மன்மதன் தத்துவம்
மன்மதன் என்றால் என்ன?
‘மன்மதன்’ என்றால் ‘மனதை கடைபவன்’ என்று அர்த்தம். ‘மதனம்’ என்றால் கடைவது. காதல் வயப்பட்ட ஒருவரின் மனதை மதனம் பண்ணுவதால் மன்மதனுக்கு இந்த காரண பெயர். திருமாலின் மனத்தில் இருந்து உண்டான மன்மதன், திருமாலின் நாபிக் கமலத்தில் இருந்து எழுந்த பிரம்மாவுக்கு தம்பிமுறை.
மன்மதனுடைய புஷ்ப பாணங்கள் தாமரை, மல்லிகை, கருங்குவளை (நீலோத்பலம்), மாம்பூ, அசோக புஷ்பம் ஆகியவை தான்; நாணோ புஷ்பங்களில் ரீங்காரமிடும் வண்டுகள்; அவனுடைய தென்றல் தேரை இழுப்பது கிளி! மலர் அம்புகளை செலுத்தும் வில்லாகிய மனம் பஞ்சேந்திரியங்களால் ஆளப்படும் சமஸ்த ஜீவப் பிரபஞ்சத்தை காமத்தில் கட்டிப் போடுகிறது.
அது எப்படி?
ஐந்து பாணங்கள் ஐம்புலனைக் குறிப்பன. பஞ்ச இந்த்ரியங்களால் அநுபவிக்கப்படும் ஐந்து ஸூக்ஷ்ம பூதங்களான சப்தம், ஸ்பர்சம், ரூபம், ரஸம், கந்தம் என்கிறவை தன்மாத்ரை எனப்படும். லலிதா சஹஸ்ரநாமத்தில் பஞ்ச தன்மாத்ர சாயகம் என்று இவை குறிப்பிடப்படுகின்றன. ரூபம், ரஸம், கந்தம், ஸ்பரிசம் ஆகிய நான்கால் நம்முடைய நான்கு இந்திரியங்களை ஆகர்ஷிப்பது புஷ்பம். அதன் அழகு கண்ணுக்கும், அதில் சுரக்கிற தேனின் ரஸம் நாக்குக்கும், வாசனை மூக்கிற்கும், மென்மை தொடு உணர்ச்சிக்கும் இன்பம் தருகின்றன. நாணாக இருக்கும் ரீங்காரம் செய்யும் வண்டுகள் செவிக்கு இன்பம் தருகின்றன.
ஆசையே (காமம்) பிரபஞ்சத்தின் வித்து. லீலா விநோதமாய் இறைவனின் மனதில் எழுந்த ஆசையே பிரபஞ்சமாக உருவானது. அத்வைதத்திலிருந்து த்வைதமாய், பரம்பொருளுக்கு அன்னியமாய் காணப்படும் பிரபஞ்சம் காமத்தால் (இச்சையால்) உண்டானது. பின்னர் பரம்பொருளுடன் ஜீவன்களை ஒன்ற செய்து த்வைதத்தை அத்வைதமாக்குவதும் இறைவனின் லீலை — அவனது சக்தியான அம்பாளின் சொரூபமுடைய காமாக்ஷியின் லீலை. காமாக்ஷி அன்னை மோகத்தைத் தூண்ட வல்ல கரும்பு வில்லையும் புஷ்ப பாணங்களையும் மன்மதனுக்கு தந்து சிருஷ்டி லீலை நடக்க அனுகூலமான சூழ்நிலையை ஏற்படுத்த பணித்தாள். அம்பாள் தந்த உபகரணங்களை சிவபெருமானிடம் அன்புடனும் பக்தியுடனும் சமர்ப்பிக்காமல் அகம்பாவத்துடன் அவர் மேலேயே உபயோகித்த காரணத்தால் அவற்றை இழக்க நேரிட்டு பின்னர் அதை அம்பாள் கருணையால் திரும்பவும் பெற்ற கதை சுவாரசியமானது. .
காம தகனம்
தாரகாசுரன், சூரபத்மன் போன்ற அவுணர்களால் நாடிழந்து துன்பப்பட்ட தேவர்கள் அவ்வசுரர்கள் அழிக்கவல்ல மகனை தருமாறு சிவ பெருமானை நாட திட்டமிட்டார்கள். அந்த சமயம் சிவ பெருமான் தக்ஷிணாமூர்த்தியாக தபஸில் இருந்ததால் தேவர்கள் பிரம்மாவை சரணடைய, பிரம்மா தயங்கி நின்ற தன் மகன் மன்மதனான காமனை மசிய வைத்தார்.
மன்மதனுக்கு தன் அழகில் அஹம்பாவம் இருந்தது. பரமேச்வரன் மனதை ஜயிக்கக்கூடிய மஹாசக்திமான் என்ற தொழில் திறனில் கொண்ட மமதையுடன் யோக நிலையிலுள்ள சிவன் மீது பாணம் விட்டான். கைலாயத்தில் மன்மதன் விட, சிவபெருமானின் யோகம் கலைந்து பார்வதி அன்னை பற்றி ஆசை எண்ணம் இமைப்பொழுது தோன்றியது. கோபப்பட்ட அவர் நெற்றிக்கண்ணால் மன்மதனை எரித்தார்.
ஞான சாகரமாக இருந்த தக்ஷிணாமூர்த்தியை கிருபாசாகரமாக்கி ஜீவராசிகளின் துயர் தீர்க்க வைக்க அம்பிகை நிச்சயித்தாள். அது தாரகாதிகளின் வதத்துக்காக மட்டுமல்ல, ஜீவர்களின் கஷ்டங்களையும், அஞ்ஞானத்தையும் போக்குவதற்காக. ஏனென்றால் கர்மா பாக்கியோடு மரணம் அடைந்த பெருவாரியான மக்களுக்கு மறுபடி ஜன்மா எடுத்தால்தான் சித்தசுத்தி செய்து கொண்டு, கர்மாவை தீர்த்துவிட்டு ஜனன நிவிருத்தி பெறமுடியும். அம்பாள் மன்மதனுக்குத் தந்திருந்த கரும்பு வில்லையும், புஷ்ப பாணங்களையும் ஈஸ்வரனுடைய பாதத்தில் அர்ப்பணம் செய்து நமஸ்கரித்து அன்புமயமாக அவரைப் பார்த்தாள். கரும்பு வில்லும், மலரம்பும் தரித்து, இப்படி அன்பு பொங்கப் பார்த்தபோதுதான் அவளுக்கு காமாக்ஷி என்று பேர் வந்தது.
அவள் வேறு, ஈஸ்வரன் வேறு அல்ல, ஒன்றேதான். ஈஸ்வரனுடைய ஞானத்திலேயே காருண்யமும் பொங்கியிருக்க வேண்டும் என்று அம்பாள் எண்ணினாள். சிவபெருமானும் நடந்த நிகழ்வுகளை ஞான திருஷ்டியால் அறிந்து, உலக நன்மைக்காக பர்வத மலைக்கு சென்று பார்வதிதேவியை மணம் புரிந்தார். இந்த நிலையில் ரதி தன் கணவனைத் திரும்ப தரும்படி அழுது புலம்பவே ரதியின் கண்களுக்கு உருவமாகவும், மற்றோர்க்கு அரூபமாகவும் அனங்கனாகவும் இருக்கும்படி வரமருளினார். பிறகு பார்வதி கல்யாணம் – அதன்பின் குமார ஸம்பவம் அதாவது முருகக் கடவுளின் உற்பத்தி, அப்புறம் சுப்பிரமணியரால் தாரகன், சூரபத்மா ஆகியோரின் சம்ஹாரம் எல்லாம் நடந்தன.
காம தகன தத்துவம்
அனங்கன் என்ற சம்ஸ்கிருத்ச் சொல்லுக்கு அங்கம்/ உடல் அற்றவன் எனப் பொருள். உடல் ரீதியான கீழ்த்தரக் காமத்தை ஒழித்தால் மனைவியரிடத்தே அன்புடன் கூடிய அக நட்பு மலரும் என்பதே இதில் அடங்கிய தத்துவம். சிவன் எரித்தது காம வெறியைத் தான்; உள்ளன்பு பூர்வமான காமத்தை அன்று. மோட்சத்தை அடைய ஈசனை வேண்டுவோர் முதலில் ஒழிக்க வேண்டியது காமமே. மனதின் காமத்தை வெல்ல நாம் நெற்றிக் கண்ணை திறந்து மனதை முழுமையாக அழிக்க வேண்டும்.
மன்மதன் தவம்
காஞ்சீ மண்டலத்தின் மத்ய பாகத்தில் கம்பா நதி, வேகவதி நதி இவ்விரு ஆறுகளுக்கும் இடையில் உள்ள புண்ணிய பிரதேசமான காமகோஷ்டம் / காமகோட்டத்தில் பிலாகாச ரூபிணியான அம்பிகை காமனின் கரும்பு வில்லையும், மலர் பாணங்களையும் தாங்கிக் காமாக்ஷியாக வீற்றிருக்கிறாள். பரதேவதை இந்தப் பஞ்ச பாணங்களைத் தன் திருக்கரங்களில் பிடித்து நம்முடைய இந்திரியங்களை ஒடாமல் தன் பிடிப்பில் வைத்துக் கொண்டு ரக்ஷிக்கிறாள். அவளுடைய கையில் மனோரூபமான கரும்பு இருப்பதால் நம் சித்த விவகாரங்கள் எல்லாம் நசிக்கின்றன. பூலோகத்தை ஒரு ஸ்திரீயாகப் பாவித்தால் அதன் பிலாகாசம் என்ற நாபி ஸ்தானத்தில் காமாக்ஷியின் வாஸஸ்தானமான கர்ப்பகிருஹம் இருக்கிறது. பிலம் என்றால் குகை. கர்ப்பத்திலிருக்கிற குழந்தை பெறும் ஆகாரம் போல் சகல ஜீவராசிகளும் இந்த பிலாகாசத்திலிருந்துதான் அம்பாளின் சகல சக்திகளையும் பெறுகிறார்கள்.
காஞ்சியின் சிறப்பை அறிந்த மன்மதன் காஞ்சிபுரத்திற்கு வந்து தபஸ் செய்து மக்களிடையே தான் முந்தைய அந்தஸ்தை பெற வேண்டும் என்று வேண்டினான். அம்பாள் உடனே கைலாஸத்திலும், மற்ற எல்லா சிவாலயங்களில் உள்ள அம்பாள் சந்நிதிகளிலும் இருக்கிற தன்னுடைய சக்தியையெல்லாம் இந்த பிலாகாசத்துக்குள் அடைத்துக் கொண்டு விட்டாள். இதை பார்த்த பிரம்மா காமாக்ஷியிடம் ஈஸ்வரனுக்காகப் பரிந்து தூது பேசினார். அம்பாள் மறுபடியும் தன் ஜீவசக்தியை கைலாசத்துக்கும் மற்ற க்ஷேத்ரங்களுக்கும் அனுப்பி வைத்தாள். காமனும் தான் இழந்த அந்தஸ்தை மீண்டும் பெற்றான்.
Comments
Post a Comment