195. இலாபமில் By Janaki Ramanan

The song ilabbamil is explained in English here : 195.Ilabamil
The explanation in Tamil has been posted by Smt Janaki Ramanan, Pune.

விராலிமலையில் தான் அருணகிரிநாதருக்கு எத்தனை, எத்தனை இனிய ஆன்மீக அனுபவங்கள்! சிவ அம்சங்கள் அத்தனையும் உள்ளடக்கி, சிவ ஸ்வரூபனாகவே தரிசனம் தந்து விளையாடுகிறான் வேலவன். சிவ பாலனாகவும் காட்சி தருகிறான். எந்த ரூபத்தில் வந்தாலும் ஆட்கொள்ளும் பரம்பொருள் அவன் தான் எனச் சரவணனைச் சரண் அடைகிறார் அருணகிரியார். முதல் பகுதி காட்டுவது, சிவன் அம்சமும், முருகன் அம்சமும் பிரிக்க முடியாதபடி இணைந்திருக்கும் , "சத்" எனும் சத்திய தரிசனமோ! இரண்டாம் பகுதி, மங்கல ஸ்வரூபனாக, சிவபாலனாகக் காட்சி தரும் "சித் " எனும் ஞானமோ! மூன்றாம் பகுதி முருகனை ஆனந்த மயமாகக் காணும் நிலையோ! மொத்தத்தில் அவன் சச்சிதானந்தனே தானோ, என எண்ண வைக்கும் ஆன்மீக விளக்கு.

விளக்கவுரை


இலாபமில் பொலாவுரை சொலா மன தபோதனர்
இயாவரும் இராவு பகல் அடியேனை

விளக்கம்

விராலிமலைக்கு என்னை ஈர்த்து வந்த காந்தமே கந்தா ! எப்படி எப்படியோ இருந்த என்னை முற்றிலும் புதியவன் ஆக்கி விடு. பொய்மையோ, வீண் வார்த்தைகளோ பேசி அறியாத தவ ச்ரேஷ்டர்கள், இந்த ஏழையைப் பற்றி எப்பொழுதும், எப்படி எல்லாம், நல்ல விதமாகப் பேச வேண்டும் என்ற என் ஆசையை, ஆதங்கத்தை, உன்னிடமன்றி யாரிடம் சொல்வேன் ஐயா?

இராகமும் விநோதமும் லோபமுடன் மோகமும் இலான்
இவனு மா புருஷன் என ஏய

விளக்கம்

இந்த அருணகிரிநாதன், கீழான ஆசைகளோ, காமமோ, மோகமோ, ஈயாத லோப குணமோ இல்லாத நல்லவன், உத்தம புருஷன் என்று அந்த மேலோர் சொல்லும் நாள் வருமோ ஐயா !

எந்த ரூபத்தில் வந்தாலும் ஆட்கொள்ளும் பரம்பொருள் அவன் தான் எனச் சரவணனைச் சரண் அடைகிறார் அருணகிரியார்.
சலாப அமலாகர சசீதர விதாரண
சதாசிவ மயேசுர சகல லோக
சராசர வியாபக பராபர மநோலய
சமாதி அநுபூதி பெற நினைவாயே

விளக்கம்

உன் தந்தையின் வடிவமாகவே காட்சி தரும் அற்புதமே வடிவேலா! இனிய குணங்களின் இருப்பிடமே! தூய்மையே உருவான அமலனே, விமலனே ! பிறை சூடிய பெம்மானே ! கருணைக்கோர் விளக்கமே ! உருவமும், அருவமும் கலந்த சதாசிவனே ! மகேஸ்வரா, அகிலம் முழுதும், அசையும் பொருள், அசையாப் பொருள் , அனைத்திலும் வியாபித்து நிற்கும் விழுப் பொருளே. பரம்பொருளே நீ தான் என உணர்ந்து கொண்டேன் முத்தையா. மன ஆட்டம் அடங்கி, சமாதி நிலை வரை சென்று நான் அநுபூதியாம் விடுதலை பெற நீதான் அருள் புரிய வேண்டும். நீ நினைக்காவிட்டால் அது நடக்குமோ? நினைத்து விட்டால் நடக்காமல் போகுமோ? கருணை மழையில் எளியனை நனைத்து விடு.

நிலா விரி நிலாமதி நிலாதவ நிலாசன
நியாய பரிபால அர நதி சூடி

விளக்கம்

முழு நிலவைப் போலவே ஒளி சிந்தும் பிறை நிலவையும் , அசைந்து கொண்டிருக்கும் காற்றையே உண்டு, அசையாமல் ஜடாமுடியில் நின்று நியாய தர்மங்கள் காக்கும் ஆதிசேட னையும், பவித்திரமான பாகீரதியையும், ஜடாமுடி யில் தாங்கியவராய்

நிசாசர குலாதிபதி ராவண புயாரிட
நிராமய சரோருகரன் அருள் பாலா

விளக்கம்

அன்று, தன் வழியை மறைத்து நின்ற கயிலை மலையை, அகந்தையுடன், பெயர்த்து எடுத்து, நகர்த்த முயன்ற ராவணனின் தோள் வலிமை எல்லாம் பொய்யாய் போக, மலையை கால் விரல் நகத்தால் அழுத்தி அவனைப் படாதபாடு படுத்திய, சர்வ வல்லமையும், வலிமையும் பொருந்தியவராய், பிணி என்பதே அணுக முடியாதவராய், பத்மாசனத்தில் அமர்ந்தவராய், ஞானசம்பந்தருக்குத் தாமரைப் பூவில் அமர்ந்து காட்சி தந்தவராய், அளப்பரிய பெருமைகள் கொண்ட அந்த அர ஹர சிவனின் அருமை மைந்தா, எந்தன் கந்தா

விலாசுகம் வலாரெனும் உலாச விதவாகவ
வியாதர்கள் விநோத மகள் மணவாளா

விளக்கம்

வில்லம்பு கொண்டு வேட்டையாடுவதில் வல்லவராய், அந்தத் தொழிலையே ஜீவாதாரமாய்க் கொண்டு , வாழ்க்கையைச் சுகமாய் கழிக்கும், வேடர் குலத்தில், அற்புதமான குண நலனுடன், பேரெழிலுடன் வளர்ந்த வள்ளியின் மணவாளா

விராவு வயலூர் புரி, சிராமலை பிரான்மலை
விராலிமலை மீதி லுறை பெருமாளே

விளக்கம்

அளப்பரிய உன் அருள் கூறும் வயலூர், சிறப்புகள் பல கொண்ட சிரா மலை, பெருமை மிக்க பிரான்மலை, வியத்தகு விராலிமலை, என்று, அன்பர்களைக் காக்க வென்றே ஆங்காங்கு கோயில் கொண்டிருக்கும், கோல மயில் வாகனா சரணம்.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே