நால்வர் வரலாறு : 4. திருமாணிக்கவாசகர்

By Mrs.Shyamala, Pune

சமயக் குரவர்கள் நால்வரில் நான்காவதாக திருமாணிக்கவாசகர். திருவாதவூரில் பிறந்தவர். இயற் பெயர் திருவாதவூரடியான். தந்தை சம்புபாத சரிதர், தாய் சிவஞானபதி. பாண்டிய ராஜன் வரகுண பாண்டியனிடம் அமைச்சராக இருந்தார். சிவபக்தர். தமிழ் புலமை மிக்கவர். இவர் பாடிய பாடல்களுக்கு திருவாசகம் எனப் பெயர். தென்னவன் பிரமராயர் எனவும் அழைக்கப்பட்டார். திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசித்துக்கும் உருகார் என்பது அறிஞர்கள் வாக்கு.

ஒரு முறை மன்னர் தரமான குதிரைகள் வந்திருப்பதை அறிந்து அவற்றை வாங்க இவரை பொன்னும் பொருளும் கொடுத்து சோழ நாட்டுக்கு அனுப்பி வைத்தார். வழியில் திருப்பெருந்துறை என்ற சிவஸ்தலம். மரத்தடியில் ஒரு முதியவர். அவர் பாதத்தை தொட்டவுடனேயே அவர் சிவபெருமானே என்பது இவருக்குப் புரிந்தது. கண்ணீர் சிந்த பாடத் தொடங்கினார். இறைவன். "உன் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு சொல்லும் ஒரு மாணிக்கம்" என்று சொல்ல, அன்றிலிருந்து இவர் மாணிக்கவாசகர் என அழைக்கப்பட்டார்.

ஆலவாயனை தரிசித்த பின் பொன் பொருள் பதவி எல்லாம் பொய் என உணர்ந்து, கொண்டு வந்த பணத்தையெல்லாம் இறைவன் திருப்பணிக்கு செலவழித்தார். குதிரைகள் வராததால் சினம் கொண்ட அரசன் இவரை சிறையில் அடைத்தான். உடனே இறைவன் காட்டிலிருந்து நரிகளை பரிகளாக மாற்றி அனுப்பினார். மகிழ்ந்த அரசன் மாணிக்கவாசகரை விடுதலை செய்தான். அன்றிரவே பரிகள் நரிகளாகி ஊளையிடத் தொடங்கின. கோபம் கொண்ட மன்னன் மாணிக்கவாசகரை சுடு மணலில் நிறுத்தி வைத்து மரண தண்டனை விதித்தான். இறைவனோ மழை பொழிய வைத்து மணலை குளிர வைத்தார். மழையால் வைகையில் வெள்ளம், உடைப்பு. அரசன் வீட்டுக்கு ஒருவர் வந்து மண்ணை கொட்டி உடைப்பை அடைக்கும் படி பணித்தான். பிட்டு விற்கும் ஒரு மூதாட்டிக்கு ஒருவரும் இல்லாததால் இறைவன் பணியாளன் உருவத்தில் பிட்டுக்கு மண் சுமக்க வந்தார். வேலை செய்யாமல் பணியாளன் உறங்கினான். கோபமடைந்த மன்னன் பணியாளுக்கு பிரம்படி கொடுத்தான். அது உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகள் முதுகிலும் சுளீரென பட்டது. இறைவன் ஒரு கூடை மண்ணை கொட்ட உடைப்பு சரியானது. பணியாளும் மறைந்தான். வந்தது மாணிக்கவாசகரை காக்க வந்த இறைவனே என உணர்ந்த அரசன் மாணிக்கவாசகரிடம் மன்னிப்பு கோரி மறுபடியும் மந்திரி ஆக்கினான். ஆனால் மாணிக்கவாசகர் அதை துறந்து சிவனடியார் ஆனார். சிதம்பரம் சென்றார். தினமும் இவர் பாட ஒரு வேதியர் அதை ஓலையில் பொறித்தார். பாடல்கள் முடிந்த நிலையில் வேதியராக வந்த சிவபெருமான் "திருவாதவூர் கூற திருச்சிற்றம்பலம் உடையான்" என கையொப்பம் இட்டு மறைந்தார்.

தெய்வம் மனிதனை வழி நடத்த கூறியது கீதை. மனிதன் மனிதனை நல்வழிப்படுத்த தோன்றியது திருக்குறள். மனிதன் கூற இறைவன் எழுதியது திருவாசகமும் திருக்கோவையும். இவை எட்டாம் திருமுறை யாக விளங்குகின்றன. தனது 32ம் வயதில் ஆனி மாதம் மக நட்சத்திரத்தில் மாணிக்கவாசகர் இறைவனில் ஜோதியாகக் கலந்தார். திருச்சிற்றம்பலம்.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே