சைவ சித்தாந்தம் பகுதி 3 : பதியின் இயல்பு

இறைவனின் இயல்பு

என்றும் எக்காலத்தும் விளங்கிக் கொண்டும், நிலையானதாகவும், எல்லா அண்டங்களையும் பொருள்களையும் உயிர்களையும் படைத்து தன் அருளால் இயக்கிக் கொண்டும் இருப்பவர் இறைவன். அந்த ஒப்பற்ற உயர்ந்த இறைவனை சொல்லாலும் பொருளாலும் மனித அறிவாலும் கருவிகளாலும் அளக்கவோ கணக்கிடவோ முடியாது. அந்த பரம்பொருள் எல்லா ஆன்மாக்களிலும் உள் ஒளியாக இயங்கிக் கொண்டுள்ளது. சிருஷ்டி முழுவதிலும் ஊடுருவி நின்றும், அதே நேரம் அனைத்துக்கும் அப்பால் காலமற்று நிற்கும் பிரக்ஞையாக செயல் படுகிறது.

சைவ சித்தாந்தம் எவ்வித மாற்றமும் அடையாமல், என்றும் ஒரு தன்மை உடையதாய் நிற்கும் பொருளான சத்தாய் நிற்பதையே இறைவனின் உண்மை இயல்பு என்று கூறுகிறது. அறிவுடைப் பொருள் 'சித்து' என்றும், அறிவில்லா பொருள் 'அசித்து' என்றும் சொல்லப் பெறும். உலகம் தோன்றுவதற்குக் காரணம் மாறாத இருப்புடன், தோற்றமும் மறைவும் அற்ற அனந்தமாக, ஆகாசம் போல் சர்வ வியாபகமாக, எங்கும் நீக்கமற நிறைந்து இருப்பது ஸத்/சத்து தான்.

சத் தன்னுள் சித் அல்லது பிரக்ஞை என்னும் அறிவுப் பொருளை கொண்டது. இதை 'ஆதி - அந்தம்' இல்லாத ஒரு அருட்பெருஞ்சோதி என்கிறார் ராமலிங்க வள்ளலார். 'சத்' தன்மையும் 'சித்' தன்மையும் சேர்ந்த தன்மைகளை உணரும் தருணம் தான் ஆனந்தம். சத், சித் 'பரம்பொருள்' ஆக இணைந்திருப்பதை உணருவதே சச்சிதானந்தம். இதுவே இறைவனின் மூல சொரூபம்; ஆகாயம் போல் எங்கும் பரந்து ஒன்றாயிருக்கும் தன்மை. இது நிர்குணப்ரம்மம் எனப்படுகிறது. இந்த சொரூப இயற்கை நிலையில் இறைவன் எவ்வித குணங்களும் அற்றவராக உருவமும் அற்றவராக எங்கும் நிறைந்திருக்கின்ற இயல்பு சொரூபம் கொண்டவர். நெருப்பிற்கு வெம்மை தன்மையும் பிரகாச தன்மையும் எப்படி சொரூபமாக இயல்பாக இருக்கின்றதோ அதைப் போல இறைவனின் சொரூபம் சத் சித் ஆனந்தம் (eternal cosmic mind immersed in bliss). பிரம்மம் சச்சிதானந்தமாகிய சொரூபம் அல்லது நிர்க்குண நிலையில் அனைத்து ஆளுமைகளையும் கொண்டும் எத்தொழிலும் செய்யாது ஆளுமையற்று இருக்கிறது.

"தனியே சிவபெருமானைப் பற்றிக் கருதினால் : அவர் உருவம், அருவுருவம், அருவம் எனும் வடிவங்கள் அற்றவர். அறிவுள்ள பொருட்களாகவும் அறிவற்ற பொருட்களாகவும் உள்ள எந்த உலகப்பொருட்களாகவும் இல்லை. படைப்பு முதலான தொழில்களைத் தானே செய்பவனாகவும் இல்லை. தவம், யோகம், போகம் ஆகிய எதனையும் அவர் மேற்கொள்வதில்லை. இவை அவரோடு பொருந்தினாலும், அவர் பற்றப்படுவதில்லை" என்பதே சைவசித்தாந்த சாத்திர நூலாகிய சிவஞானசித்தியார் இறைவனின் சொரூப இயல்புக்கு தரும் இலக்கணம்.

எண்ணற்ற சக்திகளை உடைய சிவம் சக்திகள் வெளிப்பட்ட நிலையில் உருவமாக ஈஸ்வரனாக காட்சி அளிக்கின்றார். இந்த நிலை எல்லாவற்றிலும் கலந்த தடஸ்தம் அல்லது இயற்கையோடு இயைந்து நிற்கும் சகுண நிலை. "சும்மா" இருக்கும் நிர்க்குண சிவப்பரம்பொருள் தடத்தநிலையில் எண்குணனாக, ஐந்தொழில்கள் பண்ணும் ஈஸ்வரனாக பரிணமிக்கிறார்.

சிவபெருமானின் எண்குணங்கள்

  1. தன்வயத்தனாதல் - சுதந்திரம் உடையவனாக இருத்தல். அதாவது பிறர் வயப்பட்டு தொழிற்படாது, அனைத்திலும் சுதந்திரம் உடையவன்.
  2. தூய உடம்புடைமை - தூய உடம்பு என்றால், உடலிலிருந்து வெளியேரும் மலம் தனக்கும் பிறருக்கும் தீங்கு விளைவிக்காமல் இருக்கும் உடல் என்று அர்த்தம். இப்படிப்பட்டது, இத்தகையது என்ற வர்ணனைகளுக்குள் அடங்காத அருளையே தனது உடலாகக் கொண்டிருப்பவன். அருளே அவனது திருமேனி.
  3. அளவிலா ஆற்றல் உடையவன் - அறிவித்தாலன்றித் தாமே அறியமாட்டாத உயிர்களையும் அசைவித்தாலன்றி தாமே அசையமாட்டாத பிரபஞ்சங்களையும் ஏககாலத்தில் அறிவித்து, அசைவித்து அனைத்தையும் ஆளுகின்ற ஆற்றல். எச்செயலையும் எக்காலத்திலும் செய்ய வல்லமை உடைவனாக இருத்தல்.
  4. இயல்பாகவே பாசங்களில் இருந்து நீங்கியவன் - இறைவன் இயல்பாகவே ஆணவம், கன்மம், மாயை என்னும் பாசத்தில் இருந்து விலகி; தூய்மையானவனாக இருப்பவன்.
  5. பேரருள் உடையவன் - ஆன்மாக்கள் தங்களைப் பிடித்துள்ள ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களாகிய பாசங்களை நீக்கி பேரின்பம் அனுபவிக்கச் செய்வது இறைவனின் பேரருள். உயிர்களுக்கு பிறவிகள் தந்து, வினைகளைப் போக்கி, ஆன்மாவை மெதுவாக பக்குவப்படச்செய்து, பாசங்களிலிருந்து நீக்கி விடுவித்து முக்தி வழங்குகிறார்.
  6. இயற்கை உணர்வினன் - ஆன்மா கருவி கரணங்களின் துணையினால் அறிவிக்க அறிவது (ஐம்புலன்களின் துணையோடும் ஐம்பொறிகளின் மூலம் அறிந்து கொள்வது). ஆனால் இறைவன் தன்னியல்பால் அறிவுடையவானாக விளங்குதல். அனைத்தையும் இயல்பாகவே தானே அறியும் தன்மை உடையவன்.
  7. முற்றுணர்வினன் - ஏக காலத்தில் அனைத்தையும் உணருகின்ற முற்றறிவு உடையவன். அதாவது ஒவ்வொரு பொருளையும் ஒவ்வொன்றாக அறியாமல் எல்லாப் பொருள்களையும் ஒரே நேரத்தில் அறிதல்.
  8. வரம்பிலா இன்பம் உடையவன் / அளவிலா ஆனந்தம் உடையன் - பேரின்பம் உடையனாக யாதொரு குறையும் இல்லாதவன்.
  • தன்வயத்தனாதல், தூய உடம்புடைமை, முடிவிலா ஆற்றல் உடைமை, இயல்பாகவே பாசங்களில் இருந்து நீங்கிய தன்மை ஆகிய நான்கும் இறைவனின் சத்து தன்மைக்குள் அடங்கும்.
  • முற்றுணர்வு உடைமை, பேரருள் உடைமை, இயற்கை உணர்வுடமை ஆகிய மூன்றும் சித்து தன்மைக்குள் அடங்கும்.
  • வரம்பிலா இன்பம் உடைமை ஆனந்தத்தன்மைக்குள் அடங்கும்.

சொற்பதம் கடந்த சொரூபநிலையில் (potential state/நிலை சக்தி) உள்ள சிவபெருமான் தனது எண்குணங்களில் ஒன்றாகிய பேரருள்/பெருங்கருண உடைமையால் தடத்தநிலைகளை (dynamic state/இயங்கு சக்தி) பூணுகின்றார்.

தடத்தநிலையில் மூவகை வடிவம்

அருவம், அருவுருவம், உருவம் என்னும் மூவகை வடிவம் தாங்குதல்.
  1. அருவம் = கண்ணிற்கு புலனாகாது ஞானசக்தியுடன் மட்டுமே பொருந்தியிருந்து அருவ வடிவம் தாங்கி காரியங்களை செய்வது.
  2. அருவுருவம் = ஞானசக்தியையும் கிரியாசக்தியையும் சம அளவில் கொள்வதன் மூலம் பூணுகின்ற வடிவம். ஒருமுறை புலனாகியும், புலனாகாமலும் இருப்பது இவ்வடிவமாகும். புலனாகும்போது முகம், கை, கால் போன்ற உறுப்புக்கள் ஏதுமின்றி காட்சியளிப்பது. ஒளி, இலிங்கம் ஆகியன அருவுருவத் திருவடிவங்களாகும்.
  3. உருவம் = ஞானசக்தியைவிட கிரியாசக்தியை மிகுவித்து, அதன்மூலம் கண்களுக்கு புலனாகும் வகையில் முகம், கை, கால் போன்ற உறுப்புகளுடன் தெளிவாகத் தோன்றுவது உருவத் திருவடிவமாகும்.

ஐந்தொழில் ஆற்றுதல்

சிவபெருமானின் ஐந்து முகங்களான சத்யோ ஜாதம், வாமதேவம், அகோரம், தற்புருடம், ஈசானம் ஆகியவை படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் (ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம், திரோதானம், அநுக்ரஹம்) ஆகியவற்றை செய்வதாக சைவ நூல்கள் கூறுகின்றன. சிவபெருமான் நான்முகன், திருமால், ருத்ரன், மகேசுவரன், சதாசிவன் என்று ஐந்து திருவடிவங்களை எய்திப் பல உலகங்களையும் அவ்வுலகங்களில் உள்ள உயிர்களையும் இயக்குகிறான்.

திரோதானம் என்றால் மறைப்பது. நம்முடைய நிஜ ஸ்வரூபமேயான ஆத்ம ஸ்வரூபத்தை மறைத்து, ஜீவ-ஜகத்துக்களை உண்டாக்கி ஸ்ருஷ்டி-ஸ்திதி-லயத்துக்கு இடம் கொடுக்கிற கார்யத்தைச் செய்யும் மாயையே திரோதானம்.

அருளல் என்பது கர்ம வினைகளினால் ப்ரபஞ்சத்தில் உழலும் உயிர்களுக்கு தன்னுடைய பூர்வகர்மாவைத் தீர்த்துக் கொள்வதற்காக தநு-கரணம்-புவனம்-போகம் (உடம்பு, இந்திரியம், ஜகத் என்ற ஒரு வாழுமிடம், உயிர் வாழும் பொருட்டு அவசியமான போகங்கள்) படைத்து விட்டு, பக்குவப்பட்ட ஆன்மாக்களுக்கு ஸம்ஸாரத்திலிருந்து கடைத்தேற்றி மோக்ஷத்தை அளிப்பது.

சைவ சித்தாந்தம் கூறும் அத்துவிதம் : ஒன்றாய் வேறாய் உடனாய் நிற்றல்

இறைவன் உலகிற்கு மூன்று விதக் காரணங்களாகவும் உள்ளான். இறை பொருள் உலகிற்கு முதற்காரணமாக இருந்து பின் அது காரியப் பொருளாக மாறுகிறது. உயிர் உலகோடு கலப்பினால் ஒன்றாயும், பொருள் தன்மையினால் வேறாயும், இயங்கும் பொருட்டு உடனாயும் நின்று சேதன அசேதனப் பிரபஞ்சங்களைச் சிவன் தோற்றுவிக்கின்றான் என சைவசித்தாந்தம் உரைக்கிறது. இதனை உமாபதி சிவம் பின்வருமாறு குறிக்கின்றார்: "உடலில் உயிர் போலக் கலப்பினால் ஒன்றாயும், கண்ணில் அருக்கன் போலப் பொருள் தன்மையில் வேறாயும், ஆன்ம போதமும் கண்ணொளியும் போல உயிர்க்கு உயிராதல் தன்மையால் உடனாயும் இவ்வாறு இருபொருள் பிரிப்பின்றி உடனாய் நிற்றல்.”
  • ஒன்றாய் — இறைவன் எல்லா உயிர்களிடத்திலும் வேற்றுமையின்றிக் கலந்து அவ்வுயிர்களேயாகி நிற்கிறான். உயிரின் கலப்பு இல்லாமல் உடல் தனித்து நிற்றல் இயலாது. உயிரற்ற உடலால் அத்தனை உறுப்புகள் இருந்தும் இயங்க இயலாது. கடல் வெளி நீர்ப் பரப்பைத் தன்னுள் அடங்கக் கொண்டுள்ளது போல் இறைவன் தன்னுள் அடங்கி நிற்கும் உயிர்களோடு உடன் கலந்து பிரிப்பின்றி அத்துவிதம் அல்லது அத்வைதமாக நிற்கின்றான். இருந்தும் சீவனும் சிவமும் ஒன்றென்னும் கூற்றைச் சைவம் மறுக்கின்றது. முக்தனான ஆத்மா சிவமாகும் தன்மை பெற்று அவ்வனுபூதியைத் துய்க்குமே அன்றிச் சிவத்தைப் போல ஐந்தொழில் நடத்துவது இல்லை.
  • வேறாய் — பொருள் தன்மையினால் அவற்றின் வேறாகி நிற்பான். உலகப் பொருள்களில் இறைவன் வேறாய் நின்று அவற்றை இயக்குபவனாகி நிற்கிறான்.
    வேறாய் என்பது ஒளி காணும் கண்ணுக்கு ஒளி காட்டும் சூரியன் வேறாயிருந்து உதவுவது போல் இறைவன் வேறாயிருந்து அருள்புரியும் நிலை. சூரிய ஒளி தன் ஒளியை யாவருக்கும் கொடுத்து, எல்லா பொருட்களையும் கண்ணுக்கு காண வைக்கிறது.
  • உடனாய் — உடனாதல் என்பது உயிர் ஒன்றை அறியும் பொழுது இறைவனும் அதனோடு உடன் சென்று அறிதலாகும். கண்ணொளி பொருளைக் காண்பதற்கு உயிரறிவும் உடன் நின்று காணல் வேண்டும். இறைவன் வேறாய் நின்று உணர்த்துவதனால் பொருளை அறியும் தகுதியை அடைந்த உயிருக்கு அதற்கு பின்னும் இறைவனது உதவி வேண்டும். இறைவன் உடனிருந்து அறிவிக்கவில்லை என்றால் உயிர்களும் அறிய மாட்டா.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே