முன்னுரை
குமரக் கோட்டத்தின் கொஞ்சும் எழிலே சரணம். "தலைவலையத்துத் தரம் பெறும்" என்று தொடங்கும் காஞ்சிபுரம் திருத்தலப் பாடல். தலைவன் முருகன் அருணகிரியாரைத் தடுத்தாட்கொண்ட பொழுது, அவர் நொந்த உடலை, நெஞ்சத்தைத் தேற்றி விட்டான். பட்ட காயங்கள் ஆற்றி விட்டான். பரம பக்தனாக மாற்றி விட்டான். ஆனந்த வெள்ளத்தில் திக்குமுக்காடிய அருணகிரியார், அரிய வேண்டுதல்களை அவன் முன் வைக்கின்றார். அவன் திருப்புகழைப் பாடச் சிறந்த கவித்துவம் கேட்கின்றார். தத்துவ ஞானம் வேண்டுகிறார். தர்மநெறி நடக்கும் மாண்பும், அவர் சத்புருஷன் என்று அனைவரும் ஏற்றுக் கொள்ளும் ஏற்றமான நிலையும் வேண்டுகிறார். அவனது அன்னையாம் அம்பிகையின் மகிமைகளையும் மகிழ்ந்து பாடுகிறார். பக்தியும் , தமிழும் பொங்கி வரும் இன்பக் கடலோ இந்தப் பாடல்!
தலைவலையத்துத் தரம் பெறும் பல
புலவர் மதிக்கச் சிகண்டி குன்றெரி
தரும் அயில் செச்சைப் புயங் கயங்குற வஞ்சியோடு
விளக்கம்:
புலமையில் தலையாய உன் அடியார்கள் உன்னை எப்படியெல்லாம் போற்றிப் பாடினார்கள் எனப் பிரமிக்கறேன் முருகா. அவர்களைப் போல் உன் மந்திர மயிலையும், க்ரவுஞ்சம் துளைத்துப் பிளந்த உன் கூர்வேலையும், வெட்சியும், வெற்றியும் சூடும் உன் புஜங்களையும், கஜம் வளர்த்த தேவசேனாவையும், குறவர் குலம் வளர்த்த வள்ளியையும்
தமனிய முத்துச் சதங்கை கிண்கிணி
தழுவிய செக்கச் சிவந்த பங்கய
சரணமும் வைத்துப் பெரும் ப்ரபந்தம்
விளம்பு காளப் புலவெனன
விளக்கம்;
பளபளக்கும் முத்துப் பரல் சதங்கைகளும் கிண்கிணியும் கொஞ்சும் செக்கச் சிலந்த உன் தாமரைப் பாதங்களையும், அரிய, பெரிய பாமாலைகளால் நானும் பாட வேண்டும். கவிமழை பொழியும் காளமேகப் புலவன் போல் நான் கவித்துவம் பெற வேண்டும். உன் புகழ் பாடும் அளவுக்கு அந்தக் கவிதைகள் ஏற்றம் பெற்றிருக்க வேண்டும்.
தத்துவம் தரம் தெரி
தலைவெனனத் தக்கறஞ் செயுங் குண
புருஷனென பொற்பதம் தரும் செனனம் பெறாதோ
விளக்கம்:
உன் மகிமை பாடும் தகைமையை எனக்கு நீ தந்தருள்வாய் முருகா! தெளிந்த தத்துவ ஞானமும், தர்மநெறி நடக்கும் தளராத மனமும் தருவாய். பண்புகள் நிரம்பிய குணசீலன் இவன் என உலகத்தார் போற்றும் அளவுக்கு, உன் பொற்பாதங்கள் இந்த ஏழையைப் புடமிட்ட பொன்னாக்க வேண்டும். அத்தகைய பிறவிப் பயன் பெறுவேனோ ஐயா!
பொறையெனனப் பொய் ப்ரபஞ்சம் அஞ்சிய
துறவனெனத் திக்கியம்புகின்றது
புதுமையல சிற்பரம் பொருந்துகை தந்திடாதோ
விளக்கம்:
உன் அருள் பார்வை என் மேல் பட்டு விட்டதாலே, இவன் பொறை என்னும் நிறைகொண்டவன், உலக மாயைக்கு அஞ்சி விலகுபவன் எனத் திசையெங்கும் பேசத் தொடங்கும் புதுமையும் நிகழ்ந்து விட்டது. இனி வேண்டுவதெல்லாம் உன் புகழ் பாடுதலும், உன் திருவடி நிழல் நாடுதலும் தானே முருகா!
குல சயிலத்துப் பிறந்த பெண்கொடி
உலகடையப் பிறந்த உந்தி அந்தணி
குறைவர முப்பத்திரண்டு அறம் புரிகின்ற பேதை
விளக்கம்: என் செல்வ முத்துக்குமரா! எப்பேர்ப்பட்ட அன்னையின் செல்வன் ஐயா நீ ! இமவான் பெற்ற ஈடு இணையில்லாச் செல்வி அல்லவா உன் அன்னை! உலகத்தைப் பெற்றெடுத்துக் காக்கும் தாய், கருணை மழையால் குளிர்விப்பவள். சகல ஜீவராசிகளுக்கும் உணவளித்தல், தாகம் தீர்த்தல், நோய்க்கு மருந்தளித்தல், நோவு தீர்த்தல், எந்தத் தொழிலையும் மதித்தல், அநாதைகளுக்கு அடைக்கலம் அளித்தல், பிறர் துயரைத் தம் துயராய் எண்ணித் துடைத்தல் — முதலான முப்பத்திரண்டு அறங்கள் வளர்த்த தேவி அவள்.
குணதரி, சக்ரப்ரசண்ட சங்கரி
கண பண ரத்னப்புயங்க கங்கணி
குவடு குனித்துப் புரஞ்சுடும் சினவஞ்சி நீலி
விளக்கம்: நற் குணங்கள் அனைத்தையும் ஆபரணமாய் அணிந்து கொண்டவள், மந்திர சக்கரத்தில் கம்பீரமாய் அமர்ந்திருக்கும் சங்கரி, மாணிக்கம் மின்னும் நாகத்தையே கங்கணமாய் அணிந்த காரிகை.
மேருவை வில்லாய் வளைத்து, திரிபுரம் எரித்து, தீய்மைச் சாடிய அர்த்தநாரி. நீல வண்ணத்தாள்.
கலப விசித்ர சிகண்டி சுந்தரி
கொடிய விடத்தைப் பொதிந்த கந்தரி
கருணைவிழி கற்பகம் திகம்பரி எங்கள் ஆயி
விளக்கம்: அழகில் அனைவரையும் விஞ்சும் வண்ணக் கலாப மயிலாள். உலகம் காக்க நஞ்சுண்டு, அதனால் கறுத்த கண்டத்தைக் கொண்டவள். கடல் போன்ற கண்களில் அலை போன்று மோதும் கருணை கொண்டவள், கேட்பது கொடுக்கும் கற்பகவல்லி, எங்கள் தாய் அவள்.
கருதிய பக்தர்க்கு இரங்கும் அம்பிகை
கருதி துதிக்கப்படும் த்ரியம்பகி
கவுரி திருக்கொட்டமர்ந்த இந்திரர் தம்பிரானே
விளக்கம்: இடர்படும் மானுடர் நினைத்து விட்டால் இரக்கம் கொண்டு ஓடிவரும் தேவி, கெளரி, காமாட்சி.
இத்தகைய அருமை, பெருமை மிக்க அன்னையுடன் திருக்கோட்டமாம் காஞ்சிபுரத்தில் கோயில் கொண்டிருக்கும் குமரா, தேவர்களின் தலைவா! சரணம்.
Comments
Post a Comment