By Smt Janaki Ramanan, Pune.
சோணாசலத்தின் ஜோதிப் பிழம்பே சரணம். "பரிய கைப் பாசம்" என்று தொடங்கும் திருவருணை திருத்தலப் பாடல்.
முன்னுரை
ஒரு விதத்தில் வாழ்க்கையின் இறுதிப் போட்டி, ஒரு கயிறு இழுக்கும் போட்டி தானோ! ஒருபுறம் நம் பாச பந்தங்கள். மறுபுறம் காலனின் பாசக் கயிறு. ஒரு கட்டத்தில் போராட்டம் நிற்கிறது.
உயிர் தன் இச்சைப்படி உடலை விட்டுப் பறக்கிறது. அதன் பிறகு இந்த உடலைச் சீண்டுவார் இல்லை. இதற்கா போராடிப் போராடி வாழ்கிறோம்? ஜனன மரண சுழற்சியில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? அர்த்தம் வேண்டுமானால் மெய் ஞானம் பெற வேண்டும் என உணர்ந்து கொள்ளும் அருணகிரியார், அந்த ஞானத் தெளிவு தந்து தன்னை ஆட்கொள்ளுமாறு அறுமுகவனிடம் வேண்டும் பாடல்.
பல பாடல்களில் பல்வேறு விதமாக இந்தக் கருத்தையே ஏன் திரும்ப திரும்ப வலியுறுத்துகிறார்?
சலித்துக் கொள்வதையும், திசை திரும்புவதையும், திசை திருப்புவதையுமே தொழிலாகக் கொண்ட மனித மனது ,இன்றில்லா விட்டால் நாளை, இந்தப் பாடலில் இல்லாவிட்டால் இன்னொரு பாடலில் லயித்து, தான் சொல்வதை ஏற்றுக் கொள்ளாதா என்ற தவிப்பிலே பிறந்தன இந்த பாடல்கள்.
பரிய கைப் பாசம் விட்டெறியும் அக்கால னுள்
பயன் உயிர் போய் அகப்பட மோக
விளக்கம்: மிக வலுவான பாசக் கயிறைக் காலன் வீசும் பொழுது, உடல் சார்ந்த, மனம் சார்ந்த, பந்த பாசங்களுடன் ஒட்டிக் கொண்டு தவிக்கும் உயிர், ஒரு கட்டம் வரை போராடுகிறது. பிறகு அவன் இச்சையையே தன் இச்சையாக்கிக் கொண்டு, உடலை விட்டுப் பிரிந்து தர்ம தேவனுடன் சென்று விடுகிறது.
படியில் உற்றாரெனப் பலர்கள் பற்றா அடற்
படர் எரிக் கூடு விட்டு அலைநீரில் பிரியும்
விளக்கம்:
பூவுலக வாழ்வில், எப்படி, எப்படியெல்லாம் உரிமையுடன், உற்சாகத்துடன், உற்றத்தையும், சுற்றத்தையும் இந்த உடல் சுற்றிச் சுற்றி வந்திருக்கிறது!
அந்த உடலை எடுத்துச் சென்று, தன்னந் தனியே, படர்ந்து எரியும் நெருப்புக்கு அது இரையாகும் படி விட்டு விட்டு, நீராடி விட்டுச் சென்று விடுகிறது உறவு.
இப் பாதகப் பிறவியுற்றே மிகப்
பிணிகளுக்கே இளைத்து உழல் நாயேன்
விளக்கம்:
இந்தப் பரிதாபமான முடிவுக்காகவா பாவங்கள் பல செய்யும் பிறவி எடுத்தேன்? இப்படி முடியவா ஆசைகளை வளர்த்தேன்? இதற்காகவா பொன்னும் பொருளும் வாரியிறைத்துப் பிணிகளை விலைக்கு வாங்கினேன்?
நாயினும் இழிந்த இத்தகைய அற்பப் பிறவிகள் வேண்டுமோ முருகா?
பிழை பொறுத்தாயென பழுதறுத்தாளெனப்
பிரியமுடன் ஓதிடப் பெறுவேனோ
விளக்கம் : இந்த இழிந்த ஜனன மரண சுழற்சியிலிருந்து என்னை விடுவிப்பாயா வேலவா? அன்று இதே அருணையில் என் குற்றங்களைப் பொறுத்துக் கொண்டு என் பிணியை நீக்கித் துன்பம் துடைத்தாய். அதோடு என்னைக் கைவிட்டு விடாதே , என் இறைவா. என் குறைகளைப் பாவக் கறைகளை மிச்சமின்றி நீக்கி என்னைப் புடம் போடு. உன் திருவடி நிழலில் இடம் கொடு. நான் பக்திக் கடலாடி, அன்புப் பெருக்கிலே உன்னை முற்றிலும் உணர்ந்து இடையறாது உன் புகழ் பாடும் ஆனந்த நிலை கிடைக்குமோ ஐயா!
கரிய மெய்க் கோலமுற்ற அரியின் அற்றாமரைக்கு
அமைவ பற்றா சையக் கழலோர் முன்
விளக்கம்: கரிய திருமேனி கொண்ட அழகிய திருமால், சக்ராயுதம் வேண்டி, திருவீழிமிழலைத் தலத்தில், சிவனுக்கு பூஜை செய்தார். ஒவ்வொரு நாளும் ஆயிரம் தாமரை மலரகளால் அர்ச்சனை . ஒரு நாள் சிவனின் திருவிளையாடலால் ஒரு மலர் குறைந்து விட்டது. பூஜையை நடுவில் நிறுத்தாமல் தன் விழி மலர்களில் ஒன்றை எடுத்து அர்ச்சனை செய்து விட்டார் அந்த தாமரைக் கண்ணன்.
இஷ்டப்படி வழிபாடு செய்வோருக்கெல்லாம், விஷ்ணுவின் ஒரு முகப்பட்ட வழிபாட்டை உணர்த்தத்தான் அந்த விளையாட்டோ! அப்படியெல்லாம் விளையாடும் உன் தந்தை, உன் முன்னால் பணிவுடன் நிற்க
கலை வகுத் தோதி வெற்பது தொளைத் தோன்
விளக்கம்: கலைப் போதகமாம் ப்ரணவப் பொருளைத் தந்தைக்கு உபதேசம் செய்த பரம குருநாதா,
க்ரவுஞ்ச மலை துளைத்த கருணைமலையே, முதற் கடவுள் என்ற தகைமையை இயல்பாகக் கொண்டவனே, சேவற் கொடி பிடித்து வெற்றி முழக்கும் செவ்வேளே -என்றெல்லாம்
அரிய நற்பாடலைத் தெரியும் உற்றோர் கிளைக்கு
அருணையில் கோபுரத்து உறைவோனே
விளக்கம்: தேன்பாகுத் தமிழில் தேர்ந்தெடுத்த சொற்களால் உன்னைப் பாடிப் பரவசமாகும் அடியார் கூட்டத்திற்கு அருள் புரியவென்றே திருவண்ணாமலை கோபுரத்தில் கோயில் கொண்டிருக்கும் குமரா
அடவியிற் றோகை
பொற் தட முலைக்கு
ஆசையுற்று அயரும் அச் சேவகப் பெருமாளே
விளக்கம்:
எதிரிகளை எளிதில் வீழ்த்தும் பராக்ரமம் கொண்ட நீ, தினைப் புன மயிலாள் வள்ளியின் அங்க லாவண்யத்தால் கவரப்பட்டு அவள் மேல் கொண்ட மைய லால் தளர்ந்தது வியப்பல்லவா!
வெற்றி வேலாயுதா! அன்புக்குத் தோற்கும் அருள் பெருக்கே, சரணம்!
Comments
Post a Comment