விராலிமலை முருகன்
தற்போது கோயில் இருக்குமிடத்தில் குரா மரம் ஒன்றிருந்ததாகவும், வேடன் ஒருவன் துரத்தி வந்த வேங்கை அக்குரா மரத்தினுள் மறைந்து விட்டதாகவும், அவ்விடமே ஆறுமுகனாரின் உறைவிடமாகக் கொண்டு வழிபடத்துவங்கியதாகவும் கூறுவர். அருணகிரிநாதரைத் தடுத்தாட்கொண்ட முருகப்பெம்மான், அவருக்கு விராலிமலை இருக்குமிடத்தைக் காட்டவே இவ்வாறு வேடன் வேடம் பூண்டு வேங்கையைத் துரத்தி வந்ததாகவும் கூறுவர்.
விராலிமலை ஷண்முகநாதனுக்கு மற்ற முருகன் கோவிலில் காணமுடியாத மூன்று சிறப்புகள் உண்டு.
ஒன்று, முருகனுக்கு அர்த்த ஜாம சுருட்டு பீடி படையல்.
மற்றொன்று, நம் வீட்டில் யாராவது குழந்தையை பரிகசிக்க தோன்றினால் தவிட்டுக்கு வாங்கிய பிள்ளை என்று சொல்லுவோமே.. அதை மெய்ப்பிக்கும் வண்ணம் தவிட்டை கொடுத்து பிள்ளையை வாங்கி செல்லும் ப்ரார்த்தனை நிறைவேற்றல் விராலிமலை முருகப்பெருமான் கோவிலில் மட்டுமே உணடு.
மூன்றாவது, 25 சிவநாமாக்கள் வரும் ஒரே திருப்புகழ் பாடல் விராலிமலை திருப்புகழ் மட்டுமே.
மூன்று சிறப்பையும் முறையே பார்ப்போம்.
- முருகனுக்கு சுருட்டுப் படையல்: இதற்குப் பின்னால் ஒரு கதை உண்டு. சூறாவளிக் காற்றிலும், வெள்ளத்திலும் துன்புற்று வீடு செல்ல இயலாது கருப்பமுத்து என்னும் முருகனடியார் தனிமையில் நிற்கையில், அருகில் மற்றொருவர் குளிரில் நடுங்கி நிற்பதைக் கண்டு, குளிருக்கு இதமாக இருக்கட்டும் என்று சுருட்டு ஒன்றைக் கொடுத்தாராம். பின்னர் இருவருமாக ஆற்றைக் கடந்து செல்கையில் அவர் காணாமற் போய்விட்டது கண்டு வியப்புற்ற கருப்பமுத்து, கோயிலை அடைந்ததும் அங்கு முருகனாருக்கு முன்னர் சுருட்டு இருப்பதைக் கண்டு, தம்மிடம் சுருட்டு பெற்றவர் எம்பிரான் ஷண்முகநாதனே என உணர்ந்தார். அன்று முதல் முருகனுக்கு சுருட்டு படைக்கும் பழக்கம் உருவானது.
ஒரு முறை, இந்த படையலுக்கு புதுக்கோட்டையை மன்னர் தடை போட முயற்சித்த போது முருகன் அவர் கனவில் தோன்றி சுருட்டு நிவேதனம் பிறர் துன்பம் கண்டு அன்பை வளர்க்கும் குறியீடுதான் எனவும், புகைப் பழக்கத்தை ஊக்குவிப்பது அல்ல எனவும் கூறினார். உடனே மன்னர் தமது தடையை நீக்கிக் கொண்டதாக வரலாறு கூறுகிறது.
- பிள்ளைப்பேறு வேண்டுவோருக்கு தவிட்டு நேர்த்திக் கடன் கழிக்கும் பழக்கம் விராலிமலையில் மட்டுமே உள்ளது. குழந்தை பிறந்ததும், அதை விராலிமலை முருகனிடமே அவரது பிள்ளையாகக் கொடுத்து விட்டுப் பிறகு பிள்ளையின் மாமன் அல்லது சிற்றப்பன்மார்கள் ஆறுமுகனாருக்குத் தவிட்டைக் கொடுத்துப் பிள்ளையை பெற்றுச் செல்லும் ப்ரார்த்தனை நிறைவேற்றல் இங்கு பிரபலமான ஒன்றாகும்.
- 25 சிவநாமாக்கள் ஒரே திருப்புகழில்: அருணகிரியார் பதினாறு திருப்புகழை விராலிமலை முருகன் மீது பாடியுள்ளார். அதில் மிகவும் சிறப்பு வாய்ந்த 'கரிபுராரி' என்ற இந்த ஒரே திருப்புகழ் பாடலில் இருபத்தைந்து சிவன் நாமங்கள் வரும்.
- கரி புர(ம்) அரி = யானையின் உடலை அழித்தவர்
- காம அரி = மன்மதனை அழித்தவர்
- திரிபுராரி = மூன்று புரங்களை அழித்தவர்
- தீ ஆடி = நெருப்பு அபிஷேகம் கொள்பவர்; பிரளயகாலத்து அக்கினியையே தன்னுடைய அபிஷேக நீர் என்று கொண்டவர்;
- கயிலையாளி = கயிலை மலை இறைவர்
- காபாலி = பிரம கபாலத்தைக் கையில் கொண்டவர்
- கழை யோனி = மூங்கில் அடியில் தோன்றியவர்
- கர உதாசன = கையில் நெருப்பை ஏந்தியவர்
- ஆசாரி = தலைவர்
- பரசு பாணி = மழுவை கையில் உடையவர்
- பானாளி = நள்ளிருளை உகந்தவர்
- கணமோடு ஆடி = பேயுடன் ஆடுபவர்
- கா யோகி = யோகத்தை உடலாகக் கொண்டவர்
- சிவ யோகி = சிவ யோகி
- பரம யோகி = பரம யோகி
- மா யோகி = மகா யோகி
- பரி அரா ஜடா சூடி = பெரிய பாம்பைச் சடையில் சூடியவர்
- பகர் ஒணாத = சொல்லுதற்கு அரியவர்
- மா ஞானி = மகா ஞானி
- பசு ஏறி = இடப வாகம் உடையவர்
- பரதம் ஆடி = கூத்து ஆடுபவர்
- கான் ஆடி = சுடு காட்டில் ஆடுபவர்
- பர = மேலானவர்
- வயோதிக அதீத= மூப்பைக் கடந்தவர்
- பரம = பரம் பொருள்
Comments
Post a Comment