி

விளக்கம் : மகிஷக் கொடி ஏந்தி, வெற்றி முழக்கி வருபவள். மலர்க் கோலங்களின் நடுவில் சிரிப்பவள்.

மகேசுரி

விளக்கம் : மகாதேவனாம் மகேஸ்வரரின் தர்ம பத்தினி. மல்லிகை மலர் போல் பூத்து வருபவள். அகிலம் காத்து நிற்பவள்.

கெளரி

விளக்கம் : பத்து வயது மங்களாம்பிகையாய் நலங்களை அள்ளி தருபவள்.

மோடி

விளக்கம் : காரிருள் போல் கருத்தை மறைக்கும் கலக்கத்தை நீக்கித் துன்பம் துடைப்பவள்.

சுராரி

விளக்கம் : அமரர் களுக்குக் கண் போன்றவள். அவர்களைக் கண் போல் காப்பவள்.

நிராபரி

விளக்கம் : பொய்மை அற்ற நிலைத்த சத்தியம் அவள்

கொடிய சூலி

விளக்கம் : கொடுமைகளைக் கொய்வதற்காகக் கூரிய சூலாயுதம் ஏந்தியவள்.

சுடாரணி

விளக்கம் : ஒளிமயமானவள்.

யாமளி

விளக்கம் : பச்சையும் கருமையும் கலந்த ச்யாமள வர்ணத்தினள். என்றும் பதினாறாய் எழில் காட்டி நிற்பவள்.

மகமாயி

விளக்கம் : கொடிய இன்னல் எனும் வெம்மை நீக்கச் சமயத்தில் பொழியும் அருள் மாரி.

குறளு ரூப முராரி சகோதரி

விளக்கம் : வாமனனாய் வந்து, த்ரிவிக்ரமனாய் நின்று, மண்ணும் விண்ணும் அளந்த திருமாலின் சகோதரியாய், எங்கும் வியாபித்து நிற்பவள்.

உலகதாரி

விளக்கம் : உலகம் படைத்து, அதைத் தாங்கிக் காத்து நிற்பவள்.

உதாரி

விளக்கம் : வரங்களை, இன்பங்களை, சித்திகளை வாரி வாரி வழங்கும் கருணைக் கடல்.

பரா பரி

விளக்கம் : முதன்மையானவளாய் மேம்பட்டு நிற்கும் அம்பிகை.

குரு பராரி

விளக்கம் : ஆதி குருவான சிவனுக்குக் கண் போன்றவள்.

விகாரி

விளக்கம் : நவ நவமாய் வடிவெடுத்து வெவ்வேறு ௹பங்களில் வருபவள்.

நமோகரி

விளக்கம் : விண்ணுளோரும் மண்ணுளோரும் போற்றி வணங்கும் இறைவி.

அபிராமி

விளக்கம் : அழகுக்கு இலக்கணமான எழிலரசி.

சமர நீலி

விளக்கம் : ஒன்பது வயதினளாய், துர்க்கையாய், போர்க் கோலம் பூண்டு துஷ்டர்களை அழிப்பவள்.

புராரி தன் நாயகி

விளக்கம் : திரிபுரம் எரித்தவனின் பத்தினி.

மலை குமாரி

விளக்கம் : இமவான் மகள் பார்வதியாய்ப் பிறந்து, தவமிருந்து சிவனை அடைந்தவள்.

கபாலி

விளக்கம் : நிலையாமையை உணர்த்த கபாலம் ஏந்துபவள்.

நன் நாரணி

விளக்கம் : நற்குணம் வாய்ந்த, காக்கும் தெய்வமான நாராயணி

சலில மாரி

விளக்கம் : நிலவளம் காக்கும் பருவ மழையாய் மன வளம் காக்கும் கருணை மழையாய்ப் பொழிபவள்.

சிவாய மனோகரி

விளக்கம் : சிவன் மனதுக்கு ரம்மியமானவளாய் அவனிடம் லயிப்பவள்.

பரை

விளக்கம் : அளப்பரிய ஆற்றல் கொண்ட பராசக்தி.

யோகி

விளக்கம் : யோக நிலையாகவும் யோக சாதனையாகவும், அவற்றின் பலனாகவும் இருப்பவள்.

சவுரி

விளக்கம் : சர்வ வல்லமை கொண்டவள்

வீரி

விளக்கம் : வீரத்தின் திருஉருவம்

மு நீர் விட போஜனி

விளக்கம் : பாற் கடலில் தோன்றிய ஆலகால விஷத்தை வாரி உண்டவள் (நஞ்சுண்டவனின் இடப் பாகம் கொண்டதால், இவளும் நஞ்சுண்டவள்).

திகிரி மேவு கையாளி

விளக்கம் : சக்கரம் ஏந்திய விஷ்ணு துர்க்கையாகவும் வைஷ்ணவியாகவும் இருப்பவள்.

செய்யாள்

விளக்கம் : சகல சௌபாக்கியங்களும் தரும் லஷ்மி.

ஒரு சகல வேதமுமாயின தாய் உமை

விளக்கம் : இணையில்லாத வேத, சாஸ்த்ர, புராணங்களின் சாரமாய் இருக்கும் அன்னை உமையாள்

அருள் பாலா

விளக்கம் : சொல் கடந்த சிறப்புக்கள் கொண்ட அன்னையின் செல்வக் குமரா. உன் புகழ் எளியோனின் தமிழுக்குள் அடங்குமோ!

திமித மாடு சுராரி நிசாசரர் முடிகடோறு கடாவி
யிடே ஒரு சில பசாசு குணாலி நிணாமுண விடும் வேலா

விளக்கம் : தேவர்களுக்குத் தீராத துன்பம் தந்த அசுரர்கள் அகங்காரத்துடனும் ஆரவாரத்துடனும் போர் செய்ய வந்த பொழுது, மிச்சம் மீதி இல்லாமல் ஒவ்வொரு அசுரத் தலையையும் துண்டித்துப் போர்க்களத்தில் பேரொலி எழுப்பி ஆட்டம் போடும் பேய்க் கணங்களுக்கு உணவாக்கி வெற்றி முரசம் கொட்டிய வேலவா

திருவுலாவு சோணேசர் அணாமலை
முகிலுலாவு விமான நவோ நிலை
சிகர மீது குலாவி உலாவிய பெருமாளே

விளக்கம் : பொன்மயமாய் உயர்ந்து நிற்கும் அண்ணாமலையில் ஒன்பது நிலை தாண்டி வானளாவி நிற்கும் கோபுர உச்சியில், கொஞ்சும் எழிலுடன் உலவும் குமரா சரணம்.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே