நால்வர் வரலாறு : 3. சுந்தரமூர்த்தி நாயனார்

By Mrs Shyamala, Pune

சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவர், 63 நாயன்மார்களில் பிரதானமானவர், 8ம் நூற்றாண்டை சேர்ந்த சுந்தர மூர்த்தி நாயனார். இவரை செல்லமாக தம்பிரான் தோழர் என்று அழைப்பார்கள். சிவ பக்தரான இவர் பாடிய பாடல்களை சுந்தரர் தேவாரம் அல்லது திருப்பாட்டு என்பார்கள். இவரது தேவார பாட்டுகள் 7வது திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன. இவர் எழுதிய பாடல்கள் மொத்தம் 38,000. ஆனால் 100 பதிகங்களே கிடைத்துள்ளன. பாடல்களை பண்ணோடு சேர்த்து எழுதியுள்ளார். செந்துருத்தி பண்ணை உபயோகப்படுத்தியவர் இவர் ஒருவரே.

இவர் திருமுனைப்பாடியில் உள்ள திருநாவலூரில் பிறந்தவர். ஆதி சைவ குலம், தந்தை சடையனார், தாய் இசைஞானி. பெற்றோர் வைத்த பெயர் நம்பியாரூரான். ஆரூரான் என அழைப்பது வழக்கம். இவரின் அழகைக் கண்டு சிவனே இவருக்கு சுந்தரர் என பெயரிட்டார். திருமுனைப்பாடி அரசர் நரசிங்கமுனையரையர் இவரை தன்னோடு அழைத்துச் சென்று அனைத்து கலைகளையும் கற்பித்தார்.

சடங்கவி சிவாசாரியார் மகளுடன் இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மணநாள் அன்று ஒரு முதியவர் தோன்றி ஒரு ஓலையை காட்டி "உன் தாத்தா எழுதிக் கொடுத்தது. அவர் வழித்தோன்றல்கள் எனக்கு அடிமை" என்றார். இவரை கையோடு சிவன் கோவிலுக்கு அழைத்துச் சென்றார். உள்ளே சென்றதும் மறைந்து விட்டார். சுந்தரருக்கு புரிந்தது வந்தது சிவபெருமான் என்று. ஆண்டவனே தன்னை ஆட்கொண்டதை எண்ணி மனம் உருகி "பித்தா பிறை சூடி பெருமானே" என முதல் பதிகம் பாடினார். பல சிவ ஸ்தலங்களுக்கு சென்றார். பலப்பல பதிகங்களை அருவி கொட்டுவது போல் பண் அமைத்து பாடினார்.

இவர் ஒரு சிநேகிதனாக சிவனிடம் பக்தி செலுத்தினார். நண்பனிடம் கேட்பதுபோல் உதவி கேட்டார். குண்டலூரில் இவர் பெற்ற நெல் மூட்டைகளை சிவனார் இவர் ஊரில் கொண்டு சேர்த்தார்.

பின் திருவாரூர் சென்றார். பரவை நாச்சியாரை மணந்தார். பின் திருவொற்றியூரில் சங்கிலியார் என்ற பெண்ணை கண்டு மோகம் கொண்டார். சிவனார் இவர் நண்பனாக தூது சென்று திருமணத்தை நடத்தி வைத்தார்.

சிவபெருமானுக்கு இவர் யாரிடமாவது பொருள் பெற்றுக் கொண்டால் பிடிக்காது. சேரமான் பெருமான் இவருக்கு நிறைய திரவியங்கள் அளித்தார். சிவனார் தன் பூத கணங்களை திருடர்கள் போல் அனுப்பி பொருட்களை பறித்துக் கொண்டார். பின் சுந்தரர் " கொடுகு வெஞ்சிலை வடுகவேடுவர்" என சிவனை நோக்கி பதிகம் பாட திருப்பிக் கொடுத்தார்.

18ம் வயதில் சிவனை அடைய ஒரு பதிகம் பாடினார். இறைவன் வெள்ளை யானையை அனுப்பி இவரை கைலாயத்திற்கு அழைத்துச் சென்றார். இப்போதும் சுந்தரருக்கு ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் குரு பூஜை கொண்டாடப்படுகிறது. தென்னாட்டுடைய சிவனே போற்றி.
திருச்சிற்றம்பலம்.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே