வேத வெற்பிலே — விளக்கவுரை

By Smt Janaki Ramanan, Pune.

You may read the meaning of the song vEtha verpile in English by clicking the underlined hyperlink.

வேத வெற்பின் வேலவா சரணம். "வேத வெற்பிலே " என்று தொடங்கும் திருக்கழுக்குன்றம் பாடல் தெய்வீக மணம் நிரம்பி உள்ளதாக இருக்கிறது.

வேத வெற்பிலே புனத்தில் மேவி நிற்கும் அபிராம

"வேதாசலமாக உயர்ந்து நிற்கும் திருக்கழுக்குன்றத்தையும், தினைப் புனத்தையும் விரும்பி வந்து, நிலைத்து நின்ற பேரழகா" என முருகனைத் துதிக்கிறார் அருணகிரிநாதர். ஏன் வேத வெற்பை விரும்பி வந்தான் வேலவன்? பெயரிலேயே தன் சிறப்பைச் சொல்லி நிற்கும் குன்றம் அது. வேதங்களே மலையாக உயர்ந்து நிற்பதால் அது வேத வெற்பு. அதன் சிகரத்தில் தேவர்கள் கூடி வேத கோஷங்கள் எழுப்பிக் கொண்டிருப்பதால் அது வேத வெற்பு. வேத புரீஸ்வரரின் அருள் நிறைந்து இருப்பதால் வேத வெற்பு. "கணக்கிலாத் திருக்கோலம் நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே " என்று உருகுகிறார் மாணிக்கவாசகர். தவசிகள் இருவர் இன்றும் கழுகுகள் ௹பத்தில் தரிசனம் தரும் வேத வெற்பு. அதனால் அங்கே விருப்பத்துடன் வந்து நிற்கிறானாம் வேலவன். தினைப்புன மானை ஏன் தேடி வந்தான்? அவள் அன்பு மயமான பக்தை. அவனுக்காகவே, அவன் அருளுக்காகவே, காத்திருந்தவள். அதனால் அங்கே வந்தானாம் கந்தன்.

வேடுவச்சி பாத பத்ம மீது செச்சை முடி தோய
ஆதரித்து வேளை புக்க ஆறிரட்டி புயநேய

அதாவது, தக்க தருணம் பார்த்துத் தினைப்புனம் வந்து, வள்ளியைத் தேடி அடைந்து, அவள் தாமரைப் பாதங்களில் வெட்சி மலர் சூடிய உன் சிரம் Uடுமாறு பணிந்த பன்னிரு கையோனே, நேசம் மிககவனே! இங்கே உயர்ந்த வள்ளி தத்துவமாம் ஜீவாத்ம-பரமாத்ம ஐக்கியம் பற்றி சொல்கிறார். தன்னிடமிருந்து பிரிந்து வந்து, காடு போன்ற சம்சாரத்தில் சிக்கிக் கொண்டிருக்கும் ஜீவனைக் கடைத்தேற்ற வருகிறான் பரம்பொருள். பக்தனின் அன்புக்கு அவன் அடிமை. பக்தன் எது சொன்னாலும் செய்யக் காத்திருக்கிறான். "பணியா என வள்ளி பதம் Uணியும்" என்கிறார் அநுபூதியிலும். சுந்தரருக்காக, சிவபெருமான் தெருவில் நடந்தே தூது போனதும், பார்த்தனுக்காகப் பரந்தாமன் தேர் ஓட்டியதும், பக்தனுக்காகத் தன்னை தாழ்த்திக் கொண்ட நிலை தான்.

ஆதரத் தொடு ஆதரிக்க ஆன புத்தி புகல்வாயே

அதாவது, அப்படிப் பட்ட கருணை கொண்டு என்னைக் கடைத்தேற்ற நீ வர வேண்டுமெனத் தவிக்கிறேன் ஐயா. அதற்குள்ள தகுதி பெறத் தேவையான ஞானம் தருவாய்" என இறைஞ்சுகிறார்.

காதும் உக்ர காளி வெட்க
மகுடம் ஆகாசம் முட்ட வீசி விட்ட காலர்

அதாவது, தட்சன் தன் யாகத்துக்கு அழைக்காமல் சிவனைச் சிறுமைப் படுத்திய பொழுது, யாகத்தை நிறுத்தி தட்சனைத் தண்டிக்க வீரபத்திரரைச் சிருஷ்டிக்கிறார் சிவபெருமான். மகுடம் ஆகாசம் முட்ட உக்ரமாய் நிற்கிறார் வீரபத்திரர் . தீயோரை அழிக்கும் ஆவேசத்தில் காளியையும் விஞசுகிறார். தட்சனை காலால் எட்டி உதைத்து வீசி எறிகிறார்.

பத்தி இமையோரை ஓதுவித்த நாதர் கற்க
ஓதுவித்த முனி நாண

அதாவது, அப்படிப்பட்ட வீரபத்திருக்கும், மற்ற தேவர்களுக்கும் வேத உபதேசம் செய்த சிவ பெருமானே பணிந்து கற்றுக் கொள்ளும் வகையிலும், "ஞானப் பிழம்பான இவனிடமா ப்ரணவம் தெரிந்தது போல் காட்டிக் கொண்டு சிறுமைப் பட்டோம்' என பிரமன் வெட்கம் கொள்ளும் வகையிலும்

ஓரெழுத்தில் ஆறெழுத்தை
ஓது வித்த பெருமாளே

அதாவது, "ஓம்" எனும் ப்ரணவத்தின் பொருள் சொன்ன பரம குருவே! அந்த ஓம் என்ற ஓரெழுத்தில் அ + உ+ ம + நாதம் + விந்து + கலை என்ற ஆறும் அடக்கம் எனப் புரிய வைத்த புண்ணியனே, ஷண்முகா. அந்த ப்ரணவப் பொருளே நீ தானே சடாட்சரா! சரவணபவா!! எனப் பக்தியில் கரைந்து உருகும் அருணகிரி நாதரைப் பார்க்கிறோம்.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே