இருவினை ஊண் — J.R. விளக்கவுரை

By Smt. Janaki Ramanan, Pune

You may read the explanation of the song iruvinai UN by clicking the underlined hyperlink.

நினைத்தவுடன் முக்தி தரும் அருணையின் முத்துக் குமரா சரணம். "இருவினை ஊண்" என்று தொடங்கும் திருவருணைப் பாடல்

முன்னுரை

சிவலோகமோ என பிரமிக்க வைக்கும் அருணையில் அமரர் குழாமும், முனி புங்கவர்களும், ரிஷிகளும் வந்து குவிந்து, கை குவித்து, அரனாரையும், முருகவேனளயும் தொழுது நிற்கும் சிறப்புச் சொல்கிறார் அருணகிரிநாதர். சாட்சாத் முருகனே "அருணகிரி நாதா" எனப் பெயர் சூட்டி, அவரை அன்புடன் அழைத்த தலம் அல்லவா! துன்பக் கடலில் அலைப்புண்டு தத்தளிக்கும் மரக்கலம் போன்ற இந்த நிலையற்ற உடல் மேல் மாந்தர்க்கு ஏன் இந்த மயக்கம் எனப் பரிதவிக்கிறார். மயக்கங்கள் நீங்கி முருகன் மலர்ப் பாதம் கிடைக்குமோ என ஏங்குகிறார். அருணையில் அவன் ஆட்கொணட பின்னரும் ஏன் இந்தக் கலக்கம்? வினைகளை வேரறுக்க இடையறாமல் வேலவனைத் தொழ வேண்டும் என்பதைத் தான் வலியுறுத்துகிறார். சைவ வைணவ பேதம் காட்டாமல் ஆடல் அரசனையும், அண்டம் உண்டவனையும் பாடும் பாடல்.

அருணையில் ஓங்கு துங்க சிகர கராம் புயங்கள்
அமரர் குழாம் குவிந்து தொழ வாழும் அடியவர் பாங்க

மூவரும், தேவரும், மூன்று தேவியரும் முனி புங்கவர்களும், ரிஷிகளும், தங்கள் கரமலர் குவித்துத் தொழ, "கோபுரத்து இளையனார் " என்ற பெயரில் அருணையின் ஓங்கி உயர்ந்த கோபுரத்தில் கோயில் கொண்டு அடியவரைக் காத்து நிற்கும் கந்தவேளே!

பண்டு புகல அகிலாண்டம் உண்ட அபிநவ சார்ங்க கண்டன் மருகோனே

பண்டொரு நாள் அகிலம் உண்ட நாயகனாய் நின்று, சார்ங்கம் என்ற வில் ஏந்திப் புதுப் புது வடிவங்கள் காட்டும் மாயவன் மருகா!

கருணை ம்ருகேந்ர அன்பருடன் உரகேந்த்ரர் கண்ட கடவுள் நடேந்த்ரர் மைந்த

புலிப் பாதராம் வியாக்ர பாதர், பாம்பு வடிவ பதஞ்சலி என்ற அன்பர் இருவரும் கண்டு களிக்கக், கருணையுடன் கனகசபையில் ஆனந்த நடனம் ஆடிய ஆடல் அரசனின் அருமை மைந்தா!

வரை சாடும் கலப ககேந்த்ர தந்த்ர அரச நிசேந்த்ர
கந்த கரகுலி சேந்த்ரர் தங்கள் பெருமாளே

மலைகளைச் சாடி வரும் வலிய தோகை மயில் வாகனா! தமிழ் நூல்களின் தரம் பிரித்து தகைமை சொல்லும் தமிழரசே, சத்திய தத்துவமே, கந்தா! வஜ்ராயுதம் தாங்கும் இந்திரன் முதலான தேவர்களின் தலைவா! எம் குறை கேளாயோ? என ஏறு மயிலானை வேண்டி அவர் கேட்பதைக் கேட்போம் பாடல் :

இருவினை ஊண் பசும்பை கருவிளை கூன் குடம்பை
இடரடை பாழ்ப் பொதும்பு அகித வாரியிடை திரி
சோங்கு மதுவது தேங்கு கும்பம்
இரவிடை தூங்குகின்ற பிண நோவுக்கு உருவியல் பாண்டம்
அஞ்சு மருவிய கூண்டு நெஞ்சொடு உயிர் குடிபோம் குரம்பை

"நான்" என இறுமாந்து கொண்டாடும் இந்த உடல் என்பது வெறும் கூடு என்று பல விதமாய்ச் சொல்லி தெளிவுறுத்தும் பாடல் பகுதி. இந்த உடம்பு இரு வினைகள் ஆற்றுவதற்காக, அவ்வப் பொழுது வெவ்வேறு ஜீவராசிகளாய் வடிவெடுக்கும் ஒரு அமைப்பு. கரு வளர்வதற்காக அமைந்த இடம். துன்பக் கடலில் விழுந்து திக்கு திசை தெரியாமல் அலைபாயும் மரக்கலம். மரணத்தின் சாயல் கொண்ட ஆழ்ந்த உறக்கத்தில் ஜடமாய் விழுந்து கிடக்கும் பொழுது இந்த உடலின் முக்கியத்துவம் என்பது ஒன்று உண்டா! ஐந்து பூதங்களால் ஆக்கப் பட்டு, உயிரும் கற்பனைகளை வளர்த்துக் கொள்ளும் மனமும் தற்காலிகமாகக் குடியிருக்கும் குடிசை.

அழியாதென்று உலகுட னேன்று கொண்ட கரும பிராந்தொழிந்து
உபய பதாம் புயங்கள் அடைவேனோ

இப்படிப் பட்ட இழிந்த உடல் அழியாதது என இறுமாந்து, பற்றுக்கள் பலவும் வளர்த்துக் கொண்டு, கர்மங்கள் என்ற மாய வலையில் சிக்கித் தவிக்கும் இந்த நிலை மாற்றுவாய் சிங்காரவேலா! உன் தாமரைப் பாதங்களை அடையும் பேறு தருவாய் பேரருளே! என்ற வேண்டுதல் அருணையின் கோபுரம் போல் உயர்ந்தது அல்லவா!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே