புலையனான மாவீனன்: ஜானகி ரமணனின் கருத்துரை

By Smt. Janaki Ramanan, Pune

For a paraphrase of this song in English, click pulaiyanaana maaveenan

திருவருணையின் திருவருளே சரணம். "புலையனான மாவீனன்" என்று தொடங்கும் திருவருணைத் திருத்தலப் பாடல். சேற்றிலே உழன்று பின் ஞானச் செந்தாமரையாய் மலர்ந்த அருணகிரிநாதர், அத்தனை பழி பாவங்களையும் தன் மேல் இழுத்துப் போட்டுக் கொண்டு முருகனிடம் மன்னிப்புக்காக மன்றாடும் தூய பக்தனாக ஜொலிக்கும் பாடல். அந்த நீண்ட பாவப் பட்டியல் ஒரு தனி மனிதனின் பாவச் சுமையாய் இருக்க முடியாது. மனித இனத்தின் பாவங்களைச் சொல்கிறார். அவரவர் தத்தம் பாவம் உணரந்து பரமகுருவின் மன்னிப்பைப் பெற வேண்டும் என்ற ஆதங்கம் அடி நாதமாய் ஒலிக்கும் பாடல். பாவப் புயலிலிருந்து விடுபட்டு அமைதி அடைய அவர் போட்டுத் தந்திருக்கும் ஆன்மீகப் பாதை இந்த பாடல்.

புலையனான மாவீனன்

விளக்கம்: மனிதம் என்ற புனிதத்துக்கே தகுதி அற்றவனாய் புன்மைகள் நிறைந்து இழிந்தவனாய் வீழ்ந்து பட்டவன் நான்.

வினையிலேகு மாபாதன்

விளக்கம்: தீய செயல்கள் தான் என்னை ஆகர்ஷித்தன. ஒன்றின் மேல் ஒன்றாய் அவற்றைச் செய்து கொண்டே போன மாபாதகன்.

பொறையிலாத கோபீகன் முழு மூடன்

விளக்கம்: பொறுமை சிறிதும் இல்லாமல், தராதரம் பார்க்காமல், அனைவரையும் குத்திக் கிழிக்கும் சினத்தால் அறிவு முற்றிலும் கெட்டு கண்மூடித்தனமாய் நடக்கும் மூடன்

புகழிலாத தாமீகன்

விளக்கம்: அர்த்தமில்லாத டாம்பீக வாழ்க்கையால் பொருள் இழந்து, இருந்த கொஞ்ச நஞ்சம் புகழையும் மதிப்பையும் இழந்து இருந்த இடம் தெரியாமல் போனவன்.

அறிவிலாத காபோதி

விளக்கம்: நல்லது எது கெட்டது என்று பிரித்துப் பார்க்கத் தெரியாமல் இருட்டிலே இடறிப் பள்ளத்தில் வீழ்ந்த குருடன்,

பொறிகளோடிப் போய் வீழு மதி சூதன்

விளக்கம்: ஐம்பொறிகள் போன போக்கில் சென்று மனம் போனபடி போகங்கள் அனுபவித்து மதிகெட்டு, செயல் கெட்டு, வாழ்வும் கெட்டு வீழ்ந்து பட்டவன்.

நிலையிலாத கோமாளி

விளக்கம்: நிலையான கொள்கையோ, பாதையோ இல்லாமல், அங்குமிங்கும் தட்டுத் தடுமாறி நடந்து "கோமாளி " என்று எல்லோராலும் எள்ளி நகையாடப் பட்டவன்.

கொடையிலாத ஊதாரி

விளக்கம்: மற்றவர்களுக்காக உதவும் தான தர்மம் எதுவும் செய்யாமல், சேர்த்த பொருளையெல்லாம் தீய வழிகளில் வாரியிறைத்துப் பாவங்களை மட்டும் சேர்த்துக் கொண்டவன்.

நெறியிலாத ஏமாளி

விளக்கம்: நல்வழி நடக்காமல் போனதாலும், தீயோர் சேர்க்கை மிகுந்ததாலும், எல்லோராலும் ஏமாற்றப்பட்டு நடுத்தெருவில் நின்றவன்

குல பாதன்

விளக்கம்: பாவச் செயல்கள் என்னை மட்டுமா கொடுத்தன? என் குடும்பப் பெயர் கெட்டது. காலம் காலமாய் முன்னோர் பேணி வளர்த்த குலப் பெருமையை வெட்டி எறிந்த கோடாரி நான்.

நினது தாளை நாடோறு மனதிலாசை வீடாமல்
நினையுமாறு நீ மேவி அருள்வாயே

விளக்கம்: அன்று அருணையில் என்னை ஆட்கொள்ள வந்த வேலவா. இன்று எளியனை கருணையுடன் பார்ப்பாய். மற்ற ஆசைகள் எல்லாம் அழிந்து போக, உன் திருவடிகளையே நாளும் பொழுதும் நினைத்திருக்கும் ஒரு ஆசை மட்டும் கேட்கிறேன் ஆறுமுகா.

சிலையில் வாளி தானேவி எதிரி ராவணார் தோள்கள்
சிதையுமாறு போராட ஒரு சீதை
சிறையிலாமலே கூடி புவனி மீதிலே வீறு
திறமியான மாமாயன் மருகோனே

விளக்கம்: அன்று இராவணன் இறுமாப்பும், தோள் வலிமையும், தோளுமே கூட இற்று விழும்படி, சர மழையாய் அம்பு தொடுத்து அவனை அழித்து, இணையிலாச் சீதையைத் துன்பச் சிறையிலிருந்து மீட்ட மாமாயனும், மாவீரனுமான ராமனின் மருகா, முருகா, இந்த ஏழையை சம்சாரச் சிறையிலிருந்து விடுவிப்பது உனக்குப் பெரிய காரியமா?

அலைய மேரு மாசூரர்
பொடியதாக வேலேவி
அமரதாடியே தோகை மயிலேறி

விளக்கம்: மேரு மலை நடுங்க, அசுரர் கூட்டம் ஒடுங்கப், புரவியென புறப்பட்ட மயிலேறி புயல் எனப் புறப்பட்ட வேல் கொண்டு வீணரை வென்ற வேலாயுதா

அதிக தேவரே சூழ
உலக மீதிலே கூறும்
அருணை மீதிலே மேவு பெருமாளே!

விளக்கம்: தேவரெல்லாம் உன்னைச் சூழ்ந்து நின்று புகழ் பாட, உலகமெல்லாம் உன் கருணையில் திளைக்கப் புகழ் மிகுந்த திருவருனணயில் கோயில் கொண்டிருக்கும் குமரேசா சரணம்.


Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே