வேடிச்சி காவலன் வகுப்பு

By Mrs Janaki Ramanan, Pune

முன்னுரை

விளக்கிட முடியாத தத்துவப் பொருளாக விளங்குபவன் முருகன். அவன் அருளிலே திளைத்து, அவன் உபதேசித்த ஞானத்திலே குளித்து, அவன் மேல் வைத்த பக்தியிலே உருகிய அருணகிரிநாதருக்கு அவனை முருக பக்தர்களுக்கு ஓரளவாவது பரிச்சியம் செய்து விட வேண்டுமென்ற ஆர்வம். ஆயிரமாயிரம் திருப்புகழ்கள் இயற்றியும் ஆர்வம் அடங்கவில்லை. வேல் வகுப்பு என்றும், சீர் பாத வகுப்பு என்றும் வேடிச்சி காவலன் வகுப்பு என்றும், அவன் மகிமைகளைப் பாடிப் பாடித் தெளிவாக்க முனைந்தார். ஒரு வகுப்பு என்று எடுத்துக் கொண்டால், முருகன் பற்றிய ஒரு விஷயத்தைப் பகுத்துப் பகுத்து எடுத்துச் சொல்வது. உதாரணமாக புய வகுப்பில், அவன் புயங்களின் எழிலை, வலிமையை, வீரத்தை, தீரத்தை, அலங்காரத்தை, கருணையை, அழகான கோணங்களில் வரி வரியாய்ப் பாடுவது.

வேடிச்சி காவலன் வகுப்பு விளக்குவது என்ன?

முருகன் தான் முழு முதற் கடவுளான மெய்ப்பொருளாம் பரம்பொருள் என்பதையும், வேதத்தின் நாதம் என்பதையும், வேடர் குலப் பெண்ணான வள்ளி ஜீவாத்மா என்பதையும், அந்த ஜீவாத்மாவுக்குக் காவலனாய், வேடனாய், வேலைாய், விருத்தனாய் வந்து அவளை ஆட்கொண்ட பரமாத்மாவான ஷண்முக தெய்வம் என்பதையும், அவன் மகிமைகளைச் சொல்லி சொல்லி விளக்குகிறார். அவன் மகிமைகள் எங்கே! அவள் எளிமை எங்கே! ஆனாலும் காவலனாய் வந்து விட்டான். ஏங்கி நிற்கும் ஜீவன்களுக்கு நம்பிக்கையும் ஏற்றமும் தரும் வேடிச்சி காவலன் வகுப்பு, உயர்ந்த தத்துவப் பொருளைக் கருப்பொருளாய் கொண்டிருக்கும் சிறந்த பாடல்.

உதர கமலத்தினிடை முதிய புவனத்ரயமும்
உக முடிவில் வைக்கும் உமையாள் பெற்ற பாலகனும்

யுக முடிவில், ப்ரளய காலத்தில், சீரும் சிறப்புமாய் பொலிந்து கொண்டிருந்த மூன்று உலகங்களையும் ஒரு தாமரை மலரில் அடக்கிக் காப்பாற்றி வைத்து, அடுத்த யுகம் ஆரம்பிக்கும் பொழுது அவற்றை வெளிக் கொண்டு வரும் மகாசக்தியான பார்வதியின் பாலகனான முருகன் அல்லவா, ஒரு வேடர் குலப் பெண்ணை ஆட்கொள்ள வந்த கருணாமூர்த்தி!

உமிழ் திரை பரப்பி வரு வெகுமுக குலப் பழைய
உதக மகள் பக்கல் வரு சோதிச் சடானனும்

அலைகடல் போல் ப்ரவாகமாய் பொங்கி வரும் புராதனமான கங்கை, தன் தண் கரத்தில் ஏந்திச் சரவணத்தில் தவழவிட்ட அக்னிப் பிழம்பான ஷண்முகன் தான் வேடர் குல மானைத் தேடி வந்தான்.

உவகையொடு கிர்த்திகையர் அறுவரும் எடுக்க அவர்
ஒருவரொரு வர்க்கவொணர் ஓர் புத்ரன் ஆனவனும்

ஆறு கார்த்திகைப் பெண்டிர் சரவணபவனுக்கு அமுதூட்டி வளர்க்க ஆசை கொண்ட பொழுது, ஆறாய்ப் பிரிந்து, ஆளுக்கொரு குழந்தையாய் வந்த அன்பின் வடிவமானவன் தான், கானக் குயிலை காக்க வந்த கந்தன்.

உதயரவி வர்க்க நிகர் வனகிரண விர்த்த விதம்
உடைய சதபத்ர நவ பீடத்து வாழ்பவனும்

உதித்து வரும் சூரியன் போல் ஜாஜ்வல்யமாய் ஒளி வீசிக் கொண்டு, நூறு நூறு வண்ணங்களை வாரியிறைத்துக் கொண்டு வரும் அழகnன தோகை மயில் மேல் பவனி வருகின்ற ஆறுமுகன் அல்லவா, கான மயிலாம் வள்ளியின் மேல் கருணை கொண்டு வந்தவன்!

உறை சரவணக் கடவுள் மடுவில் அடர் வஜ்ரதர
னுடைய மத வெற்பு உலைய வேதித்த வீரியனும்

சரவணத்தில் மலர்ந்த ஷண்முகநாதனின் அருமை பெருமை தெரியாமல், வஜ்ராயுதம் ஏந்தி, ஐராவதத்தில் ஏறி அவனை எதிர்த்து வந்த தேவராஜனின் வெள்ளை மதக் களிற்றை வீழ்த்தி அவனை வெற்றி கொண்ட வீரப்ரதாபன், எளிய வேடர் குலப் பெண்ணைத் தேடி வந்த விந்தைதான் என்ன!

உரை பெற வகுத் தருணை நகரின் ஒரு பத்தனிடும்
ஒளி வளர் திருப்புகழ் மதாணி க்ருபாகரனும்

சான்றோரும், ஆன்றோரும் ஆயிரமாயிரம் சிறந்தகளால் போற்றும் கீர்த்தி மிகு கார்த்திகேயன் திருவண்ணாமலையில் பிறந்த இந்த எளிய பக்தனின் திருப்புகழ் களையும், சீர்பாத வகுப்பு போன்ற வகுப்புக்களையும், வேல் விருத்தம் போன்ற படைப்புகளையும் மதித்து மாலைகளாய் சூடிக் கொண்ட கருணையை என் சொல்வேன்! அந்த அருள் கடல் அல்லவா ஒரு ஏழையைத் தேடித் தினைப்புனம் வந்தவன்!

உரக கண சித்த கண கருட கண யஷகணம்
உபநிடம் உரைத்த படி பூசிக்கும் வானவனும்

விளக்கம்: ஈரேழு பதினான்கு லோகங்களுக்கும், பதினெட்டு கணங்களுக்கும் அதிபதியே ஆறு முகா! நாகலோகத்தின் அத்தனை தாக கணங்களும், நாகங்களை நடுங்க வைக்கும் கருட கணங்களும், அஷ்டமாசித்திகள் பெற்ற சித்த கணங்களும். கடவுளரையே எதிர்க்கத் துணியும் அசுர கணங்களும், அஷ்ட ஐஸ்வர்யங்களுக்கும் சொந்தமான குபேரனும் யஷகணங்களும் வேதாந்தம் விளக்கும் உன்னை உணர்ந்து முறையாக வணங்கி நிற்கும் தேவாதி தேவா! ஒரு பேதையைக் காப்பாற்றிக் கரையேற்றப் பாதம் நோகத் தினைப்புனத்தில் திரிந்தாயோ!

ஒருவனும் மகிழ்ச்சி தரு குருபரனும் உத்தமனும்
உபயமுறும் அக்னி கர மீதிற் ப்ரபாகரனும்

ஒன்றான நித்திய சத்தியன் நீ. பலவாய் விரிந்து வியாபித்தவன் நீ. வேதப் பொருளாய் விளங்கி, வேத நாயகனே மகிழும்படி ப்ரணவநாதப் பொருள் சொன்ன வித்தகன் நீ. பரமானந்த சாகரத்தின் அமுத மெய்ப்பொருள் அக்னிப் பிழம்பாக, சிவசக்தி ஸ்வ௹பனாக அவதரித்ததுமன்றி, ஜீவாத்மாவான வேடர் குல மானை இணைத்துக் கொள்ளத் துணையாக வந்த எல்லையில்லாக் கருணையை எப்படி எடுத்துரைப்பேன் ஐயா!

அதிமதுர சித்ர கவி நிருபனும் அகத்தியனும்
அடி தொழு தமிழ்த்ரய விநோதக் கலாதரனும்

அன்று ஞானசம்பந்தனாய் அவதரித்து, ஏழுகூற்றிருக்கை, ஏக நாதம் போன்ற அற்புதமான சித்ர கவிபாடித் தமிழ்த்தேன் அள்ளி வழங்கிய கவிராஜனே! நீ கவி பாடி, எலும்புகளை ஒன்று சேர்த்து பெண்ணாக்கித் தந்த விந்தை, ஆண் பனையை பெண் பனையாக்கிய அதிசயம் என ஜாலங்கள் புரிந்தாய். தமிழின் தலைவனாம் அகத்தியனும், சங்கப் புலவர்களும் போற்றி வணங்கும் முத்தமிழ் வித்தகா, முத்துக் குமரா, முத்து நகையாளைத் தேடி வந்து அவள் சித்தம் கவர்ந்ததும் உன் சித்து விளையாட்டோ!

அவரை பொரி எள் பயறு அவரை அவல் சர்க்கரை யொடு
அமுது செய்யும் விக்ன பதி யானைச் சகோதரனே

இந்த உன் எளிமை உன் அருமைச் சகோதரன் வழி வந்ததோ! பக்தர்கள் அன்புடன் படைக்கும் எளிய நைவேத்யங்களாம், சர்க்கரை, பொரி, அவல், துவரை, அவரை, போன்றவற்றை விருப்புடன் ஏற்றுக் கொண்டு, அவர்கள் அரிய செயல்கள் செய்வதற்காகத் தடைகளை எல்லாம் நீக்கும் விக்ன விநாயகனின் இளையவா! நீ 'வா' 'வா' என்றதும் விரைந்து வந்து, வள்ளி மயிலை உன்னுடன் சேர்த்து வைத்த ஜேஷ்டராஜனின் ச்ரேஷ்டமான சகோதரா! பக்தரைக் காக்கும் குலத்தின் கொழுந்தே!

அவுணர் படை முதுமகர சல வட்டமுடன்
அபயமிட விற்படை கொடாயத்த மானவனும்

அன்று அமரரை மீட்டிட, அசுரரை வாட்டிட உன் ஒப்பற்ற வேற்படை, விற்படை கொண்டு நீ தாக்கிய பொழுது, கடலும் கலங்கி ஹோ ஹோவெனக் கதறியது. மகரமீன்கள் திரண்டு, கலைந்து மருண்டன. கடலுக்குள் ஒளிந்திருந்த சூரன் உடல் பிளந்தாய். அடங்காச் சினத்துடன் அசுரர் குலம் வேரறுத்தாய். அந்தத் தீயோ, பின்னால் தினைப்புனத்தில் தென்றலாய்த் தவழ்ந்தது!

அருணையில் இடைக்கழியில் உர கிரியில் புவியில்
அழகிய செருத்தணியில் வாழ் கற்பா கடவியில்
அறிவும் தத்துவமும் அபரிமிதவித்தைகளும்
அறியென இமைப்பொழுதில் வாழ்வித்த வேதியனும்

அன்று அருணையின் இந்தப் பாவியின் ஆவி காத்தாய். திருச்செங்கோட்டிலே, திருஇடைக்கழியிலே, கற்பகச் சோலைகள் அடர்ந்த தேவலோகம் போன்ற திருத்தணியிலே, கண்கொள்ளா எழிலுடன் தரிசனம் தந்தாய். என் ஞானக்கண் திறந்தாய். நீயே தத்துவமாகி நிலைப்பவன் என உணர்த்தினாய். கணக்கற்ற கலை நுணுக்கங்களை, யோக சாதனைகளை, சித்திகளை இந்தக் கடையேனும் கணப்பொழுதில் புரிந்து கொண்டு மரணமில்லாத வாழ்வு பெற வைத்து விட்ட வேலவா! வேதப் பொருளே!இந்தப் பாவிக்கே இத்தகைய நற்கதி என்றால் வள்ளி சன்மார்க்கம் சொல்லவும் வேண்டுமோ! வள்ளியம்மை இச்சா சக்தி. உன் பரம பக்தை. கணத்துக்குக் கணம் உனக்காக உருகி நின்றவளைக் காண ஓடோடி வந்தாயோ!

அரி பிரமருக்கு முதல் அரிய பரமற்கு உயரும்
அருமறை முடிப்பை உபதேசித்த தேசிகனும்

தினைப்புனம் காத்துக் கொண்டு கந்தனுக்காய்க் காத்திருந்தவளைக் காக்க வந்தவன் ஒரு சிறிய காவல் தெய்வம் இல்லை. அவனே தத்துவம். தத்துவ விளக்கம். அரியும் பிரமனும் அடிமுடி காண முடியாமல் அக்னி யாய் விஸ்வ௹பம் காட்டிய விஸ்வேஸ்ரருக்கு, வேதத்தின் சாரமும், சிகரமுமான ப்ரணவப் பொருள் சொன்ன ஸ்வாமிநாதன் . அந்த உயரத்திலிருந்து இரக்கத்தால் இறங்கி வருகிறான். தன்னிடமிருந்து பிரிந்து, கர்ம வினைப் பின்னல்களில் சிக்கி, சம்சாரக் காட்டிலே திக்குத் தெரியாமல் திரிகின்ற ஜீவன்கள் மேலேயே அவன் கவனம் இருக்கிறது. தேடி வருகின்றான். மறுபடி அந்த ஜீவனைத் தன்னுடன் சேர்த்துக் கொள்ளும் வரை பரமாத்மா ஓய்வதில்லை. இதைத் தான் வள்ளி தத்துவாய்க் காட்டி, இதமான உணர்வை, ஜீவர்களின் இதயத்தில் பதிக்கிறானோ ஜகத் ரட்சகன்!

அமலனும், எனக்கரசும் அதி குணனும் நிர்க்குணனும்
அகில புவனத்து அமர சேனைக்கு நாயகனும்

இவன் மாசு மருவற்ற பரிசுத்தன். பரம பவித்ரன். இந்தக் கந்தன் என் உடல், பொருள், ஆவிக்குச் சொந்தமான தலைவன். நற்குணங்களின் மொத்த வடிவம். தத்துவ நிலையில், சத்வ, ரஜஸ், தமஸ் என்ற த்ரி குணங்கள் கடந்த நிர்க்குணன். தேவசேனாபதியாய், அமரர் உலகம் மீட்டவன்.அகில லோகம் காப்பவன் தான், அபலைப் பெண்ணைக் காக்க வந்தான்.

அநுபவனும் அற்புதனும் அநு குணனும் அஷரனும்
அருமனம் ஒழிக்கும் அநுபூதிச் சுகோதயனும்

இந்த அருள்மயமான அறுமுகக் கடவுள் தான், நம் வினைக்கேற்ப இன்ப துன்பங்களை அனுபவிக்கக் காரணமாகிறான். அனுபவங்களே அவன் தான் என ஏற்கும் பொழுது சுமைகள் குறைகின்றன. பன்னிரு கருணை பொங்கும் விழிகளுடன், பன்னிரு காக்கும் கரங்களுடன் அற்புத வடிவம் எடுத்து வந்தவன். ப்ரபஞ்ச இயக்கம் இவன் கையில். குறைபடாத, அழியாத சத்தியமாய் நிலைப்பவன். நம் மனச் சலனங்கள் அடங்கிய நிலையில், இனிய அனுபவமாய், ஞானமயமாய், பாமானந்தமாய் நம் அகத்தில் நிறைபவன். அந்தப் பரமானந்த நிலை உணர்த்த வள்ளியைத் தேடி வந்த வள்ளல்.

இத மகிதம் விட்டுருகி இரவு பகலற்ற இடம்
எனதற இருக்கை புரி யோகபுராதனனும்

இந்த ஏழைக்கு எத்தகைய ஆன்மீக ஏற்றம் கொடுத்து விட்டான் அந்த வள்ளிநாயகன்! உலகின் இன்ப துன்பங்கள் எனும் உணர்வுகள் கடந்தேன். அவன் ஆட்கொண்டு விட்ட உணர்விலே, அந்தப் பேரன்பிலே உருகி நின்றேன். மறதியும் நினைப்பும் அற்றுப்போன த்யானத்திலும், சமாதி நிலையிலும் அமைந்தேன். இரவு பகல் அற்ற பரவெளியில் அல்லவா பறந்தேன். நான், எனது என்ற அகங்கார, மமகாரம் அற்ற சிவயோக நிலையில் இந்தப் பழைய அடிமையை நிறுத்திய ஆதி முதல்வா! வள்ளி எங்கே! நான் எங்கே! என்னையும் காக்க வந்த கருணைக் கடலே!

எனது மன சிற்பரம சுக மவுன கட்கமதை
யமன் முடி அணிக்க விதியா வைத்த பூபதியும்

என் மரண பயத்தை முழுதும் நீக்கி விட்ட மன்னன் அல்லவா நீ. உன்னையே நினைத்து உருகும் நிலையில் ஒரு பரம சுகம் உணர்ந்தேன். சொற்கள் கடந்த மவுன நிலை என்ற நிறைவு அது. வாள் போன்ற வலிமையான மெளனம் அது. தர்ம தேவனே எதிரில் வந்து நின்றாலும், அவனை அச்சமின்றி எதிர் கொண்டு, ஆ, ஊ என அலறித் துடிக்காமல், அரிய மெளனத்தில் ஆழ்ந்து, அவனை நேருக்கு நேர் நோக்க, "இவன் முருக பக்தன் அல்லவா, இவனை அசைக்க முடியுமா " என அவன் தடுமாறி, என் மெளனம் என்னும் வாளால் வெட்டுண்டு விழும் அளவுக்கு என்னைத் தேற்றிய தலைவா, முருகா வள்ளிநாயகனே! மன்னுயிரின் காவலனே!

எழுமையும், எனைத் தனது கழல் பரவு பத்தெனன
இனிது கவி ப்ரசாதித்த பாவலனும்

அணுவிலும் சிறிய ஜந்து, ஊர்வன, நீந்துவன, பறப்பன, நடப்பன என ஏழேழு பிறவிகளோ, எத்தனை பிறவிகளோ எடுத்து எடுத்து நான் இளைத்த போதும் நீ என்னைக் கைவிடவில்லை என்பது இந்த அரிய மனிதப் பிறவி எடுத்ததால் தெரிகிறது. இங்கும் என்னை உன் பழைய அடிமை ஆக்கினாய். பாவங்கள் போக்கினாய். தமிழ்ப் புலமையைப் பிரசாதமாகக் கொடுத்துப் ப்ரகாசிக்க வைத்தாய். உன் புகழை ஆயிரமாயிரம் கவிகளாய்ப் புனையும் ஆற்றல் கொடுத்தாய். வள்ளியின் காவலனே! என்னைப் பாட வைத்த பாவலனே!

இமையவர் முடித்தொகையும் வனசரர் பொருப்பும் எனது
இதயமும் மணக்கும் இரு பாதச் சரோருகனும்

உன் தாமரைப் பாதங்களின் நிழலுக்காக ஏங்குவோர் எத்தனை பேர் தங்கள் மணி முடியை உன் பாதத்தில் வைத்து வணங்கிக் களைப்பாறுகிறார்கள் தேவர்கள். நீயோ அந்த மென் மலர்ப் பாதங்கள் நோக பக்தர்களைத் தேடி வருகிறாய். தினைப்புனத்தில் திரிகிறாய். வேடர் அமைத்த பரணில் ஏறுகிறாய். என் இதயத்திலும் அந்தப் பாதங்கள் பதிந்து மணப்பது என் பாக்கியம் அல்லவா?

எழுதரிய கற்பதரு நிழலில் வளர் தத்தை தழு
விய கடக வஜ்ர அதிபாரப் புயா சலனும்

விளக்கம்: உன் தாள்களோ தண்மையோ தண்மை. ஆனால் கடகம் அணிந்த உன் தோள்களோ வஜ்ரம் போன்ற வலிமை. அன்று தேவர் படைத் தலைமை பொறுப்பெடுத்தாய். பொருப்புகள் பொடி பட்டன. அசுரர் அடிபட்டு அழிந்தனர். வெற்றி மாலைகள் குவிந்தன. தேவராஜன் தன் மகளையே அந்த வெற்றிக்குப் பரிசாகத் தந்து விட, அந்தக் கற்பகக் கனியாம், கற்பனைக் கெட்டாத பேரெழிற் பெண்ணரசி, தெய்வானையின் மணமாலை உன் தோளில் விழ, தேவ சேனாபதி தேவசேனா பதியான சுவையான சொந்தம் அது. முக்தி வாசல் திறக்கும் அந்தக் கிரியா சக்திக்கும் நீதானே காவலன்!

எதிரில் புலவர்க்கு உதவு வெளி முகடு முட்ட வளர்
இவுளி முகியைப் பொருத ராவுத்தனானவனும்

நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே என முழக்கிக் கன்னித் தமிழைக் கண்போல் காத்த, நிகரற்ற சங்கத் தமிழ்ப் புலவனாம் நக்கீDனன். கற்முகி என்ற பெண் பூதம் ஒரு மலைக்குகையில் அடைத்து வான் வரை வளர்ந்து நின்ற கோர ரூபத்துடன் காவலுக்கு இருந்த பொழுது, அவளுடன் போரிட்டு வென்று , நற்றமிழ்ப் புலவனையும் தமிழையும் காத்த வீரத்தின் விளை நிலமே வேலவா! அதற்கு நன்றியாக நக்கீரன் திருமுருகாற்றுப்படை இயற்றி, அறுபடை வீடுகளுக்கும் வழிகாட்டினான்.தமிழையும், பக்தரையும் கண் போல் காப்பவனே கந்தா.

எழு பரி ரதத்திரவி எழு நிலமொடக்கரிகள்
இடர்பட முழக்கி எழு சேவற் பதாகையனும்

உன் வீர விளையாட்டுக்கள் கொஞ்சமா நஞ்சமா, வேலவா! புரவி போல் பறக்கும் உன் மயில் ஏறி, நீ போர்க்களம் புகும் பொழுது, உன் சேவல் கொடி உயரப் பறந்து, தன் கூக்குரலையே வெற்றி முழக்கமாக்கிக் கூவும் பொழுது, ஏழு பரிகள் பூட்டிய ரதத்தில் பவனி வரும் சூரியன் மருண்டு மறைய, ஏழுலகங்களும், எட்டுத் திக்கின் காவல் களிறுகளும் அரண்டு புரண்டிடும். இயற்கையின் கதியே இது என்றால் பகைவரின் கதி அதோகதிதான். ஆனால் மருண்ட மான் போன்ற வள்ளியிடம் நீ தோற்றாயோ? தோற்றது போல் வென்றாயோ? பக்தர் இருக்கும் இடம் தேடி வந்து விளையாடும் தேவா!

இணையிலியும் நிர்ப்பயனும் மலமிலியும் நிஷ் களனும்
இளையவனும் வி ப்ரகுல யாகச் சபாபதியும்

கருணையில், கலைகளில், கவினுருவில், எளிமையில், வீரத்தில், தீரத்தில் உனக்கு இணையாக யாரையும் சொல்ல முடியுமோ, செந்தில் நாதா! பகைவர்கள் உன்னைப் பார்த்து பார்த்து நடுங்கிக் கொண்டிருக்கு உனக்கு மட்டும் அச்சம் என்பதே இல்லையே ஆறுமுகா! காமம், குரோதம் போன்றவற்றால் மாசுபடாத தூயவா! தததுவமாய் ஜொலிக்கும் பொழுது ஸ்வரூபம் என்ற அலங்காரங்கள் இல்லாமல் பரம்பொருளாய் வியாபித்து நிற்கிறாய். மூப்பே இல்லாத முத்துக்குமரா! இளமையின் புத்துணர்வுடன் என்றும் எங்களைக் காக்கின்றாய். அந்தணர்கள் செய்யும் யாகங்களுக்கு எந்தத் தடையும் வராமல் கண்ணும் கருத்துமாய்க் காக்கின்றாய். துணையாகக் காவல் செய்வது தான் உன் தலையாய கடமையோ, கானக வள்ளியின் காவலா!

மதுகையொடு சக்ரகிரி முதுகு நெளியப் புவியை
வளைய வரும் விக்ரம கலாப சிகாவலனும்

பக்தர்களைக் காக்கத் துடிக்கும் உன் கருத்தினைப் புரிந்து கொண்டு, உன் கருணையின் வேகத்தைத் தன் வேகமாக்கிக் கொண்டு, புவியைச் சூழ்ந்திருக்கும் சக்ரவாளகிரியின் பக்கங்களையே தகர்த்து அசைத்து விடுவது போல் புயலாய் வரும் வண்ணத்தோகை மயில் மேல் பவனி வரும் பேரரசே. முருகா என அழைத்து முடிப்பதற்குள் துன்பம் துடைத்து விடும் அழகா. உன் காவல் இருக்க எவருக்கும் கலக்கம் உண்டோ, வன நாட்டார் வள்ளி நாயகா!

வலிய நிகளத்தினொடு மறுகு சிறை பட்டொழிய
வனஜமுனியைச் சிறிது கோபித்த காவலனே

தாமரை மலரில் அமர்ந்து கரங்களில் வேதங்களை வைத்துக் கொண்டு, வேதன் என்ற பெயரில் விளங்கும் ப்ரம்மனுக்கே ப்ரணவப் பொருள் தெரியவில்லை என்றதும் சினந்து, அவன் கரங்களுக்கு வலிய விலங்கிட்டு, சிறிது காலம் சிறையிலிட்டுப் பின் விடுவித்தாய். அவரவர் பணியை அனைவரும் செவ்வனே செய்ய வேண்டுமென அப்படி வலியுறுத்தினாயோ செவ்வேளே. கடமை வீரனே, எம் காவலா!

வருசுரர் மதிக்க ஒரு குருகு பெயர் பெற்ற கன
வட சிகரி பட்டுருவ வேல் தொட்ட சேவகனும்

தேவரைக் கூட்டமாயச் சிறை எடுத்து, ஆணவ அசுரர்கள் ஆட்டம் பொழுது அமரரைக் காக்க வந்தாய். கிரவுஞ்சம் என்ற பட்சியின் பெயர் கொண்ட பொன்மலை தடையாய் எதிரே எழும்பி நின்றது. நீ உன் வேல் எடுத்து எறிந்து அந்த மலையைத் தொட்டாய். அவ்வளவுதான். கிரவுஞ்சம் பொலபொலத்தது. அசுரர் வெலவெலத்தனர். விடுதலை அடைந்த விண்ணோர் களிப்பிலே கலகலத்தனர். உன் காவலைத் தாண்டி எந்தப் பகைதான் பக்தரை நெருங்க முடியும்? கொஞ்சும் கிளியின் காவலனே குமரா!

வரதனும் அநுக்ரகனும் நிருதர் குல நிஷ்டூரனும்
மநுபவன சித்தனும் தோதுக்க பேதனனும்

கேட்ட வரங்கள் கொடுத்து விடுகின்றாய் முருகா. உன் அருள் பெருக்கிலே நனைத்து விடுகின்றாய். மாசு படிந்த அசுரரை தூசு போல் துடைத்து எறிகின்றாய். எம்மைச் சுற்றிக் கட்டும்வேத மந்திரங்களால் காவல் கோட்டை அமைத்து , யோக சித்திகள் பெற வழி செய்து விடுகின்றாய். வினைகள் எம்மைச் சுற்றிக் கட்டும் துன்பக் கோட்டைகளைத் தகர்த்து விடுகின்றாய். எங்களுக்கு வேறென்ன வேண்டும் வேலவா.

வயிரிசை முழக்கமிகு மழைதவழ் குறிச்சிதொறும்
மகிழ்குரவை யுட்டிரியும் வேடிக்கை வேடுவனும்

ஊது கொம்புகளின் ஒலி நிறைந்துள்ளதும் சாரல் படிந்ததுமான களிப்புடன் கொண்டாடப்படும் குரவைக் கூட்டங்களில் கலந்து கொண்டு அருள் புரியும் வேடிக்கை வேடுவனும்

மரகதம ணிப்பணியின் அணிதழை உடுத்துலவும்
வனசரர் கொடிச்சிதனை யாசிக்கும் யாசகனும்

பச்சை மணி போன்ற ஆபரணங்களுடன் அழகிய இலைகளை உடையாய் உடுத்தி உலாவுகின்ற வேடுவச் சிறுமியாகிய என்னை மணம் செய்து கொள்' என்று விடாமல் யாசித்துக் கொண்டிருப்பவனும் (வேடிச்சி காவலனே).

மதனன்விடு புட்பசர படலமுடல் அத்தனையும்
மடலெழுதி நிற்குமதி மோகத் தபோதனனும்

மன்மதன் செலுத்திய மலர் பாணங்களின் தொகுதி தனது உடல் முழுதும் பாய்ந்து புண்படுத்தி இருக்கும் நிலையை படத்தில் வரைந்து காட்டும் அதிக தெய்வீகக் காதல் மிக்க தவசீலனும்

வரிசிலை மலைக்குறவர் பரவிய புனத்திதணின்
மயிலென இருக்குமொரு வேடிச்சி காவலனே.

வரிந்து கட்டப்பட்ட வில் உடைய வேடுவர்கள் பூஜை போட்டு வழிபடும் தினை புனத்து பரணி மீதில் மயில் போன்ற கவர்ச்சியுடன் அழகுடன் அமர்ந்திருக்கும் ஒப்பற்ற வள்ளி நாச்சியாருக்கு பொழுது போக்குபவனாய் காவல் காத்த அந்த ஷண்முக தெய்வம்தான்.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே