இருளும் ஓர் கதிர் : J R விளக்கவுரை

By Smt Janaki Ramanan, Pune

To read the meaning of the song iruLumor kathir (இருளும் ஓர் கதிர்) in English, click the underlined hyperlink.

முன்னுரை

"இருளும் ஓர் கதிர் அணுகொணாத" என்று தொடங்கும் சிதம்பரம் திருத்தலப் பாடல் ஞானியரும் யோகியரும் மெய் ஞான ஒளியில் குளித்தாலும், முந்திய வினைகளின் இருள் படலம் அவ்வப்பொழுது அவர்கள் வாழ்க்கையிலும் குறுக்கிடுவது உண்டு. இறைவனின் அளப்பரிய கருணை துணைக்கு வர அந்தக் காலக்கட்டங்களை – கஷ்டங்களை – எளிதாக அவர்கள் கடந்து விடுகிறார்கள். அப்படி இருளுக்கும் ஒளிக்கும் இடையே பந்தாடப்படும் பொழுது அறுமுகனின் அருள் வேண்டி அருணகிரியார் பாடும் பாடல். முருகன் முன்னே இருள் என்றும், ஒளி என்றும், இன்பம் என்றும், துன்பம் என்றும், நல்வினை என்றும், தீவினை என்றும் இரு துருவங்கள் ஏதுமே இல்லை. அந்தத் தெளிந்த நிலைக்குத் தன்னைக் கொண்டு சேர்க்க வேண்டுகிறார். யோக மார்க்கத்தின் ஆனந்த நிலைகளைச் சுட்டிக் காட்டி வழிகாட்டுவது அந்த யோகிக்குக் கை வந்த கலையல்லவா!

இருளு மோர்கதி ரணு கொணாத
பொனிடம் தேறியேஇருநோயும்
எரியவே மல மொழியவே சுடர்
இலகு மூலக ஒளி மேவி

விளக்கம் : உன்னருளால் கிட்டாததும் உண்டோ முருகா! இரவு பகல் கடந்த பொன் உலகத்தை நான் அடைய வேண்டும். மனதளவிலும் அந்த சுகம் கிடைக்க வேண்டும். என்னை உச்சிக்குத் தூக்கிவிடும் நல்வினயும், அதே வேகத்தில் கீழே தள்ளிவிடும் தீவினையும் அழிந்துவிடும் சமநிலையில் நான் இருக்க வேண்டும். ஆணவம் கன்மம் மாயை என்ற மாசுக்கள் எரிந்து, நான் தூயவனாகத தெளிந்துவிட வேண்டும். சுடர் தெறிக்கும் மூலாக்கினி மேலெழுந்து நாடிகள் வழியே பாய வேண்டும்.

அருவிபாய இனமுத மூற
உன் அருளெலாம் எனதளவாக
அருளியே சிவ மகிழவே பெற
அருளியே இணையடிதாராய்

விளக்கம் : மேலான யோக நிலையில் நான் நிற்க வேண்டும். என்னுளே ஆனந்த அருவி பாய வேண்டும். சந்திரக் கலையின் அமுதம் ஊறி வர வேண்டும். உன் அருள் வெள்ளத்தில் நான் நீந்த வேண்டும். அது கொண்டு சேர்க்கும் சிவானந்த லஹரியில் திளைக்க வேண்டும். அந்த ஆனந்த நிலைகளை எல்லாம் தாண்டிய பேரின்பமாம் உன் பாத கமலங்களில் என்னைச் சேர்த்துக் கொள்வாயா முருகா!

பரம தேசிகர் குருவிலாதவர்
பரவை வான் மதி தவழ் வேணிப்
பவள மேனியர் எனது தாதையர்
பரம ராசியார்அருள்பாலா

விளக்கம் : உன் அன்புத் தந்தையின் அளப்பரிய மகிமைகளால் மலைக்கின்றேன் முருகையா! தவ சிரேஷ்டர்களுக்கும் முனி புங்கவர்களுக்கும் மௌனத்தால் உபதேசம் செய்து விட்ட சம்புவாம் நிர்மல நிச்சலன தட்சிணாமூர்த்தி அல்லவா அவர். நீ அவதாரம் செய்து வருவதற்கு முன்னால், அவருக்கு உபதேசம் செய்யும் அளவுக்குக் குரு என்று யாரும் இருந்ததில்லையே! கடல் போல் பொங்கும் கங்கையையும் பிறையையும் எழிலாய் முடியில் தரித்த அந்த செம்பவள மேனியர், சிதம்பர ரகசியம் என்னும் பரவெளியில் பிரம்ம தத்துவமாய், ஒப்பாரும் மிக்காரும் இல்லாமல் ஒளிர்பவர், அகிலத்துக்கே தந்தையானவர், எமக்களித்த சிவபாலா!

மருவி நாயெனை அடிமையா மென
மகிழ் மெய் ஞானமும்அருள்வோனே
மறை குலாவிய புலியுர் வாழ் குற
மகள் மெலாசை கொள் பெருமாளே

விளக்கம் : மலை போன்ற துன்பங்கள் என்னைத் தாக்கிய பொழுது என்னைத் தாங்கிப் பிடித்த தயாபரா உன் அன்புத் தளையில் என்னைக் கட்டிவிட்ட கருணாமூர்த்தியே உனக்கு அடிமை ஆவதில் தானே என் விடுதலை இருக்கிறது. மெய்ஞானம் தருகின்ற மெய்ப்பொருளே! வேதங்களின் நாதம் இனிதாய் பரவி நிற்கும் தில்லையில் கோயில் கொண்டிருக்கும் விழுப்பொருளே. குறவஞ்சியாம் ஜீவாத்மாவை தேடி நாடி ஓடி வந்த பரம்பொருளே, சரணம்.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே