மூல மந்திரம் — பதவுரை

By Mrs Devaki Iyer, Pune

For a translation of this song in English, click the link moolamanthiram

மூலமந்திரம் வேதத்தின் மூலமான மூலமந்திரமான சிவ பஞ்சாக்ஷரமோ, முருகனின் ஷடாக்ஷரத்தையோ
ஓதல் இங்கு இலை நியமமாக செபிக்கும் பழக்கம் என்னிடம் இல்லை
ஈவது இங்கு இலை பிறருக்கு, தேவை என்று வருபவர்க்குக் கொடுக்கும் பழக்கமும் இல்லை
நேயம் இங்கிலை உன்னிடம் மாறாத அன்பு ( அல்லது எவரிடத்தும் அன்பு செய்யும் பாங்கு) என்னிடத்தில் இல்லை
மோனம் இங்கு இலை மனம் அடங்கியதன் அடையாளமான மௌனம் (மனன சீலம்) என்னிடம் இல்லை
ஞானம் இங்கு இலை (ஞானத்தின் வெளிப்பாடான மேற்சொன்ன எதுவும் இல்லை ஆதலால்) மெய் உணர்வு இல்லவே இல்லை என்பது வெளிப்படை
(என்ன உள்ளது என்றால்)
மடவார்கள் மோகம் உண்டு தணியாத பெண் ஆசை இருக்கிறது
அதி தாகம் உண்டு இது வேண்டும் அது வேண்டும் என்று அதிக உலக இச்சைகள் இருக்கிறது
அபசாரம் உண்டு தீய வழிகளைப் பின்பற்றுவது இருக்கிறது
அபராதம் முண்டிடு குற்றங்கள்/ பாபங்கள் மிகுந்த
மூகன் என்று ஒரு பேரும் உண்டுமூர்க்கன் என்கிற 'நற்' பெயர் இருக்கிறது.
அருள் பயிலாத உன் அருளைப் பெறுவதற்கான வழிகள் எதையும் கற்காத
கோலமும் நிலைமையும்
குண ஈன நல்ல குணம் ஏதும் இல்லாத
துன்பர்கள் துன்பம் தரக்கூடியவர்கள்
வார்மையும் சேர்க்கையும்
பலவாகி வெந்து எழு பலவிதமான துன்பங்கள்தர என்று ஏற்படுத்தப்பட்ட
கோர கும்பியிலே பயங்கரமான நரகங்களில்
விழுந்திட நினைவாகி சென்று விழுவதற்குரிய செயல்களையே நினைத்து
கூடு கொண்டு மனிதருக்குரிய அறிவு, குணம் இவை இல்லாத வெற்றுக்கூடு போன்ற இந்த உடலைச் சுமந்துகொண்டு
உழல்வேனை திரிகின்ற என்னை
அன்பொடு கருணை கூர்ந்து
ஞான நெஞ்சினர் ஞானம் அடைந்த மனத்தவர்கள்
பால் இணங்கிடும் இடம் சேரும்படியான
கூர்மை தந்து இனி அறிவுக்கூர்மை இனிமேலாவது கொடுத்து
ஆள வந்து எனை அடிமையாக்கிக் கொள்ள வந்து
அருள் புரிவாயே அருள் செய் (முருகா)
பீலி வெந்து (அமணத் தலைவர்கள் கையில் பிடித்திருந்த) மயில் பீலி பொசுங்கி
உயர் ஆலி வெந்து ஆலிலையும் எரிந்து
அவ் அசோகு வெந்து அசோகமரக் கொம்பும் எரிந்து
அமணர் மூகர் அந்த அமணர்களாகிய மூர்க்கர்கள்
நெஞ்சிடை பீதி கொண்டிட மனதில் பயம் அடையும் படி
வாது கொண்டு அருள் அவர்களோடு அனல் வாதம் புனல் வாதம் செய்து அருளி
எழுது ஏடு சைவ மந்திரம் எழுதிய ஏடானது
பேணி அங்கு பாதுகாப்பாக
எதிர் ஆறு சென்றிட ஆற்றின் ஓட்டத்தை எதிர்த்து நீந்திச் செல்ல
மாறனும் பிணி தீர பாண்டிய மன்னனுக்கு வந்த சுரநோயோடு அவன் முதுகு கூனும் சரியாகிவிட
வஞ்சகர் வஞ்சனை எண்ணம் கொண்ட (ஞான சம்பந்தரைக் கொல்லத்துணிந்த) சமணர்கள்
பீறு வெங்கழு ஏற கொடிய கழு மரத்தில் தாமே ஏறும்படி
வென்றிடு முருகோனே வாதில் வென்ற ஞான சம்பந்தராய் வந்து அவதரித்த முருகப்பெருமானே
ஆலம் உண்டவர் கடலிலிருந்து வந்த நஞ்சை உண்டவரும்
சோதி அங்கணர் நெருப்பை உமிழ் அழகிய நெற்றிக்கண்ணை உடையவர்
பாகம் ஒன்றிய ஆன சிவபெருமானின் இடப்பாகத்தில் சேர்ந்திருக்கும்
வாலை அந்தரி இளமையும் அழகும் உள்ள
ஆதி அந்தமுமான இவ்வுலக னைத்தும் தோன்றுவதற்கும் முடிவதற்கும் இடமான
சங்கரி சங்கரரின் துணைவியான உமாதேவியின்
குமரேசா புதல்வனே
ஆரணம் பயில் வேதங்கள் ஓதும் (வேதத்தால் அறியப்படும்)
ஞான புங்கவ அறிவில் சிறந்தவனே
சேவல் அம் கொடி அழகான சேவல் கொடி
ஆன பைங்கர தரித்த அழகிய கை உடையவனே
ஆவினன் குடி வாழ்வு கொண்டு ஆவினன்குடி எனும் தலத்தில் வந்து வாழ்ந்து
அருள் பெருமாளே அருள் புரியும் பெருமானே.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே