விரகொடு வளை: JR கருத்துரை

By Smt Janaki Ramanan, Pune

To read the meaning of the song viragodu vaLai (விரகொடு வளை) in English, click the underlined hyperlink.

முன்னுரை

திருவருணையின் திருவருட் செல்வா சரணம். "விரகொடு வளை" எனத் தொடங்கும் திருவருணை திருத்தலப் பாடல். ஏதேதோ துயரங்களில் மூழ்குகின்றோம்; எழுகின்றோம். அவற்றையெல்லாம் பொறுத்துக் கொண்டு மேடு பள்ளங்களில் ஏறி இறங்குகின்றோம். ஆனால் மீள முடியாத பெருந்துயராய் மரண பயம் அச்சுறுத்துகிறது. அந்தத் துயருக்கு வடிகால் உண்டா என்று தவிப்போருக்கு வடிவேலன் என்றொரு இணையிலா சக்தி உண்டு என்று கூறித் தொய்ந்த மனங்களைத் தூக்கி நிறுத்துகிறார் அருணகிரிநாதர். நிழல் அருமை வெய்யிலில் தெரிவது போல், ஐயன் கழல் அருமை மரணத்தின் உச்சக்கட்டத்தில் தெரியும் என்பதாலே அதையும் விளக்குகிறார். அச்சுறுத்தவில்லை; ஆழ்ந்த நம்பிக்கை கொடுக்கிறார்.

விரகொடு வளை சங்கடமது தரு
வெம் பிணி கொடு"

சாமர்த்தியமாக மனிதனை வளைத்து இழுத்து கூட்டிச் செல்வதற்காக, வலிய, கொடிய, பெருந் துயர் தருகின்ற பாசக் கயிறுடன் வருகின்றான் காலன்.

விழி வெங்கனல் போல
வெறி கொடு சமனின் உயிர் கொளு நெறி
இன்று என விதி வழி வந்திடும் போதில்

அவன் விழிகளில் செங்கனல் தெறிக்கும் சினம். அவன் இரங்கி விட்டால் மனிதன் பிழைத்துக் கொள்வான் என்பதாலே அந்த அச்சுறுத்தும் தோற்றம். ஒருவனின் விதி முடிகின்ற இறுதி நாள் என்பதைக் குறித்துக் கொண்டு, வாழும் வழி அடைத்து, அவன் எதிரில் நிற்க

கர வடமது பொங்கிடு மனமொடு
மங்கையர் உறவினர் கண் புனல் பாயும்

நம்மைப் பிடிக்காத வஞ்ச நெஞ்சம் கொண்டோர், உள்ளன்போடு வருவோர், ஆண், பெண் என இருபாலார், உற்றம் சுற்றம் எனக் குழுமியவர் அனைவரும் கண்ணீர் பெருக்க

கலகமும் வருமுன் குல வினை களையும்
கழல் தொழும் இயல் தந்தருள்வாயே

கலங்க வைக்கின்ற அந்த இறுதிக் கணங்கள் என்னை நெருங்குவதற்கு முன், முந்தை வினைகளை முற்றிலும் அழிக்கும் உன் பாதத் தாமரைகளைச் சரண் அடையும் பக்குவத்தைத் தந்தருள்வாய் முருகா!

பரவிடும் அவர் சிந்தையர் விட உமிழும்
பட அரவணை கண் துயில் மால்

தன் Uக்தர்களின் சிந்தை நிறைத்து, ஆயிரம் முடி கொண்ட, விஷம் கொப்பளிக்கின்ற ஆதிசேடன் மேல் சயனித்து யோக நித்திரையில் ஆழ்ந்து அகிலம் காக்கும் திருமால்

பழமறை மொழி பங்கயன்

வேதன் என்றே பெயர் கொண்டவனாய்த் தாமரையில் அமர்ந்து ஆதியான வேதம் ஓதி வாழும் வழி காட்டும் படைப்புக் கடவுளாம் பிரமன்

இமையவர் தம் பயமற விடமுண்டு எருதேறி
அரவொடு மதியம் பொதி சடைமிசை
கங்கையும் உற அனல் அங்கையில் மேவ
அரிவையும் ஒரு பங்கு இடமுடையவர்

அன்று திருப்பாற்கடலில் பொங்கி வந்த ஆலகால விஷம் உண்டு அமரரைக் காத்தவரும், நந்தி வாகனரும், அரவுகளை ஆபரணமாய் அணிந்தவரும், திங்களைக், கங்கையை, ஜடாமுடியில் தாங்கியவரும், கரமலரில் வெங்கனல் ஏந்தியவரும், மலையான் மகளை நிலையாக தன் இடப்பாகத்தில் வைத்திருப்பவருமான பரமன்

தங்கு அருணையில் மருவும் பெருமாளே

ஆகிய மும்மூர்த்திகளும் தங்கி இருந்து தரணியைக் காக்கும், புனிதத்திலும் புனிதமான திருவருணைத் தலத்தில் , அவர்களின் ஆற்றலை எல்லாம் உள்ளடக்கிய முழு முதற் கடவுளாய் கோயில் கொண்டிருக்கும் குமரேசா சரணம்.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே