தத்துவங்கள் என்றால் என்ன : பகுதி 3
Read Part 1 and Part 2 பிரகிருதி மாயா தத்துவங்கள் பிரபஞ்சத்திற்கு முதற்காரணம் வெளிப்படா பேரியற்கையான வித்தியா தத்துவத்திலிருந்து வெளிப்பட்ட தோற்றமான பிரகிருதி ஆகும். பிரகிருதி மாயை தமிழில் மூலப்பகுதி எனப்படும். நம்முடைய உலகம் தோன்றுவது பிரகிருதி மாயையிலிருந்துதான். பிரகிருதியானது புருஷன் (ஆன்மா) எனப்படும் பிரக்ஞையின் சேர்க்கையால் சலனமடைந்து, அதன் ஆற்றல் உலகமாக உருவெடுக்கிறது. இதுதான் சிருஷ்டி, அதாவது படைப்பு. பிரகிருதி சாத்துவிகம், இராசதம், தாமதம் என்ற முக்குண வடிவானது. சத்வம் என்பது நடுநிலை வகிப்பது. ரஜஸ் என்பது விரிவடைவது, செயல்படுவது. தமஸ் என்பது அதற்கு எதிரிடையாக சுருங்குவது மற்றும் முடங்குவது. பிரகிருதியின் காரியமாகத் தோன்றும் தனு கரண புவன போகங்களும் முக்குணமயமானது. இவற்றில் பொருந்துகிற பிரகிருதி உயிர்களது உள்ளத்தை முக்குணவயப்படுத்தி இருபத்து நான்கு தத்துவங்களாக விரிந்து ஆன்மாக்களோடு பொருந்தி இன்ப துன்ப மயக்கவுணர்வுகளான உலக நுகர்ச்சியைத் தருகிறது. பிரகிருதி என்பது புருஷனின் அனுபவத்துக்கான ஒரு களமாக இருக்கிறது. அதே நேரத்தில் அனுபவத்துக்காக பிரகிருதியுடன் இணைய...