நால்வர் வரலாறு : 2. திருநாவுக்கரசர்

By Mrs Shyamala, Pune

திருநாவுக்கரசு நாயனார் 7ம் நூற்றாண்டில் பிறந்தவர். 63 நாயன்மார்களில் ஒருவர், தேவாரம் பாடியவர்களில் இரண்டாமவர்.

இவர் கடலூர் மாவட்டம் திருவாமூரில் வேளாண் குலத்தில் பிறந்தவர். தந்தை புகழனார், தாய் மாதினி. பெற்றோர் வைத்த பெயர் மருணீக்கியார். இளமையில் சமணத்துக்கு மாறினார். தலைவர் பதவி ஏற்றார். தமக்கை திலகவதியாருக்கு வருத்தம். சிவபெருமானை துதித்து தம்பி சைவத்தை துறந்தது பற்றி முறையிட்டார். சிவனார் தருமசேனருக்கு சூலை நோய் அளித்தார். எந்த சமண வைத்தியராலும் குணப்படுத்த முடியவில்லை. பின் தமக்கையின் வேண்டுகோளின்படி " கூற்றாயினவாறு விலக்கிலீர்" என இறைவன் மீது பதிகம் பாடினார். நோய் நீங்கியது. மீண்டும் சைவத்துக்கு மாறினார்.

பல சிவாலயங்களுக்குச் சென்றார். அங்கு உழவாரப்பணி அதாவது கோவிலை தூய்மை படுத்தும் பணியை செய்தார். அதனால் உழவாரத் தொண்டர் என பெயர் பெற்றார்.

சமணர்களுக்கு மன்னன் மகேந்திர பல்லவன் தங்களை ஆதரிக்காமல் விட்டுவிடுவானோ என்ற பயம். எனவே நாவுக்கரசர் மீது புகார் அளித்தனர். அரசன் இவரை துன்புறுத்தினான். சுண்ணாம்பு காளவாயில் ஏழு நாட்கள் அடைத்து வைத்தான். இவரோ "மாசில் வீணையும் மாலை மதியமும்" என இறைவனை நோக்கி குறுந்தொகை பாட அந்த நீரிலிருந்து வேகாமல் வெளியே வந்தார். வீணா கானமும் சந்திரனும் அந்த சுண்ணாம்பை தென்றலாகவும் இளவேனிற் பொய்கையாகவும் ஆக்கிற்று.

பின் சமணர்கள் நச்சு கலந்த பால் சோற்றை இவருக்கு அளித்தனர். "நஞ்சும் அமுதாகும்" என இறைவனை வேண்ட பிழைத்துக் கொண்டார்.

பின் யானையை விட்டு இடரச் செய்தார்கள். இவர் யானையை நோக்கி " சுட்டெண் சந்தன சாத்தும்" என அடியெடுத்து, "திண்ணென் கெடிலப் புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!- அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை" என பாட யானை இவரை வலம் வந்து எதிர் திசையில் சென்றது. ஏவிய சமணர்களை கொன்றது.

பின் அரசனிடம் இது இவர் சூது என சொல்லி சமணர்கள் இவரை கல்லில் கட்டி கடலில் தள்ளினர். இவர் சிவனை நினைத்து "சொற்றுணை வேதியன்" என ஆரம்பித்து "கற்றுணை பூட்டியோர் கடலினில் பாய்ச்சினும், தன்னுடைய ஆவது நமச்சிவாயமே" என பதிகம் பாடினார். கயிறு அறுந்தது, கல் சிவிகையாகி வருண பகவான் இவரை அதில் அமர்த்தி தூக்கிச் சென்றான், திருப்பாதிரிப்புலியூரில் விட்டான். அரசனும் மனம் திருந்தி சைவத்தை தழுவினான்.

தனது முதுமை பருவத்தில் சிறுவன் ஞான சம்பந்தருடன் சேர்ந்து பல தலயாத்திரைகள் செய்தார். ஞானசம்பந்தர் இவரை அப்பரே என அழைத்தார். அன்றிலிருந்து இவர் பெயர் அப்பர் ஆயிற்று. இவர் பாடிய தேவாரப் பாடல்கள் 4,5,6 ஆகிய மூன்று திருமுறைகளில் வகுக்கப்பட்டு உள்ளன. 81ம் வயதில் சித்திரை மாதம் சதய நட்சத்திரத்தில் இறைவனுடன் கலந்தார். திருச்சிற்றம்பலம்.

நால்வர் வரலாறு : 1. திருஞானசம்பந்தர்

நால்வர் வரலாறு : 3. சுந்தரமூர்த்தி நாயனார்

நால்வர் வரலாறு : 4. திருமாணிக்கவாசகர்

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே