தத்துவங்கள் என்றால் என்ன : பகுதி 2

பிரபஞ்சத்தை ஆக்கும் மூலப்பொருளகளை வகைப்படுத்தி மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. தத்துவங்கள் என்றால் என்ன : பகுதி 1ல் சிவ தத்துவத்தை அறிந்து கொண்டோம். முப்பத்தாறு தத்துவங்களின் இரண்டாவது பகுதியாகிய வித்தியாதத்துவத்தை இங்கு காண்போம்.

வித்தியா தத்துவம்

வித்தியா தத்துவங்கள் சுத்த மாயை அல்லது விந்து என வழங்கப்படும் மகாமாயையுள் ஆணவ மலத்தோடு கலந்து அடங்கி நிற்பது. சுத்த மாயையுடன் ஆணவ மலம் கலப்பதால் சுத்த-அசுத்த (மிச்சிர) தத்துவங்களாக, பிரபஞ்சத்தின் அடிப்படை காரிய பொருளாக வித்தியா தத்துவங்கள் விளங்குகின்றன. பிரபஞ்சத்திலும் அதில் வாழும் மற்ற உயிரினங்கள் உள்ளும் ஆத்மா செயற்பாட்டுக்கான கருவிகளாக பொருந்தி இருக்க உதவுகின்றன. வினையிற்கட்டுண்ட ஆன்மாக்களுக்கு கன்மத்தை நுகர்வதற்கு களம் அமைப்பதோடு, அதை நுகர்வதற்கான காலம், நியதி, கலை, வித்தை, அராகம் என்னும் ஐந்து தத்துவங்கள் ஆன்மாவை எப்பொழுதும் நீங்காது பஞ்ச கஞ்சுகங்களாக சட்டைபோல் ஒன்றாய் ஒட்டி, போகங்களை அனுபவிக்கும் செயற்பாட்டுக் கருவிகளாக வித்தியா தத்துவங்கள் விளங்குகின்றன.

ஆணவ மலத்துடன் கூடிய அசுத்த மாயை வினை விளைக்கின்ற காலம் எனும் நேரம், அக்காலத்துக்குள் விளங்கும் நியதி எனும் விதி, நியதிக்கேற்பப் பரவும் கலை எனும் குண வேறுபாடு, அக்குண வேறுபாட்டை ஒட்டி எழும் அராகம் எனும் இச்சை, இவற்றுடன் இயங்கும் அறிவு – இவ்வைந்தும் வெளிப்பட்டு, அதன் மூலமாக வெளிப்படும் புருடன் எனும் தத்துவம் சேர்ந்தது தான் வித்தியா தத்துவம். பஞ்சகஞ்சுகமாகிய காலம், நியதி, கலை, வித்தை, அராகம் ஆகியவற்றை ஆன்மா அணிந்து நிற்கும் போது புருடன் எனப்படும்.

மாயா தத்துவத்திலிருந்து முதலில் காலம் என்னும் தத்துவம் தோன்றும். பின்னர் மாயா தத்துவத்தினின்றும் நியதி என்னும் தத்துவமும், பின்னர் கலை என்ற தத்துவமும் தோன்றும். கலை தோன்றிய பின்னர் அக்கலையிலிருந்தே வித்தை என்னும் தத்துவம் தோன்றும். அவ்வித்தை தோன்றி பின்னர் அதிலிருந்தே அராகம் என்னும் தத்துவம் தோன்றும். முன்னே சொன்ன காலம், நியதி, கலை என்னும் மூன்றும் மாயையிலிருந்து நேரே தோன்ற, கலையிலிருந்து வித்தையும் அவ்வித்தையிலிருந்து அராகமும் தோன்றுகிறது. அராகம் ஆன்மாவின் இச்சா சத்தியையும் வித்தை ஞான சத்தியையும், கலை கிரியா சத்தியையும் விளக்கி ஆன்மாவை நுகர்ச்சியில் ஈடுபடச் செய்யும். நியதி இதனையே நுகர்க என வரையறுத்து நிறுத்தும். காலம் இந்த நுகர்ச்சியை இத்தனைக் காலம் நுகர்க என எல்லைப்படுத்தும். இந்த நிலையிலேயே ஆன்மா பொதுவகையில் வினைப் போகத்தை நுகரும் தகுதி பெறுகிறது.

மாயை ஆன்மா இயங்கு தளம்
காலம் காலதத்துவம் கன்மத்தை அளவுபடுத்தும்.
நியதி அவரவர் வினையை அவரவரே அனுபவிக்குமாறும் அநுபவிக்கும் அளவையும் நெறிப்படுத்தி நிறுத்தும்.
உயிர்கள் நுகர்ச்சியில் ஈடுபடுவதற்கு அவற்றின் அறிவு இச்சை செயல்களை ஆணவ மல மறைப்பிலிருந்து விடுவித்து அவற்றை தொழிற்படுவதற்கு உதவும் கருவிகள் கலை, வித்தை, அராகம் என்பனவாகும்.
கலை கலை ஞானத்தின் கிரியா சக்தியாகும். ஆன்மாவின் ஆணவத்தை சிறிது அகற்றும். கிரியா/செயல் திறன் சக்தியை தூண்டி, அதனைத் தொழிற் படச் செய்வது கலை. கலா தத்துவம் ஆன்மாவை மறைக்கும் ஆணவ மலத்தின் வன்மையைச் சற்று குறைக்கிறது.
வித்தை வித்தை கலையினின்று தோன்றுவது. ஆன்மாக்களுக்குப் பகுத்தறிவைத் தரும்; ஞான சத்தியை எழுப்பும்.
அராகம்அராகம் வித்தையினின்று தோன்றுவது. ஆன்மாவின் இச்சை சக்தியை எழுப்பும்.
புருடன்மேலே கூறப்பட்ட ஐந்து ஆற்றல்களை(காலம், நியதி, கலை, வித்தை, அராகம்) ஆளும் ஆன்மாவே புருடன். புருடன் ஆணவ மலத்தில் இருந்து விடுபடும்போது, கலை - ஆணவ மலத்தை விலக்கி கிரியா/செயல் திறன் சக்தியை தூண்டும். வித்தை - ஆணவ மலத்தை விலக்கி ஞான/அறிதல் சக்தியை தூண்டும். அராகம் - ஆணவ மலத்தை விலக்கி இச்சா/விழைதல் சக்தியை தூண்டும்.

வித்தியா தத்துவங்களால் ஆன்மா பொதுவகையில் வினைப் போகத்தை நுகரும் தகுதி பெறுகிறது. அதன் பின்னர் புருடன் கலையினின்று தோன்றும் பிரகிருதியைப் பொருந்திய நிலையில் நுகர்வோன் என்னும் சிறப்புத் தகுதியைப் பெறுகிறது. பிரகிருதியே உலக அனுபவத்தைத் தருவது. தொடர்ந்து பிரகிருதி தத்துவங்களை பற்றி இங்கு படிக்கவும்: பகுதி 3

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே