ஒருவரை ஒருவர் தேறி : J R. விளக்கவுரை

By Smt Janaki Ramanan, Pune

To read the meaning of the song oruvarai oruvar (ஒருவரை ஒருவர்) in English, click the underlined hyperlink.

முன்னுரை

"ஒருவரை ஒருவர் தேறி" என்று தொடங்கும் பழனி மலைத் திருப்பாடல். தனிமனிதத் துன்பங்கள் ஒருபுறம் இருக்க, நாகரீகம் அற்று நடக்கும் மனித சமூகம் அல்லவா நல்லவர்களைத் துன்புறுத்துகிறது என்று அங்கலாய்க்கிறர் அருணகிரியார். சமூக இடிபாடுகளைச் சுட்டிக் காட்டுகிறார். மதம் என்ற பெயரில் மதம் கொள்வோரைச் சாடுகிறார். பாவச் சுழலிலிருந்தும், இறுதியில் பிறவிச் சுழலிலிருந்தும் விடுபடுவதற்கு ஞான ஜோதியாம் முருகனை வேண்டுகிறார்.

ஒருவரை ஒருவர் தேறி அறிகிலர் மத விசாரர்
ஒரு குண வழியுறாத பொறியாளர்

விளக்கம் : சமூகத்தைச் சீரழித்து சிதைத்தவைகளில் வேண்டாத சமய பேதங்கள் முக்கிய அங்கமானது தான் அவலம். சமய நெறியென்பது வெறியாகிப் போனது. ஒருவர் கொள்கையை மற்றவர் புரிந்து கொள்ளும் சகிப்புத் தன்மை போனது. தங்களை சமய ஆராய்ச்சியாளர்கள் என்று மமதையுடன் சொல்லிக் கொண்டு, எந்த ஒரு கொள்கையிலும் நிலைத்து நிற்காத சஞ்சல புத்தி கொண்டோர் சமூகத்தின் சாபக்கேடு.

உடல் அது சதமெனாடி களவு பொய் கொலைகளாடி
உர நமன் நரகில் வீழ்வர்

விளக்கம் : நிலையாப் பொருளாம் இந்த உடலை நித்தியம் என நம்பிக்கொண்டு அதைப் பேணுவதற்காகவும், சுக போகங்களுக்காகவும் , களவு, கொலை, பொய் போன்ற பாவங்கள் செய்து, அந்தப் பாவக் குழிகளை நரகக் குழிகளாக்கி வீழ்ந்து படுவோர் மற்றொரு புறம்.

அது போய் பின் வருமொரு வடிவ மேவி
இருவினை கடலுளாடி

விளக்கம் : இப்படிப் பட்ட பாவப் பிறவிகள், வினைகளின் விளைவாகத் திரும்பத் திரும்ப வந்து பிறந்து அந்தச் சுழலில் சுற்றிச் சுற்றி வரும் துயரம்

மறைவரின் அனைய கேரலம் அதுவாக
மருவிய பரமஞான சிவகதி பெறுக நீறு
வடிவுறு அருளி பாதம் அருள்வாயே

விளக்கம் : இந்தப் பாவச் சூழ்நிலையில் நானும் வாழ்நது கொண்டிருக்கிறேன். சலித்து விட்டேன். அஞ்சுகிறேன். இந்த அர்த்தமற்ற வாழ்வு மாற வேண்டும். முருகா! நீ தான் அதற்கான தெளிந்த ஞானத்தை இந்த ஏழைக்குத் தரவேண்டும். உன் திருவடிகளில் இடம் வேண்டும். சிவகதியாம் வீடுபேற்றை அடைய நீ தான் அருள வேண்டும் ஐயா !

திரிபுரம் எரிய வேழ சிலை மதன் எரிய மூரல்
திரு விழி யருள் மெய்ஞ்ஞான குருநாதன்

விளக்கம் : உன்னை விட்டால் ஞான உபதேசம் செய்வதற்கு இணையானோர் யார் ? நெருப்புப் போன்ற சிரிப்பால், நெற்றிக் கண் திறப்பால், திரபுரம் தீய்ந்து படவும், கரும்பு வில் காமன் எரிந்து விழவும் அருஞ்செயல்கள் புரிந்து, விழிகளாலேயே மௌன உபதேசம் செய்த தட்சிணாமூர்த்திக்கே மெய்ஞ்ஞான உபதேசம் செய்துவிட்ட பரம குருநாதா !

திரு சரஸ்வதி மயேசுவரி தலைவர் ஒத
திருநடம் அருளும் நாதர் அருள் பாலா

விளக்கம் : முறையே திருமகள், கலைமகள், மஹேஸ்வரி இவர்களின் தலைவர்களாம் திருமால், பிரம்மன், ருத்ரன், இவரகள் கண்டு களித்துப் போற்ற, திருத்தாண்டவம் ஆடும் மகாதேவனின் அருமை மைந்தா!

சுரபதி அயனும் மாலும் முறையிட அசுரர் கோடி
துகள வரு மெய் ஒரான வடிவேலா

விளக்கம் : இந்திரனும் பிரம்மனும் திருமாலும் முறையிட, அவர்களுக்குத் துன்பத்தைத் தந்த அசுரர்களைப் பந்தாடி துண்டாடி அழித்த ஞானசக்தி வேலைக் கரத்தில் இணைபிரியாது தாங்கி நிற்பவனே!

சுக குறமகள் மணாளன் என மறை பலவும் ஓதித் தொழ
முது பழனி மேவு பெருமாளே

விளக்கம் : வையத்தோர் வேண்டுகின்ற வரம் கொடுத்து இன்பமாய் வாழ வைக்கும் இச்சா சக்தியாம் வள்ளியின் மணவாளன் என்று வேதமெல்லாம் போற்றும் வடிவழகா! பழம் பெருமை மிக்க பழனியாம் சிறந்த தலத்தில் கோயில் கொண்டு, அருள்பாலிக்கும் முருகா சரணம்!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே