மும்மலங்கள்
மும்மலங்கள் என்றால் என்ன?
சைவ சித்தாந்தத்தின்படி இறைவனைச் சென்றடைவதே உயிர்களின் நோக்கம். ஆயினும் உயிர்கள் இறைவனைச் சேரவிடாமல் அவற்றின் அறிவை அறிவற்ற சடப்பொருள்களான ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்கள் மறைத்துக் கொண்டிருக்கின்றன. இதனால் ஏற்படுகின்ற அறியாமையே உயிர்களின் துன்பங்களுக்குக் காரணம் என்பது சைவ சித்தாந்தக் கருத்து. உயிர்களை மலங்களின் பிணைப்பிலிருந்து விடுவித்துத் தன்னுடன் சேர்த்துக்கொள்ள இறைவனின் அருள் வேண்டும்.
- ஆணவம் : மலங்களுள் முதன்மையானது மூல மலம் எனப்படும் ஆணவ மலம். ஆணவம் உயிரின் அறிவை முற்றாக மறைத்து அவற்றின் அறிவைக் கீழ் நிலைக்குக் கொண்டு செல்கிறது.
- கன்மம் : செய்யும் கன்மம் /வினை நல்வினை அல்லது தீவினை எதுவாக இருந்தாலும் அவற்றுக்குரிய பலனை உயிர்கள் அடைந்தே தீரும்; பலன்களை நுகர்வதற்காக உயிர்கள் மீண்டும் மீண்டும் பிறக்கும்.
வினைகளிலும் மூன்று வகை உண்டு.- பழவினை (சஞ்சிதம்) : முன்னைய பிறவிகளில் செய்த வினைகளுக்கான பலன்களாகும்.
- நுகர்வினை (பிராரத்தம்)
- ஏறுவினை (ஆகாமியம்)
- மாயை : ஒரு சிறு விதை எவ்வாறு பெரும் மரங்கள் உருவாவதற்குக் காரணமாக அமைகின்றதோ அது போலவே மிக நுண்ணியதான இந்தப் மாயையும் பெரும் அண்டத்தின் உற்பத்திக்குக் காரணமாக அமைகின்றது. மாயை என்பது உயிர்களின் நுகர்ச்சிக்குத் தேவையானவற்றைப் படைத்துக் கொடுப்பதற்காக உள்ளது. இது ஒரு மலம் என்றவகையில் உயிர்களுக்குப் பகையாகக் கருதப்பட்டாலும், ஆணவ மலத்தின் பீடிப்பினால் முழுதுமாக மறைக்கப்பட்டுள்ள அறிவைச் சிறிதளவு வெளிப்படுத்த மாயை உதவும். சூரியன் இல்லாத இருட்டில் வழிகாட்டும் சிறிய விளக்கின் ஜ்வாலையை இதற்கு உவமையாகக் கூறுகின்றன சித்தாந்த நூல்கள்.
நெருப்பு விறகில் மறைந்து அப்பொருளாகவே நிற்குமன்றி வெளிப்பட நில்லாது. அது அதுவாய் நிற்றல் அதன் இயல்பு. நெருப்பினைப் போன்றது உயிர். தான் சார்ந்த பொருளோடு ஒன்றித் தான் என்பது தோன்றாது அப்பொருளாகவே நிற்பது உயிரின் இயல்பு. அத்தகைய உயிரை ஆணவ மலம் தன்னுள் பொதிந்து கொண்டு, தன்னை மறைத்து நிற்கும். ஆணவமாகிய இருளில் நிற்கின்ற உயிர் மாயையின் காரியமாகிய உடம்பை விளக்காகக் கொண்டு பொருள்களை அறியும். அவ்விளக்கு இல்லாவிடின் அஃது அறியாமை உடையதாகவே இருக்கும்.
கன்மத்தினாலேயே கருவிகள் செயற்படுவதால், மாயையைப் போன்றே கன்மமும் அறிவை விளக்கும்.
இருள் செறிந்த அறையில் உள்ள ஒருவனது கண் இருள் வயப்பட்டு இருளில் மூழ்கி ஒன்றையும் அறியமாட்டாது நிற்றலைப் போன்றது கேவல நிலை. கேவல நிலையில் மாயையின் செயற்பாடு இன்மையால் ஆணவம் தனது மறைத்தல் தொழிலை முழுமையாகத் தடையின்றிச் செய்கிறது. அதனால் உயிர் தனது அறிவை முற்றிலும் இழந்து சட்பபொருள் போலவே கிடக்கிறது.
அவ்விருட்டு அறையில் கை விளக்கு ஒன்றை ஏற்றி வைத்தால் அதன் ஒளியில் அங்குள்ள பொருள்கள் ஓரளவு புலப்பட்டுத் தோன்றுதலைப் போன்றது சகல நிலை எனலாம். விளக்கொளியில் அறையிலுள்ள பொருள்கள் உள்ளவாறு புலப்படுவதில்லை. ஒரு மூலையில் வளைந்து கிடக்கின்ற கயிறு பாம்பாகத் தோன்றுதல் கூடும். இவ்வாறு பொருளியல்பு மாறுபட்டுத் தோன்றுவதற்கு விளக்கொளி காரணமாகாது. விளக்கொளி எப்பொழுதும் பொருள்களை விளக்கிக் காட்டுமேயன்றி வேறுபடுத்திக் காட்டாது. பொருள்கள் வேறுபட்டுத் தோன்றுதல் இருளினால் விளைவதேயாகும்.
இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால், கேவல நிலையில் உயிரை முற்றிலுமாக மறைத்து நின்ற ஆணவ மலமாகிய இருள், சகல நிலையில் விளக்கொளி போன்றதாகிய மாயையின் சார்பினால் இழிந்த பொருளை உயர்ந்த பொருள் போலவும், துன்பப் பொருளை இன்பப் பொருள் போலவும் மாறித் தோன்றும்படியாகச் செய்கிறது.
ஆணவ இருளும், திருவருள் ஒளியும்
ஆணவம் அறிவை மறைக்கின்ற அக இருள். உயிரிடத்து இறைவனும் அவனுக்கு எதிராகிய ஆணவ மலமும் ஒரே நேரத்தில் இருக்கின்றன. ஒளியும் அதற்கு எதிரான இருளும் ஓரிடத்தில் தான் உள்ளன. ஒன்று மேலிடும் போது மற்றொன்று மடங்கி நிற்கும். அதுபோலத் திருவருள் ஒளியும், ஆணவமாகிய இருளும் உயிரிடத்திலேயே உள்ளன. உயிர் தன் பக்குவக் குறைவினால் தன்னிடத்தே உள்ள திருவருள் ஒளியை உணராமல் ஆணவமலத்தையே பற்றி நின்று எல்லா வகைத் துன்பங்களையும் அனுபவிக்கிறது. உயிர் பக்குவம் பெற்ற காலத்தில் அஞ்ஞானமாகிய இருள் மறைந்து மெய்ஞ்ஞானமாகிய திருவருள் மேற்படும்.
Comments
Post a Comment