ஐயும் உறு நோயும் — ஒரு விளக்கவுரை

By Smt Janaki Ramanan, Pune.

Please click the following underlined link for a word-by-word explanation of the song aiyumuru noyum in English.

வள்ளி மணவாளா சரணம். அருணகிரியாருக்கு ஆயிரமாயிரம் ஆன்மீக அர்த்தங்கள் உணர்த்திய மலை வள்ளிமலை. வள்ளி தத்துவம் என்ற பரமாத்ம-ஜீவாத்ம ஐக்கியத்தைத் தெளிவாக்கிய மலையும் வள்ளிமலையே. நோய், மோகம், மற்றும் தாபம் என்னும் இருட் கடலில் மூச்சுத் திணறும் பொழுது, ஐயன் முருகன் வாழும் வள்ளிமலைக் காற்றே உயிர் மூச்சாகி உய்விக்கும் என உணர்ந்து உணர்த்துகிறார் அருணகிரிநாதர். இதோ அந்த வள்ளிமலை பாடல்.

ஐயும் உறு நோயும் அவாவின் ஐவரும் உபாயப் பல நூலின்
அள்ளல் கடவாது துள்ளி அதில் மாயும் உள்ளமும்

அதாவது, வேத வேதாந்த விளக்கங்கள் கொட்டிக் கிடக்கும் புண்ணிய பூமியில், அவற்றை எல்லாம் விட்டு, மன்மதக் கலை முதலான வேண்டாத விஷயங்களில் ஆசையை மூட்டி ஐம்பொறிகள் இழுக்கின்றன. அந்த இருள் தொகுதியாம் ஈர்ப்பினைக் கடந்து செல்லும் திறனற்று, மோக மயக்கங்களாம் சேற்றிலே துள்ளி விழுந்து நோயுற்றுத் துடிப் போர் ஏராளம்.

இல்வாழ்க்கை கருதாசை பொய்யும் அகலாத மெய்யை
வளர் ஆவி உய்யும் வகை யோகத் தணுகாதே
புல்லறிவு பேசி அல்லல் படுவேனை நல்ல இரு தாளில் புணர்வாயே

அதாவது, குடும்பம், மனைவி மக்கள் என்று சுற்றிச் சுற்றிப் பாச வலை பின்னுகிறது மனித மனம். பேசாத பொய்யில்லை. உள்ளமெலாம் கள்ளம். உடலை வளர்க்கிறான். உயிர் உய்யத் தேவை மெய்யறிவும் யோக மாரக்கமும் எனப் புரியாமல் உடலும் உள்ளமும் கெட்டுப் பேர் கெட்டு, புகழ் கெட்டு, உயிர் வதைபடும் நிலை. "காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன் நாமம் கெடக் கெடும் நோய் " என எச்சரிக்கிறார் வள்ளுவரும். வேண்டாத, கவைக்கு உதவாத புன்மையான விஷயங்கள் பேசித் திரியும் இந்த ஏழையைத் திருத்தி, உன் திருத் தாளில் சேர்த்துக் கொள்வாய் செவ்வேளே - என வேண்டுகிறார் அருணகிரியார்.

மெய்ய வைய முழுதாளும் ஐய
மயில் வீர வல்ல முருகா முத்தமிழ் வேளே
வள்ளி படர் சாரல் வள்ளி மலை மேவு
வள்ளி மணவாளப் பெருமாளே

மெய்ப் பொருளே முருகையா, ஏழேழு உலகம் ஆள்கின்ற இறைவா, மயிலேறும் மாமணியே, திருவல்லத்தில் கோயில் கொண்டிருக்கும் திருவருளே, முத்தமிழே நீ தானே முத்துக்குமரா! வள்ளிக் கொடி படர்ந்திருக்கும் வள்ளிமலைச் சாரலில் வள்ளியை ஆட்கொளள வந்த வள்ளல் பெருமானே! ஏழைகளாம் எங்களையும் மீட்பாய் - என ஞானத்துடன் பக்தி குழைத்து, குழைகிறார் அருணகிரியார் .

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே