நாலிரண்டு இதழாலே — J.R. விளக்கவுரை

By Smt Janaki Ramanan, Pune

To read the meaning of the song naalirandu ithazhaale in English, click the underlined hyperlink.

உமையாள் சுதனே சரணம். "நாலிரண்டு இதழாலே என்று தொடங்கும் திருப்புகழ் பொதுப் பாடல்.

முன்னுரை

பாரதத்தின் நீள அகலங்களை அளந்தது போல், ஐயன் முருகனின் அனைத்து திருத்தலங்களுக்கும் யாத்திரை சென்று திருப்புகழ் பாடித் திருவண்ணாமலை திரும்பிய பின்னரும், பன்னிரு விழியோனின் புகழ் பாடும் ஆர்வம் அடங்காமல் இருந்த அருணகிரியார், திருவண்ணாமலைத் திருத்தலத்தில் இருந்தவாறே, தன் இதயத் தலத்தில் குமரனைக் கண்டு பாடிய பாடல்கள் பொதுப் பாடல்கள் என்று குறிக்கப் பெறுகின்றன. அத்தகைய பாடல்களில் ஒன்று தான் "நாலிரண்டு இதழாலே " என்று தொடங்கி, உமையாளையும், உமையாள் சுதனையும் துதிக்கும் பாடல். அன்னையின் புகழை அவர் பாடும் அருமையைக் கேட்போம். அத்தனையும் தித்திக்கும் தேன் மலர்கள்.
  1. ஆல சுந்தரி: ஆலகால விஷம் உண்ட நீலகண்டரின் அர்த்த நாரியாய் விஷம் உண்டு கண்டத்தில் தேக்கி வைத்த எழில் மங்கை.
  2. மோடா மோடி சந்தன குங்கும ஆடம்பர அலங்காரத்தில் அழகு பொங்க நிற்கும் விஷ்ணு துர்க்கை
  3. குமாரி: மூப்பே இல்லாதவளாய் என்றென்றும் நம்மைக் காப்பாற்றும் கொள்ளை எழில் கொஞ்சும் குமரி
  4. பிங்கலை: பொன்னிறத்தில் மின்னுகின்ற பேரெழிலாள்.
  5. நானா தேசி: எல்லா இடங்களையும் மனங்களையும் ஒளிமயமாக்கி, அந்த ஒளியில் லயித்து நிலைத்து நிற்பவள்
  6. அமோகி: மோகங்கள், ஆசைகளைக் கடந்தவள். அப்படிப் பற்றுக்களைக் களைந்து, தன்னை அடைய விரும்புவோருக்கு பற்றுக் கோடானவள்
  7. மங்கலை: நித்ய சத்தியனான சிவனின் மங்கல நாண் அணிந்து, அனைவருக்கும் மங்கலங்களை அள்ளி வழங்குபவள்
  8. லோகா லோகி எவ்வுயிர் பாலும் ஆன சம்பரமி: எல்லா உயிர்களையும், பெற்றுக் காக்கும் அன்னை. ஒவ்வொரு ஜீவராசி மீதும், சமமான மாறாத அன்பைச் சொரிபவள்.
  9. மாதா : ஜகத் காரணியான, ஜகத் ரட்சகியான தாய் அவளே
  10. மாதவி: மலர்க்கோலங்களின் நடுவே எழிற் கோலம் காட்டும் துர்க்கை
  11. ஆதி அம்பிகை: ஆதி சக்தி நாயகியான பரமேஸ்வரி
  12. ஞாதா வானவராட மன்றினிலாடா நாடிய அபிராமி : ஞான ஜோதியான ஆடல் அரசன் சித்சபையிலும், பொற்சபையிலும் ஆனந்தமயமாக ஆடும் பொழுது, அவருடன் இசைந்து ஆடும் அழகிய மயிலாம் அபிராமி.
  13. கால சங்கரி: காலனை சம்ஹாரம் செய்தவரின் தர்மபத்தினியாய், மரண பயம் போக்கி மங்கலம் தரும் சங்கரி
  14. சீலா சீலி: அனைத்து தேவதைகளின் சிறந்த நற்குணங்களை உள்ளடக்கியவளாய், அவற்றின் உச்சமாய் பொலியும் பரிசுத்தமான குணசீலி
  15. த்ரிசூலி: தீமைகளையும் தீயோரையும் தகர்த்து அழிக்கவென்று திரிசூலம் தாங்கியவள்.
  16. மந்திர சபாஷா பாஷணி: சக்தி வாய்ந்த மந்திரங்களின் நல்ல சொற்களாய், அவற்றின் நல்ல விளைவுகளாய், நலம் சேர்ப்பவள்.
  17. காள கண்டி: கருத்த கழுத்துடன், கருத்தாய் காத்து நிற்கும் காவல் தெய்வம்
  18. கபாலி : கபால மாலை அணிந்து நிலையாமை உணர்த்துபவள்
  19. மாலினி : மலர் மாலை பல அணிந்து புத்துணர்வு தரும் புவனேஸ்வரி. (நிலையில்லா ப்ரபஞ்ச மாயையின் நடுவே தான் நிலைத்து நிற்பவள் என்று உணர்த்துகிறாளோ)
  20. காம தந்திர லீலா மோகினி: இவளே மகா மாயா ப்ரபஞ்ச நாடகம் நடத்துகிறாள். அதனால் அந்த சிவகாமி, காம இச்சையைத் தூண்டும் சக்தியாய் ஜீவராசிகள் தழைக்க வழி செய்கிறாள்.
  21. வாம தந்திர நூல் ஆய்வாள் : சாக்தம் சொல்லும் ஆகம வழிபாட்டு முறைகளின் விதியாய், அதன் ஆழ்ந்த பொருளாய் அமைந்து, ஆராய்ச்சிகளின் அடிப்படையாய்த் துலங்குபவள். (எல்லா வழிபாடுகளின் எல்லைக் கோடு இவள்தானோ! )
  22. சிவகாம சுந்தரி வாழ்வே தில்லைக் கூத்தனின் உள்ளம் கவர்ந்த பேரெழிலாளாம் சிவகாமி பெற்ற செல்வனே செவ்வேளே சரணம்

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே