வலிவாத பித்தமொடு : J R விளக்கவுரை

By Smt Janaki Ramanan, Pune

To read the meaning of the song valivaatha pitthamodu (வலிவாத பித்தமொடு) in English, click the underlined hyperlink.

முன்னுரை

"வலிவாத பித்தமொடு " என்று தொடங்கும் திருவண்ணாமலைத் திருத்தலப் பாடல். ஆன்மாவின் ஒளியாய் அறுமுகவன் அகத்தில் வீற்றிருக்கிறான். அஞ்ஞான இருள் அடர்ந்து இருக்கும் வரை ஜீவன் அவனைக் கண்டு கொள்ளாமல் இருக்கிறது. பஞ்சபூதங்களால் ஆன உடல், பஞ்ச இந்த்ரியங்களின் 'உதவியுடன், ஆசைகளை, வேண்டாத வினைகளை, நோய்களை தன்னுளே இழுத்துக் கொண்டு அவதிப் படுகிறது. ஒன்றல்ல, இரண்டல்ல, எண்ணிலா நோய்கள். மருத்துவ உலகத்தையே மலைக்க வைக்கும் நோய்கள். புதிது, புதிதாய் நுழைந்து விடும் நோய்கள். இவற்றிலிருந்து எப்போது விடுதலை என, மனித குலத்தின் சார்பில், வினா எழுப்பி, விடையாக வருபவன், விடையேறும் விமலனின் புதல்வன், முருகன் என்று தீர்ந்து தெளிகிறார் அருணகிரியார். அந்த இன்ப வாரிதிக்கு நம்மை அழைக்கும் பாடல். நம் துன்பத்தை எல்லாம் தீர்ப்பதல்லவா திருப்புகழ்!

வலிவாத பித்தமொடு களமாலை விப்பு குதி
வறள் சூலை குட்டமொடு குளிர் தாகம்

விளக்கம் : முருகையா ! இந்த உடலை வைத்துக் கொண்டு, எத்தனை விதமான நோய்களால், மனிதர்கள் தாக்கப்படுகிறோம். நினைத்தாலே அச்சம். அனுபவிக்கும் பொழுது கேட்க வேண்டுமோ வேதனை! நன்றாக இருக்கும் பொழுதே, திடீர் திடீரென வலிப்பு வந்து கால் கைகள் இழுத்துக் கொள்கின்றன. பித்தம் படாதபாடு படுத்தி தலைக்கேறி விடும் அபாயம் வந்து விடுகிறது. கழுத்தைச் சுற்றி கட்டியாய் வரும் கண்டமாலை, சிலந்திப் புண், உடல் இளைத்துக் கொண்டே வருதல், தீராத வயிற்று வலி, பெருநோய். நடுக்கும் குளிர் ஜுரம், அடங்காத விக்கல்.

மலி நீரிழிச்சல், பெரு வயிறீளை, கக்கு களை
வரு நீரடைப்பினுடன்

விளக்கம் : நீங்காத நீரிழிவு, வயிறு வீங்கிவரும், , மகோதரம், நெஞ்சடைக்கும் சளி, உண்பதை ஏற்காமல் வரும் இடையறா வாந்தி, உடல் தாங்கமுடியாமல் துடிக்க வைக்கும் நீரடைப்பு

வெகு கோடி சிலை யடைத்த உடல் புவி
மீது எடுத்துழல்கை தெளியா எனக்கு இனி
முடியாதே

விளக்கம் : இப்படி ஆயிரம், ஆயிரமாய். கோடிக் கோடியாய், மாற்றி மாற்றி. சீறிப் பாய்ந்து வரும் நோய்கள் தாக்கும் இந்த உடலைச் சுமந்து கொண்டு, அந்த நோய்களைத தடுக்கவும், அடியோடு நீக்கவும் மார்க்கம் தெரியாது, எத்தனை காலம் திரிந்து கொண்டிருப்பேன்! தயாளா கண் பாராய்!

சிவமார் திருப்புகழை எனு நாவினிற் புகழ
சிவஞான சித்திதனை அருள்வாயே

விளக்கம் : எல்லாவிதமான உடல் நோவும், மனத்தளர்வும், நீங்கி, இதமான ஒரு நல்ல மனநிலையில் , மங்கலகங்களை நிறைக்கும் திருப்புகழைப் பாடிப் பாடி நான் உன்னைத் துதிக்கவும், சிவஞானம் என்னும் மெய்ஞானம் பெறவும் அருள் செய்வாய் முருகா!

தொலையாத பத்தியுள திருமால் களிக்க ஒரு
சுடர்வீசு சக்ரமதை அருள்ஞான
விளக்கம் : தீயவைகளைக் தீர்த்துக்கட்டுவதையே பணியாகக் கொண்டதல்லவா உன் குலம். சிரிப்பெனும் நெருப்பால் எரித்து, அசுர சக்திகளை அழித்த, உன் தந்தையிடம் அகலாத பக்தி பூண்டவராய் அவரிடம் , சுதர்சன சக்கரத்தை வேண்டி நின்ற திருமாலுக்கு அந்தச் சக்ராயுதத்தை அளித்து, பல்வேறு சம்ஹாரங்களுக்கு வழி செய்த கருணையும் ஞானமும் கொண்டவரல்லவா உன் தந்தை!

துவர் வேணியப்பன் மிகு சிவகாமி கர்த்தன் மிகு
சுகவாரி சித்தனருள் முருகோனே

விளக்கம் : அந்தச் செஞ்சடையர், அருள்மயமான சிவகாமி அன்னையின் நேசர், சித்தமெல்லாம் சிவஞான இன்பக் கடலாய் பொங்கி நிற்கும் சிவனார் புதல்வனே! சரவணா!

அலை சூரன் வெற்பும்
அரிமுகன் ஆனை வத்திரனொடு
அசுரார் இறக்க விடும்
அழல் வேலா

விளக்கம் : அச்சத்தால் கடலுக்குள் ஒளிந்து கொண்ட சூரனை, அரணாக இருந்த க்ரவுஞ்ச மலையை, சிங்க முகாசுரன், யானை முகாசுரன், தாரகாசுரன் போன்ற அசுரதர்களை, நெருப்பென பாய்ந்து தாக்கி, ஓய்ந்து விழச் செய்த, வேலாயுதா!

அமுதா சனத்தி குற மடவாள் கரிப்பெணொடும்
அருணாசலத்திலுறை பெருமாளே

விளக்கம்: குறவஞ்சிக கொடியோடும், அமரர் குலப் பிடியோடும், பொன் சிம்மாசனத்தில் வீற்றிருந்து, திருவண்ணமாலை தலத்திலிருந்து, உலகை ஆட்சி செய்யும் தலைவா! முருகா, சரணம்!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே