குடிவாழ்க்கை — J.R.விளக்கவுரை

By Janaki Venkatraman, Pune.

You may read in English the meaning of the song kudivaazhkkai by clicking the underlined hyperlink.

வெள்ளிமலையும் வள்ளிமலையும் காத்து நிற்கும் புள்ளி மயில் வாகனா சரணம். காக்கும் கடவுள் கந்தன் தான் என்பதைக் 'குடி வாழக்கை" என்ற பாடலில் தீர்மானமாய்ச் சொல்லி நம் கலக்கங்கள் தீர்க்கிறார் அருணகிரிநாத ஸ்வாமிகள்.

வட நாட்டில் வெள்ளி மலை காத்துப் புள்ளி
மயில் மேல் திகழ்ந்த குமரேசா
வடிவாட்டி வள்ளி அடி போற்றி வள்ளி
மலை காத்த நல்ல மணவாளா

வடக்கே கயிலை மலையின் திருக்கோயில் வாசலில் இருந்து காவல் செய்கின்ற கருணை வடிவே, மயில்வாகனக் கடவுளே! மூவரையும் முப்பத்து முக்கோடி தேவரையும் காக்க அவதாரம் செய்த அற்புதமே! தென்புலம் காக்கவென்று வள்ளிமலை வந்து, வனப்பிலே விஞ்சும் வள்ளிப் பிராட்டியுடன் இணைந்து பக்தர்களை என்றென்றும் காத்து நிற்பவனே! எனத் துதிக்கிறார். முருகன் திருவண்ணாமலையில் அவரைத் தடுத்தாட் கொண்டது உண்மை தான். ஆனால் கடந்த காலத்தில் தன் மேல் குத்திய பாவமுத்திரை குத்திக் கொண்டே இருந்ததால் மன்னிப்பை வேண்டுகிறார். விடுதலை வேண்டி விம்மி நிற்கின்றார்.

குடிவாழ்க்கை அன்னை மனனயாட்டி பிள்ளை
குயில் போல் ப்ரசன்ன மொழியார்கள்
குலம் வாய்த்த நல்ல தனம் வாய்த்த தென்ன

அதாவது, நல்ல குலத்தில் பிறந்து, அன்னை அணைப்பில் வளர்ந்து, அன்பான மனைவி மக்களை அடைந்து, செல்வ சுகங்களில் மிதந்து, தகாத இடங்களில் இன்Uங்கள் தேடிச் சென்று, இறுமாப்புடன் திரிந்தேன்.என்னை மன்னிப்பாயா முருகா?

குரு வார்த்தை தன்னை உணராதே

நான் தவறுகளை உணர்ந்து திருந்த ஒரு குருவை நாடிச் சென்றதில்லை. தெய்வமே மனித உருவில் குருவாய் வந்து காக்கும் என்பதைப் புரிந்து கொள்ளவில்லை. குருவின் சொற்கள் சத்தியம் என்பதையும் மீட்சியாம் நற்கதிக்கு அவர் சொற்படி நடக்க வேண்டும் என்பதையும் உணரவில்லை.

இட நாட்கள் வெய்ய நமனீட்டி தொய்ய
இடர் கூட்ட இன்னல் கொடு போகி
இடுகாட்டில் என்னை எரியூட்டு முன் உன்
இருதாள்கள் தம்மை உணர்வேனோ

வீணாக நாட்களைக் கழித்த வீணனின் வாழ்க்கை இது. இறுதியில் முறையிடுகள் எதற்கும் செவிசாய்க்காத கல் நெஞ்சனான எமன் வந்து உயிர் பறிக்க, துடித்துத் துவண்டு, தளர்ந்து, விழுந்து, வெந்தணலுக்கு இரையாவதற்கு முன்னால் வந்து விடு முருகா! அந்த நிலையிலாவது உன் திருவடி நிழலை நினைப்பேனோ? நீ தான் மெய்ப் பொருள் என்பதை உணர்வேனோ? என அவர் தவிப்பதும் துடிப்பதும் ஒட்டு மொத்த மனித குலத்தின் மெத்தனம் மாறுவதற்காக அது வழிகாட்டல். அது எச்சரிக்கை. ஒரு குருவை நாடிச் சென்று நம்மைச் செம்மைப் படுத்திக் கொள்ள வேண்டும் என்ற வலியுறுத்தல்.

அடி நாட்கள் செய்த பிழை நீக்கி என்னை
அருள் போற்றும் வண்மை தரும் வாழ்வே
அடி போற்றி அல்லி முடி சூட்ட வல்ல
அடியார்க்கு நல்ல பெருமாளே

அன்று திருவண்ணாமலையில் நான் குவித்து வைத்த பாவங்களை மன்னித்து மறுவாழ்வு தந்த மாணிக்கமே! உன் கருணைக் கனியைச் சுவைக்க வைத்தாய். தமிழ் மணக்க, மணக்க ஆயிரமாயிரம் பாடல்களால் உன்னைப் பாடும் பேறு தந்த என் செல்வமே! செவ்வேளே! எனச் சரண் அடைகிறார். முக்கண்ணன் மைந்தா சரணம்.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே