பரிமள மிகவுள — JR கருத்துரை

By Smt Janaki Ramanan, Pune

To read the meaning of the song parimaLa migauLa (பரிமள மிகவுள) in English, click the underlined hyperlink.

முன்னுரை

ஆனைக்காவின் கவினே சரணம். "பரிமள மிகவுள" என்று தொடங்கும் திருவானைக்கா திருத்தலப் பாடல். மனிதனின் ஆசைகள் – குறிப்பாகப் பெண்ணாசை – அனைத்தையும் தராசின் ஒரு தட்டில் அடுக்கி வைத்தாலும், ஐயன் முருகன் அருள் மறு தட்டிலே மலர்ந்து விட்டால், அந்தத் தட்டு அவன் கனத்த கருணையால் அழகாய்க் கீழே இறங்க, பக்தனுக்காக அவன் இரங்க, மனிதன் கரையேறும் அதிசயம் நடந்து விடுகிறது என்கிறார் அருணகிரியார். பெண்ணாசை என்னும் பெருநெருப்பு மனித வாழ்வை முழுவதுமாய் எரித்து முடித்து விடுகிறது. அந்தச் சாம்பலிலிருந்து வாழ்வைத் துளிர்த்துத் தழைக்க வைக்கும் அற்புதத்தை அருணகிரியாரின் வாழ்க்கையில் வள்ளல் நடத்திக் காட்டினான். துராசை தன்னைக் கொண்டு வந்து நிறுத்திய அவலநிலையைப் படம் பிடித்துக் காட்டினால் தான் கந்தன் கருணையின் ஆழம் புரியும் என்பதை உணர்ந்து, தன்னையே சவுக்கடி போன்ற சொற்களால் தாக்கிக் கொள்கிறார் அருணகிரியார். அது மனித மனங்களில் நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உயரிய நோக்கம். காயங்களுக்கு மருந்தாக அவன் புகழைப் பாடலின் பிற்பகுதியில் பாடுகிறார்.

பரிமள மிகவுள சாந்து மாமத
முருகவிழ் வகை மலர் சேர்ந்து கூடிய
பல வரி அளிதுயில் கூர்ந்து
வானுறு முகில் போலே

விளக்கம்: முருகையா! உன் அருள் மணத்தில் ஆனந்தமாய் திளைப்பதை விட்டு, விலைமாதரின் பொருள் மணத்துக்கு விலை போனேன்.கஸ்தூரி போன்ற நறுமணக் கலவை பூசி, மொட்டவிழ்ந்து, வண்டுகள் ரீங்காரம் செய்து கொண்டிருக்கும் புத்தம் புது வாசமலர் சூடி, சுருள் சுருளாய் ஆகாயத்தில் படர்ந்த கருமேகம் போன்றதாய்

பரவிய இருள் செறி கூந்தல் மாதர்கள்
பரிபுர மலரடி வேண்டி ஏவிய
பணிவிடைகளில் இறுமாந்த கூளனை

விளக்கம்: அடர்ந்த கருங்கூந்தல் என்றும், சிலம்போசை சிணுங்கும் மென்மலர்ப்பாதங்கள் என்றும், அந்தப் பெண்களின் வடிவழகை வர்ணித்துக் கொண்டு, அவர்கள் ஏவிய பணியை இறுமாப்புடன் செய்து கொண்டு, குப்பை மேட்டிலே கிடந்தேன்.

நெறி பேணா விரகனை அசடனை வீம்பு பேசிய
விழலனை உறு கலை ஆய்ந்திடா முழு
வெகுளியை அறிவது போங்க பாடனை

விளக்கம்: நல்ல வழிகளை விட்டு நழுவியவன். ஒழுக்கத்திலிருந்து வழுவிய உன்மத்தன். வேண்டாத செயல்களைச் செய்து கொண்டு, அதையே பெருமையாகப் பேசித் திரிந்தவன். நல்ல நூல்கள், கலைகள் இவை பக்கமெல்லாம் தலை வைத்துப் படுக்காத மூடன். ஏமாற்றிப் பிழைத்த வஞ்சன்.

மலமாறா வினையனை
உரை மொழி சோர்ந்த பாவியை
விளிவுறு நரகிடை வீழ்ந்த மோடனை
வினவி முனருள் செய்து
பாங்கினாள்வது ஒரு நாளே

விளக்கம்: வாக்கு சுத்தம் அற்ற கபடனாய், மன அழுக்குகள் தீய செயல்களாய் வெளிப்பட பாவச் சுமைகளை ஏற்றிக் கொண்டவன். நானே ஏற்படுத்திக் கொண்ட நரகத்தில் வீழ்ந்தவன்.'ஏன் இப்படி ஆனாய் !' என இந்தக் கடையனைப் பார்த்துக் கரிசனத்துடன் கேட்க உன்னை விட்டால், யார் இருக்கிறார்கள் முருகா?. நீ கேட்பாயோ! என்னைக் கருணையுடன் பார்ப்பாயோ! உன் அருள் வந்து முன் நிற்க, எனக்கும் நல் வழி கிடைக்குமோ? ஏங்குகிறேன் ஐயா! எதிர் வருவாய்!

கருதலர் திரிபுர மாண்டு நீறெழ
மலை சிலை ஒரு கையில் வாங்கு நாரணி
கழலணி மலைமகள் காஞ்சி மாநகருறை பேதை

விளக்கம்: உன் புகழையும், உன் அன்னையின் புகழையும் பாடப் பாட, உள்ளத்தில் நம்பிக்கையின் ஊற்று. ஆணவம் கொண்டு அலைந்த திரிபுர அரக்கரை அழிக்க, மேருவையே வில்லாய் வளைத்துப் போர் தொடுத்து, வீணரை வீழ்த்திய அர்த்தநாரி அல்லவா உன் அன்னை! தசாவதாரம் எடுத்துத் தீயோரை ஒடுக்கிய நாராயணி அல்லவா! இமவான் மகளாய் வந்துதித்தவள், காஞ்சியின் காவல் தெய்வமாம் காமாட்சியின் பொற்கழல் எம் நிழல் அல்லவா!

களிமயில் சிவனுடன் வாழ்ந்த மோகினி
கடலுடை உலகினை ஈன்ற தாயுமை
கரிவன முறை அகிலாண்ட நாயகி அருள் பாலா

விளக்கம்: இன்பமே வடிவானவளாய், சிவனுடன் இணைந்து உலகம் காப்பவள், கடலையே ஆடையாக உடுத்த நிலப்பரப்பையெல்லாம் படைத்துக் காக்கும் அகிலாண்டேஸ்வரியாய் திருவானைக்காவில் கோயில் கொண்டிருக்கும் திரிபுர சுந்தரியின் தவப்புதல்வா, எங்கள் தவமே முருகா!

முரணிய சமரினில் மூண்ட ராவண
இடியென அலறி முனேங்கி வாய்விட
முடி பல திருகிய நீண்ட மாயவன் மருகோனே

விளக்கம்: உன் மாமன் பெருமையும் வில்லின் ஆற்றலும் சொல்லில் அடங்குமோ! போர்க்களத்தில் இறுமாப்புடன் எதிர்த்த ராவணனின் புகழையும், பத்துத் தலைகளையும் மண்ணோடு மண்ணnக்கிய மாமாயன் மருகா, முருகா

முதலொரு குறமகள் நேர்ந்த நூலிடை
இரு தன கிரிமிசை தோய்ந்த காமுக
முது பழமறை மொழி ஆய்ந்த தேவர்கள் பெருமாளே

விளக்கம்: உன் மேல் கொண்ட முதன்மையான பக்தியால் உருகிய குறப் பாவையை தேடி வந்து இணைத்துக் கொண்ட இன்ப நாயகா! வேதங்கள் ஓதி, வேள்வி இயற்றும் தேவர்களின் தலைவா! சரணம்.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே