தத்துவங்கள் என்றால் என்ன : பகுதி 3

Read Part 1 and Part 2

பிரகிருதி மாயா தத்துவங்கள்

பிரபஞ்சத்திற்கு முதற்காரணம் வெளிப்படா பேரியற்கையான வித்தியா தத்துவத்திலிருந்து வெளிப்பட்ட தோற்றமான பிரகிருதி ஆகும். பிரகிருதி மாயை தமிழில் மூலப்பகுதி எனப்படும். நம்முடைய உலகம் தோன்றுவது பிரகிருதி மாயையிலிருந்துதான். பிரகிருதியானது புருஷன் (ஆன்மா) எனப்படும் பிரக்ஞையின் சேர்க்கையால் சலனமடைந்து, அதன் ஆற்றல் உலகமாக உருவெடுக்கிறது. இதுதான் சிருஷ்டி, அதாவது படைப்பு.
பிரகிருதி சாத்துவிகம், இராசதம், தாமதம் என்ற முக்குண வடிவானது. சத்வம் என்பது நடுநிலை வகிப்பது. ரஜஸ் என்பது விரிவடைவது, செயல்படுவது. தமஸ் என்பது அதற்கு எதிரிடையாக சுருங்குவது மற்றும் முடங்குவது. பிரகிருதியின் காரியமாகத் தோன்றும் தனு கரண புவன போகங்களும் முக்குணமயமானது. இவற்றில் பொருந்துகிற பிரகிருதி உயிர்களது உள்ளத்தை முக்குணவயப்படுத்தி இருபத்து நான்கு தத்துவங்களாக விரிந்து ஆன்மாக்களோடு பொருந்தி இன்ப துன்ப மயக்கவுணர்வுகளான உலக நுகர்ச்சியைத் தருகிறது. பிரகிருதி என்பது புருஷனின் அனுபவத்துக்கான ஒரு களமாக இருக்கிறது. அதே நேரத்தில் அனுபவத்துக்காக பிரகிருதியுடன் இணையும் புருஷன் (ஆன்மா), பின்னர் அந்தப் பிரகிருதியின் துணைகொண்டே முக்தியையும் பெறுகிறது. தனு கரண புவன போகங்களைப் பயன்படுத்தி இறையுடன் இரண்டறக் கலத்தலே உயிர்களின் இறுதி இலக்கு. அதுவரையில் அவை தமது வினைகளுக்கேற்பப் பிறவிகளை எடுத்துக் கொண்டேயிருக்கும். இறையுடன் கலக்கின்ற பேறு அடைதற்குமுன் ஆன்மா இருவினையொப்பு என்ற நிலையை —பாவத்தையும் புண்ணியத்தையும் சமனாக மதிக்கும் அகங்காரம் அற்றுப் போன நிலை — அடையும் வரை பிறவிகள் தொடரும்.

முக்குணங்களும் வெளிப்படாத காரண "அவ்வியத்த" நிலையில் நின்ற பிரகிருதி, பின்பு அக்குணங்கள் தம்முள் சமமாய் வெளிப்பட்டு வியத்தமாய் நிற்கும் குணதத்துவம் சித்தம் என்னும் அந்தக்கரணமாகும். சித்தம், ஆன்மா யாதொன்றையும் சிந்திப்பதற்குக் கருவியாய் / நின்று ஆன்மாவின் அறிவு, தொழில்களுக்குக் கருவியாய் நிற்கிறது. சித்தத்தைப் "பிரகிருதி" என்றும் அழைப்பதுண்டு. எனவே தான், சித்தத்தை முதலாகக் கொண்ட இருபத்து நான்கு ஆன்ம தத்துவங்களும் "பிரகிருதி மாயா தத்துவங்கள்" எனப்படுகின்றன.


பிரகிருதி மாயை என்பது அசுத்த மாயையினின்று தோன்றிய காரியம்; அதனுள்ளே அடங்கி நிற்கும். அசுத்த மாயை சிறிது மயக்கத்தைச் செய்யும். ஆயின் அசுத்த மாயையின் காரியமாகிய பிரகிருதி மாயையோ பெருமயக்கத்தைத் தருவதாகும்.

உயிர்க்கு உலக அனுபவங்களை தரும் இந்திரியங்கள்

அகங்காரம் என்ற உணர்வு நிலை மனம், புத்தி, சித்தம் ஆகியவற்றிற்கு அடித்தளமாக நின்று உயிர் கொடுப்பது. நாம் பெறும் அனுபவங்கள் எல்லாம் அகங்காரத்தின் வெளிப்பாடுகள் தான். அஹங்காரம் இரு வகையாகி பிரிந்து உயிரும் அறிவும் உள்ள சைதன்ய ஜீவனாகி அவனுடைய மனஸாகவும் ஐந்து ஞானேந்திரியங்களாகவும், ஐந்து கர்மேந்திரியங்களாகவும் ஆகிறது. இன்னொரு பக்கம் ஜடப் பிரபஞ்சத்திலே ஐந்து தன்மாத்ரைகளாகவும், ஐந்து மஹா பூதங்களாகவும் ஆகிறது.

உலக விஷயங்கள் குறித்த அறிவை உயிருக்குத் தருவது இந்திரியங்கள். நம் உடலுக்கு வெளியே இருக்கும் விஷயங்களை உள்வாங்க உதவும் கருவிகள், மற்றும் அவற்றின் திறன் ஆகியன ஒருங்கே இந்திரியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. மெய்/தோல், வாய்/நாக்கு, கண், மூக்கு, செவி/காது எனும் ஐம்பொறிகளும் ஊறு (ஸ்பரிசம்), சுவை, ஒளி, மணம், ஓசை என்னும் புலன்களும் ஞானேந்திரியம் என்று வகைபடுத்தப்பட்டிருக்கிறது. நம் காதுகள் சப்தத்தையும், தோல் ஸ்பரிசத்தையும், கண்கள் ரூபத்தையும், நாக்கு ரஸத்தையும், மூக்கு கந்தத்தையும் உள்வாங்கி அறிய உதவுகின்றன. உண்மையில் காது, தோல், கண், நாக்கு மற்றும் மூக்கு ஆகிய உடல் உறுப்புகள் இந்திரியங்களின் கருவிகள் மட்டுமே. அவை கோளகங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. கோளகங்களும் அவற்றின் இயல்பான விஷயங்களை உள்வாங்கிப் பகுத்தறியும் திறனும் உட்பட்ட தொகுப்பையே நாம் இந்திரியம் எனக் குறிப்பிடுகிறோம்.

அந்தக்கரணம் என்றால் என்ன?

அந்தக்கரணம் கர்மேந்திரியங்கள் மற்றும் ஞானேந்திரியங்களின் பின்னணியில் இருந்து கொண்டு அவற்றின் செயல்களை ஒருங்கிணைத்து, நமக்கு உள்ளே இருந்து அறிவை உண்டாக்குகின்ற, கண்களுக்கு தெரியாத புலனையே அந்தக்கரணம் என்று வேதவேதாந்த சாத்திரங்கள் கூறுகிறது.

அந்தக்கரணமானது மனம், புத்தி, சித்தம் மற்றும் அகங்காரம் எனும் நான்கு வகையாக மாறுபட்டு செயல்படுகிறது. `இது இவ்வாறு, அவ்வாறு அல்ல` என்று பொருளை (வஸ்து) குறித்து உறுதியான அறிவை (ஞானத்தை) ஏற்படுத்தும் அந்தகரணத்தின் செயல்தான் புத்தியாகும்.

மனமானது சங்கல்பம் மற்றும் விகல்பம் ஆகிய தன்மைகள் கொண்டது. சங்கல்பம் எனில் எண்ணுதல், சிந்தித்தல் முதலியவைகளாகும். விகல்பம் எனில் சந்தேகப்படுதல், ஐயப்படுதல் ஆகும். அந்தகரணத்தின் மாறுதல்கள் ஒரு விஷயத்தைக் குறித்து அல்லது ஒரு செயலைக் குறித்து இத்தன்மையினால் எழும் போது அது மனம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த மனம் மற்றும் புத்தி எனும் இந்த இரண்டிலேயே சித்தமும் அகங்காரமும் அடங்கியுள்ளன. சித்தம் என்பது புத்தியிலும், அகங்காரமானது மனதிலும் அடங்கியுள்ளது. புத்தியில் சாத்துவிக குணம் மிகுதியாகவும் ஏனைய இரு குணங்களும் குறைவாகவும் இருக்கும்.

தன்மாத்திரைகள் என்றால் என்ன

தன்மாத்திரை என்றால் உட்பொருள், உணர்வுக்கூறு, அடிப்படைக்கூறு என்று பொருள். 5 தன்மாத்திரைகளும் ஐம்பெரும்பூதங்களின் தோற்றத்துக்கு அடிப்படையாக விளங்குகின்றன. அந்த 5 தன்மாத்திரைகள், முறையே சப்தம் (ஓசை), ஸ்பரிசம் (ஊறு அல்லது தொடு உணர்வு), ரூபம் (வடிவம்), ரஸம் (சுவை), கந்தம் (வாசனை) ஆகியவையாம். நிலத்திற்கு கந்தம் என்ற குணமும், நீருக்கு ரஸம் என்ற குணமும், நெருப்புக்கு ரூபம் என்ற குணமும், காற்றுக்கு ஸ்பரிசம் என்ற குணமும், ஆகாசத்திற்கு சப்தம் என்ற குணமும் உண்டு. வெளி என்னும் ஆகாசம், சப்தம் உருவாக ஆதாரமாகவும் அதை தாங்கும் குணம் கொண்டதாகவும் உள்ளது. சப்தத்திற்கு மூலமாக விளங்கும் இந்த ஆதார குணத்தை சப்த தன்மாத்திரை என்று அழைப்போம்.

பஞ்சபூதங்களும், ஐம்பொறிகளும் இன்னும் ஒன்பது கருவிகளும், வெவ்வேறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஆன்ம தத்துவத்தில் அடக்கப்பட்டிருக்கின்றன. முதலில் அந்தக்கரணங்கள் நான்கும், பின்னர் ஞானேந்திரியங்கள் ஐந்தும், கன்மேந்திரியங்கள் ஐந்தும், அவற்றின் பின்னர் தன்மாத்திரைகளும், அவற்றிலிருந்து ஐம்பூதங்களும் (நிலம், காற்று, நீர், தீ, ஆகாயம்) தோன்றும். ஞானேந்திரியங்கள் அகங்காரத்தின் சாத்துவிகக் கூற்றிலிருந்தும், கன்மேந்திரியங்கள் அகங்காரத்தின் இராசதக் கூற்றி லிருந்தும் தோன்றுவன. தன்மாத்திரைகள் ஞானேந்திரியங்களுக்கும் கன்மேந்திரியங்களுக்கும் நிலைக்களமாய் அமைந்து, அவை தம்மைப் பற்றி நின்று செயற்படுமாறு உதவும். பூதங்கள் அவ்விரு வகை இந்திரியங்களுக்கும் துணையாய் நின்று அவற்றின் ஆற்றலை மிகுவிக்கும். தன்மாத்திரைகளும் பூதங்களும் இவ்வகையில் ஆன்மாவிற்கு உதவும் தத்துவங்களாய் உள்ளன. இப்பிரகிருதியுடன் புருடனான ஆன்மா (வித்தியா தத்துவங்களுள் ஒன்று) ஏனைய தத்துவங்களுடன் இணைந்து, இப்பௌதிக உலகில் செயலாற்ற ஆரம்பிக்கின்றது என்பது சைவ சித்தாந்தம்.

தன்மாத்திரைகளும் பஞ்ச பூதங்களும்

மாபூதங்கள் தன்மாத்திரைகளிலிருந்து தோன்றுகின்றன. நீரில் ரூப, ஸ்பரிச, சப்த தன்மாத்திரைகள் உள்ளன. ஆக நீருக்கு ரஸம், ரூபம், ஸ்பரிசம் மற்றும் சப்தம் ஆகிய நான்கு குணங்கள் இருப்பதாகக் கருதலாம். ப்ருத்வி அல்லது நிலம் என்பது திடமான எல்லாத் தாதுக்களின் தொகுப்பேயாகும். நிலத்தின் தனித்தன்மையாக நாம் அறியும் குணம், மணம் அல்லது நாற்றம் எனப்படும் கந்தம் ஆகும். நிலமானது, நாம் முகர்ந்து மணமறியும் வகையில் கந்தம் என்னும் ஆதார குணத்தை உடையது. நிலத்தின் இந்த ஆதார குணத்திலிருந்தே கந்தம் என்ற விஷயம் விளைகின்றது. கந்தத்திற்கு மூலமாக விளங்கும் இந்த ஆதார குணத்தை கந்த தன்மாத்திரை என்று அழைக்கலாம். நிலம், ரஸமுடையதாகவும், ரூபமுடையதாகவும், உள்ளது; ஸ்பரிசிக்க முடிவதாகவும் உள்ளது; சப்தத்துக்கும் ஆதாரமாக விளங்குகின்றது. எனவே நிலத்தில் ரஸ, ரூப, ஸ்பரிச, சப்த தன்மாத்திரைகள் உள்ளன. ஆக நிலத்திற்கு கந்தம், ரஸம், ரூபம், ஸ்பரிசம் மற்றும் சப்தம் ஆகிய ஐந்து குணங்கள் இருப்பதாகக் கருதலாம்.

மாணிக்கவாசகர் போற்றித் திரு அகவல் என்ற திருவாசகத்தில் எழுதுவதாவது:

பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி
வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி

பஞ்சீகரணம் என்றால் என்ன?

ஸ்தூல சரீரம் ஐந்து பூதங்களால் ஆனது, அதுபோல் ஸ்தூல நிலையை அடையாத, நுட்ப நிலையில் உள்ள அதே ஐந்து பூதங்களால் ஆனதுதான் சூட்சும சரீரம் எனப்படுகிறது. நுட்ப நிலையிலிருந்து மாற்றப்பட்டு ஸ்தூல நிலையை அடைவதே ‘பஞ்சீகரணம்’. பஞ்சீகரணம் (Panchikarana) எனில் ஐந்தின் சேர்க்கை என்று பொருள். பிரபஞ்சம் மற்றும் சீவராசிகள், சூக்கும நிலையில் உள்ள ஆகாயம் முதலிய பஞ்சபூதங்கள், குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து ஸ்தூலப் பொருள் என்னும் தோற்றத்திற்கு பஞ்சீகரணத்தால் வருகிறது. ஐம்பூதங்களில், ஒவ்வொரு பூதமும் இருகூறாக ஆகி, அதில் ஒரு கூறை நிறுத்திக்கொண்டு, மற்றொரு கூறை நான்கு கூறுகள் ஆக்கி, அந்த நான்கும் மற்ற நான்கு பூதங்களுக்குக் கொடுத்தும் வாங்கியும் தம்மில் கலப்பது பஞ்சீகரணம் எனப்படும். ஆகாயம் துவாரமாகி மற்ற பூதங்களுக்கு இடம் கொடுக்கும் இயல்பானது. வாயு சலித்து மற்ற பூதங்களை திரட்டும் இயல்பானது. தேயு சுட்டு ஒன்றாக்கும் இயல்பானது. அப்பு குளிர்வித்து பதம் செய்யும் இயல்பானது. பிருதிவி கடினமாய் ஆக்கும் இயல்பானது.

  1. எலும்பு, தோல், தசை, மயிர், நாடி நரம்புகள் முதலியவை மண்ணின் தன்மையைகவை.
  2. இரத்தம், கொழுப்பு, சீழ், விந்து, சிறுநீர், மூளை போன்றவை நீரின் தன்மையைக் கொண்டவை.
  3. சோம்பல், காமம், கோபம், அச்சம், தூக்கம், இறுமாப்பு போன்ற உணர்வுகள் தீயின் தன்மையைக் கொண்டவை.
  4. ஓடுதல், நடத்தல், நிற்றல், இருத்தல், கிடத்தல் போன்ற உடலின் செயல்கள் காற்றின் தன்மையைக் கொண்டவை.
  5. ஆசை, உட்பகை, மோகம், வெறி, வஞ்சனை போன்ற குணங்கள் ஆகாய கூறுகள் என்றும் கூறுவார்.

ஆன்ம தத்துவங்கள்




அந்தகரணம்
மனம் (எண்ணங்களின் தொகுப்பு)
புத்தி (தர்க்க ரீதியாக ஆராய்ந்து முடிவு செய்யும் எண்ணங்கள்)
அகங்காரம் (அநாத்மாவை நான் என என்னும் எண்ணம்)
சித்தம்: மனமும் புத்தியும் தோன்றுவதற்கு ஓர் அடிப்படை சித்தம். ஆத்மா, உடல் இரண்டிற்கும் தொடர்பாகவும் நன்மையினை நாடும் நடுநிலை உணர்வாகவும் உள்ள சித்தம் வினைப் பயன்களினால் எண்ணங்களை எண்ண வைக்கும். மனம் விருப்பத்தினால் மற்றும் நினைவுகளினால் குழப்பத்தை தந்து சுயநலமாக உணர்ச்சி பூர்வமாக இயங்கும். புத்தி மனத்தில் ஒரு பொருளைப்பற்றி தொடர்ந்து தோன்றும் எண்ணங்களை ஆராய்ந்து தீர்மானித்து முடிவு செய்யும். சித்தம் கடந்த காலத்தை திரும்பவும் அசை போட்டு பார்த்து சிந்தித்து உணரும். மனம், புத்தி, அகங்காரம் இவை ஒடுங்கிய நிலையில் சித்தம் என்ற திரையில் எல்லாவற்றிற்கும் பின் உள்ள ஆத்மாவின் வெளிச்சம் தெரியும்.


ஞானேந்திரியங்கள்
(உணர்வுக் கருவிகள்
அல்லது
ஐம்புலன்கள்)
ஸ்ரோத்திரம் →காது  (கேட்கும் சக்தி)
துவக் →  தோல்  (ஸ்பரிசம்)
சக்ஷுஸ்   →   கண்  (பார்வை)
ஜிஹ்வை   →   நாக்கு  (சுவை)
கிராணம்   →   மூக்கு  (நுகரும் சக்தி)

கன்மம் என்றால் செயல். மனித உடலில் உள்ள வாய், கால் முதலிய செயற் பொறிகளான உறுப்புகளில் நின்று ஐந்து செயல்களை செய்யும் ஆற்றல்களே கன்மேந்திரியங்களாகும்.




கர்மேந்திரியங்கள்
(செயல் கருவிகள்)
வசனம்→ வாக்கு  (பேசும் சக்தி). வாக்கு என்ற இந்திரியம் (வாய் ஆகிய உறுப்பில் நிற்கும்) சப்த தன்மாத்திரையைப் பற்றி நின்று பேசுதலைச் செய்யும்.
கமனம் →  பாதம் பாதம் என்ற இந்திரியம் (கால் ஆகிய உறுப்பில் நிற்கும்) பரிச தன்மாத்திரையைப் பற்றி நின்று போக்குவரவு செய்யும்.
பாணி → கைகள் (காரியம்) பாணி என்ற இந்திரியம் (கை ஆகிய உறுப்பில் நிற்கும்) உருவ தன்மாத்திரையைப் பற்றி நின்று ஏற்றல் இடுதலைச் செய்யும்.
பாயு   →   எருவாய் (மல விசர்ஜனம்) பாயு என்ற இந்திரியம்(எருவாய் ஆகிய உறுப்பில் நிற்கும்) இரத தன்மாத்திரையைப் பற்றி நின்று மலம் முதலியவற்றை வெளிப்படுத்தும்.
உபஸ்த்தம்  →   கருவாய் (ஆனந்தித்தல்) உபத்தம் என்ற இந்திரியம்(கருவாய் ஆகிய உறுப்பில் நிற்கும்) கந்த தன்மாத்திரையைப் பற்றி நின்று விந்தினை வெளிப்படுத்தி இன்பம் செய்யும்.

பிரகிருதி தத்துவங்கள் கீழ்க்கண்ட 24 ஆகும்.

பஞ்ச பூதம் ஞான இந்திரியங்கள் கர்ம இந்திரியங்கள் தன் மாத்திரை அந்த கரணங்கள்
மண்செவி வாக்குசப்தம்மனம்
நீர்கண்பாதம் ஊறு/உணர்வறியும்அகங்காரம்
தீமூக்குகை ஒளி/உருவமறியும் புத்தி
காற்று நாக்கு எருவாய்சுவைசித்தம்
ஆகாயம்மெய் கருவாய்கந்தம்/மணம் அறியும்

Comments

  1. Explanation is simple, lucid...it appears easy when one reads.. however one needs to spend more time to internalise the explanation

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே