கனி தரும் கொக்கு: J R கட்டுரை

By Smt Janaki Ramanan, Pune

To read the meaning of the song kanitharum kokku (கனி தரும் கொக்கு) in English, click the underlined hyperlink.

முன்னுரை

குமரக் கோட்டத்தின் கொஞ்சும் எழிலே சரணம். " கனிதரும் கொக்கு" என்று தொடங்கும் காஞ்சிபுரம் திருத்தலப் பாடல். மனிதகுலம் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறது; எப்படி வாழவேண்டும் என்று வரைமுறை கற்றுத்தரும் பாடல். வழக்கம்போல் தன் பிழைகளையே பட்டியலிட்டுப் பாடம் கற்றுக் கொடுக்கும் அருணகிரியாரின் தனித்துவம். முருகனின் புனிதத் திருத்தலங்களாம், திருச்செந்தூர், திருவேரகம். திருப்பழனி, திருச்செங்கோடு, கதிர்காமம் என்ற நாவுக்கினிய நாமங்களை எல்லாம் கனவில் கூடச் சொல்லி அறியாத வீணான தன் வாழ்நாளைச் சொல்கிறார். அம்பிகையின் பவித்திரத்தை, கங்கையின் புனிதத்தை அறியாமல் வாழ்ந்த அவலநிலை சொல்கிறார். அந்தப் பெரும் பிழைகளை மன்னித்த முருகையனின் பெருங்கருணை சொல்கிறார். காஞ்சியின் தலைவியான அம்பிகையின் மகிமைகளை நினைந்து நினைந்து உருகுகிறார்.

கனிதரும் கொக்குக் கட்செவி வெற்பும்
பழனியும் தெற்குச் சற்குரு வெற்பும்
கதிரையும் சொற்குட்பட்ட திருச்செந்திலும் வேலும்
கனவினும் செப்பத் தப்பும் எனை

விளக்கம் : மாங்கனிகள் குலுங்கும் நாகமலையாம் திருச்செங்கோட்டில் உன் அருட்கனிகள் பழுத்துக் குலுங்குவதை அறியாமல், பழனியில் நீ ஞானப்பழமாகக் கனிந்து நிற்பதை எல்லாம் உணராமல், நீ ப்ரணவப் பொருளாகவே விளங்கி, அதைத் தந்தைக்கும் விளக்கும் திருவேரகத்தின் அருமை தெரியாமல், உன் கருணைக் கடல் அலை வீசும் திருச்செந்திலின் மகிமை புரியாமல், கதிர்காமத்தில் உன் கதிர்வேலின் வீச்சை விளங்கிக்கொள்ளாமல், இந்தத் தலங்களின் பெயர்களைக் கனவில் கூட உச்சரிக்காமல், வெற்று வாழ்க்கை வாழ்ந்தேன் முருகா!

சங்கட உடம்புக்குத் தக்க அனைத்தும்
களவு கொண்டிட்டுக் கற்பனையின் கண் சுழல்வேனை

விளக்கம் : துன்ப சாகரத்தில் தள்ளும் இந்த உடம்பைப் பேணுவதையே வாழ்வாகக் கொண்டிருந்தேன். அதற்காகவே பொருள் சேர்த்தேன். விபரீத வழிகளாம் களவுக்குக் கூடத் துணிந்திருந்தேன். கற்பனை சுகங்களில் மகிழ்ந்திருந்தேன். இந்தச் சுழற்சியில் சிக்கிக் கொண்ட சிறியேன் நான்.

புனிதன் அம்பைக்குக் கைத்தல ரத்னம்
பழைய கங்கைக்கு உற்ற புது முத்தம்
புவியில் அன்றைக்கு அற்று எய்ப்பவர் வைப்பு என்று உருகா

விளக்கம் : புனிதமான பரமேஸ்வரனின் பத்தினி என்னும் ரத்தினமும், அவள் அபயகரத்தின் அணிகலன்களும், பழம் பெருமை கொண்டு பிரவகிக்கும் கங்கையின் அலை வீசும் முத்தும், தமக்கென எதையும் சேர்த்து வைத்துக் கொள்ளாமல் இறை உணர்வு ஒன்றையே செல்வமாகக் கொண்ட ஆன்றோரின் பக்தியும் தான் உண்மையான வைப்பு நிதி என்று உணராமல், முருகா என்று உருகாமல்

எப்பொழுதும் வத்திக்கைக் கற்ற எனைப் பின்
பிழையுடன் பட்டுப் பத்தருள் வைக்கும்
பொறையை என் செப்பி செப்புவது ஒப்பொன்று உளதோ தான்

விளக்கம் : உன்னை வணங்கி அறியாத பொய் வாழ்க்கை வாழ்ந்த கடையேன் நான். என் பிழைகளை நீ உன் தனிப்பெருங் கருணையால் மன்னித்தாய்; பக்தரின் நிலைக்கு என்னையும் உயர்த்தினாய். ஆயிரம் ஆயிரம் பாடல்களால் உன்னைப் புகழ்ந்தாலும் அந்த அன்புக்கு ஈடு இணை உண்டோ முருகையா!

அனனியம் பெற்று அற்று அற்று ஒரு பற்றுத்
தெளிதரும் சித்தர்க்குத் தெளி சிற் கொந்
தமலை தென் கச்சி பிச்சி மலர்க் கொந்தள பாரை

விளக்கம் : உன் அன்னையின் தன்னிகரில்லாப் பெருமையை எல்லாம் எப்படி எடுத்துரைப்பேன் முருகா! வடமேருவின் தலைவி, தென் காஞ்சியில் வந்து கோயில் கொண்டு, அருள்பொழியும் ஆனந்தம் என் சொல்வேன்! பற்றுக்கள் ஒவ்வொன்றாய் விட்டு, பற்றே அற்ற பக்குவ நிலை பெற்று பரமாத்மனும், ஜீவாத்மனும் வெவ்வேறில்லை என்ற அத்வைத தத்துவத்தில் நிலைக்கும் சித்தர்களின் ஞானத் தெளிவானவள். பரிசுத்தமானவள். அந்த பராசக்தி தான், பக்தர் கண்ணுக்கு விருந்தாக, மணம் கமழும் பிச்சிமலர்மாலைகள் சூடி, தென்கச்சி நகர் உறையும் தேவி காமாட்சியாக எழில் வீசும் ஏந்திழையாள்.

அறவி நுண் பச்சைப் பொற்கொடி கற்கண்டு
அமுதினும் தித்திக்கப்படு சொற் கொம்பு
அகில அண்டத்து உற்பத்தி செய் முத்து இன் பொல மேரு

விளக்கம் : அத்தனை அற உணர்வுகளாகவும் துலங்கி, அந்த அற வழியில் மனித குலத்தை அழைத்துக் செல்லும் மகாதேவி. பரிவுடன் உலகம் காக்கும் பச்சைக் கொடியான பார்வதி. கற்கண்டோ, அமுதோ, கொம்புத் தேன் தானோ என்னும் வண்ணம் மென் சொலாம் இன் சொல் கொண்ட மதுர பாஷினி. அகில உலகமும் உற்பத்தி செய்யும் ஜனனி. ஒளியை வாரி இறைக்கும் பொன்னான மேருவாக உயர்ந்து நிற்பவள்.

தனிவடம் பொற்புப் பெற்ற முலைக் குன்
றிணை சுமந்து எய்க்கப்பட்ட நுசுப்பின்
தருணி

விளக்கம் : இணையில்லா மணிமாலைகள் மின்னும் பெண்ணழிலைத் தாங்கி இளைத்த நுண்நூல் இடை கொண்டு இளமை பொங்க நிற்கும் உமையாள்.

சங்குற்றுத் தந்து திரைக்கம்பையினூடே
தவம் முயன்ற பொற்று அப்படி கைக்கொண்டு
அறமிரண்டு எட்டெட்டு எட்டும் வளர்க்கும்
தலைவி பங்கர்க்கு சத்யம் உரைக்கும் பெருமாளே

விளக்கம் : சங்குகள் நிரம்ப விளைந்து நீர் நிரம்பித் ததும்பும் கம்பை ஆற்றின் கரையில் கடுந்தவம் புரிந்தாள். இரு நாழி நெல் தான் கைக்கொண்டாள். அதைக் கொண்டு , முப்பத்திரண்டு அறம் வளர்க்கும் தேவி. அந்த நெல்லால், அகிலத்தின் பசி ஆற்றி விடுகின்றாள். ஓதுவார்கள். அறவோர், ஷண்மதத்தார், அநாதைகள், சிறையில் வாடும் குற்றவாளிகள் எனப் பேதம் பார்க்காமல் படி அளக்கிறாள். தர்மவான்கள் செய்யும் தர்மகாரியங்களாம், நோய்க்கு மருந்து, நிழலுக்குச் சோலைகள், எளிய பயணத்திற்குச் சாலைகள், தாகம் தீர்க்கக் குளங்கள், கீழான தொழில் என்ற பேதம் இன்றி நடக்கும் வண்ணார், நாவிதர் பணிகள், உழுது பயிரிடும் உன்னத, உயிர்காக்கும் விவசாயம், திருமணம் ஆகாமல் தவித்திருக்கும் மங்கையருக்குக் கன்னிகாதானம் என்று எந்த அறப்பணி எடுத்தாலும் அன்னை காமாட்சியே நடத்துகிறாள். அந்தக் கருணாம்பிகையின் பாகம் பிரியாத பரமருக்கு சத்ய நித்ய தத்துவமாம் ப்ரணவப் பொருள் சொன்ன ஆதிநாயகா, ஜோதியே, சுந்தரா, முருகா சரணம்.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே