பன்னிரு சைவம் மற்றும் முருகவேள் திருமுறைகள்

சைவத் திருமுறைகள்

பன்னிரு திருமுறைகள் தமிழ் சைவ சமயத்தின் அடிப்படை நூல்கள். இவை பல்லவர் காலத்திலும் அதன் பின்னரும் தோன்றிய சைவ சமய நூல்களின் தொகுப்பாகும். 10 ஆம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனின் ஆட்சியின்போது இவற்றை தொகுத்தவர் திருநாரையூரில் பிறந்த நம்பியாண்டார் நம்பி. இவர் மன்னனின் வேண்டுகோளின் பேரில் சிதம்பரம் கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த தேவாரங்களையும், வேறுபல சமய இலக்கியங்களையும் பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை பதினொரு திருமுறைகளாகத் தொகுத்தார்.

நம்பியாண்டார் நம்பி திருஞானசம்பந்தரால் பாடப்பட்ட தேவாரப் பாடல்களை முதல் மூன்று திருமுறையாகவும், திருநாவுக்கரசா் பாடிய தேவாரப் பாடல்களை 4 முதல் 6 திருமுறைகளாகவும், சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடிய தேவாரத்தை ஏழாம் திருமுறையாகவும் தொகுத்தார். பின்னா் சமயக்குரவா்களில் நாலாவதாக இருக்கும் மாணிக்கவாசகா் அருளிய திருவாசகம் மற்றும் திருக்கோவையாரை எட்டாம் திருமுறையாக சோ்த்தார். திருமாளிகைத்தேவா் முதலான சிலா் அருளிய திருவிசைப்பா, திருப்பல்லாண்டு ஆகியவற்றை ஒன்பதாம் திருமுறையாக இணைத்தார். திருமூலா் அருளிய திருமந்திரம் பாடல்கள் பத்தாம் திருமுறையானது. பதினொன்றாம் திருமுறையில் திருவாலவாயுடையார் பாடிய திருமுகப்பாசுரம் உள்ளிட்ட 12 போ் அருளிய பிரபந்தங்களயும் காரைக்கால் அம்மையார் பாடிய பாடல்கள் திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் மற்றும் தன்னுடைய பிரபந்தங்களும் சோ்த்தார். பிற்காலத்தில் சேக்கிழார் பாடிய சைவ அடியார்களின் வாழ்க்கையை விவரிக்கும் நூலான பெரியபுராணம் பன்னிரண்டாம் திருமுறையாக சேர்க்கப்பட்டது.

அருணகிரிநாதரின் திருப்புகழை ஓலைகளில் இருந்து தேடி எடுத்துப் பதிப்பித்தவர் தென் ஆற்காடு பகுதியில் வாழ்ந்த வடக்குபட்டு சுப்பிரமணிய பிள்ளை என்பவர். அவர் மகன் தணிகைமணி வ. சு. செங்கல்வராய பிள்ளை அவர்கள் சிவபெருமானது புகழைப் பாடும் அருள் நூல்கள் பன்னிரு திருமுறைகளாக தொகுக்கப்பட்டிருப்பது போல, முருகப் பெருமானது புகழைப் பாடும் அருள் நூல்களையும் பன்னிரு திருமுறைகளாக – முருகவேள் பன்னிரு திருமுறை என்று தொகுத்து பொருளுரையோடு வெளியிட்டார்.

முருகவேள் பன்னிரு திருமுறையில் ஆறுபடை வீடுகளை அடிப்படையாக வைத்துப் பாடப்பெற்ற திருப்புகழ்ப் பாடல்கள் முதல் ஆறு திருமுறைகளாக வகுக்கப்பட்டிருக்கிறது. ஏழாம் திருமுறை பிற பதிகளைப் போற்றிய திருப்புகழ்ப் பாடல்களால் தொகுக்கப் பெற்றது. கந்தரலங்காரம் கந்தரந்தாதி ஆகியன எட்டாம் திருமுறைகளாயின. திருவகுப்பு ஒன்பதாம் திருமுறை ஆகியது. கந்தரனுபூதி பத்தாம் திருமுறைப் பகுப்பாகியது. முற்கால அடியார்கள் பாடிய முருகனைப் பற்றிய பாடல்களின் தொகுப்புகள் பதினோராம் திருமுறையாயின. பன்னிரண்டாம் திருமுறை சேய்த்தொண்டர் புராணம் ஆகும்.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே