கறுத்த தலை - J.R. விளக்கவுரை

By Smt. Janaki Ramanan, Pune

You may read the explanation for the song karuththa thalai by clicking the underlined hyperlink.

வேங்கட மலையில் உறை வேலவா சரணம். திருப்புகழ் பாடல்களுக்கு ஆங்காங்கே புராணங்களைக் கொண்டு வநது சேர்த்துத் பொருட் செறிவும் மெருகும் ஊட்டுகிறார் அருணகிரிநாதர். "கறுத்த தலை" என்ற திருவேங்கடம் பாடலில் கந்தபுராணத்தின் அடிச்சுவட்டில் நடக்கிறார். மத நல்லிணக்கம் என்ற நோக்கமும் இதில் நிறைவேறுகிறது.

மலர்க்கமல வடிவுள செங்கை அயிற் குமர குகை வழி வந்த
மலைச் சிகர வடமலை நின்ற பெருமாளே

அதாவது, சிவந்த தாமரைக் கரத்தில் வேல் தாங்கி ஒரு குகை வழியே வேங்கட மலை வந்து சேர்ந்த பெருமானே என்கிறார். சுவாமிகள் திருப்பதிக்குச் சென்ற காலத்தில் வடவேங்கடத்தில் முருகர் ஆலயத்துடன் திருமால் ஆலயமும் இருந்தது. ஒரு காலத்தில் முருகபிரான் உமையம்மையாருடன் பிணங்கி பாதாள வழியே வந்து ஒரு குகை வழியாகத் திருவேங்கடத்துக்கு வந்த சரிதத்தைத் இந்த அடிகளில் குறித்துள்ளார். இதனை கந்தபுராணம் வழிநடைப் படலத்தில் கச்சியப்ப சிவாச்சாரியார் கூறுகின்றார்.

அண்ட மன்னுயிர் ஈன்றவளுடன் முனிவாகித்
தொண்டகங் கெழு சுவாமிதன் மாலவரை துறந்து
மண்டு பாதலத் தேகியே ஓர்குகை வழியே
பண்டு தான்வரு வேங்கட கிரியையும் பார்த்தான்.

மருகன் முருகன் வலிமையை நாம் புரிந்து கொள்ள மாமன் திருமாலின் மச்சாவதாரத்தையும் ராமாவதாரத்தையும் பற்றிச் சொல்கிறார்

சிறுத்த செலுவதனு ளிருந்து
பெருத்த திரை உததி கரந்து
செறித்த மறை கொணர நிவந்த பெருமாளே

அதாவது, 'மன்னுலகின் ஜீவநாதமான வேதங்களை, சோமுகன் என்ற அசுரன் கடலுக்குள் ஒளித்து வைக்க, சிறிய செதிள்கள் கொண்ட மீனாய் உருவெடுத்து அதை மீட்ட திருமாலின் மருகன் அல்லவா நீ!' என மகிழ்கிறார்.

ஏ செறித்த வளை கடலில் வரம்பு புதுக்கி
இளையவனொடு அறிந்து செயிர்த்த அனுமனையும் உகந்து படையோடி
மறப்புரிசை வளையும் இலங்கை அரக்கன் ஒரு பது முடி சிந்த
வளைத்த சிலை விஜய முகுந்தன் மருகோனே

அதாவது, "பாரதத்தை வளைத்து நிற்கும் தெற்குக் கடலில் அணை கட்டி, இலக்குவனுடனும், ராவணன் தன்மை அறிந்த அனுமனுடனும், மாசேனையுடன் அலைகடல் தாண்டி, இலங்கைக் கோட்டைக்குள் மிதப்பாக இருந்த இராவணனை வெளியே வரவழைத்து, சரமழை போல் கணை தொடுத்து அவன் பத்துத் தலைகளைப் பந்தாடிய ஜெயராமனின் மருகா" எனப் போற்றுகிறார்.

இளமை ஒரு வரம் சாதனைகளின் களம். அருணகிரியார் கேட்கும் வரமோ புனிதம். நோயால், முதுமையால் உடல் தளர்ந்து விழுவதற்கு முன்னால், முருகனின் தொண்டருக்குத் தொண்டு செய்ய விழையும் உயரந்த உள்ளம்.

கறுத்த தலை வெளிறு மிகுந்து
மதர்த்த இரு விழிகள் குழிந்து
கதுப்பிலுள்ள தசைகள் வறண்டு செவி தோலாய்

அவர் வரையும் முதுமையின் சித்திரம் எச்சரிக்கை மணியாய் ஒலிக்கிறது. கறுத்திருந்த முடி வெளிற, மிதப்பில் இருந்த விழிகள் குழி விழ, கொழுவிய கன்னங்கள் நீர் வற்றி வறள, செவிகள் வெறும் தோலாய் தொங்கி விட,

கழுத்தடியும் அடைய வளைந்து
கனத்த நெடு முதுகு குனிந்து
கதுப்புறு பல் அடைய விழுந்து தடுநீர் சோர

அதாவது, வனப்பான கழுத்தின் அடிப்பாகம் தொய்ந்து விட, நிமிர்ந்த முதுகு கூனிக் குறுக, தாடையின் கட்டு விட்டு பற்கள் விழ, கடைவாயில் நீர் ஒழுக,

உறக்கம் வரும் அளவில் எலும்பு
குலுக்கி விடும் இருமல் தொடங்கி
உரத்த கன குரல் நெரிந்து தடிகாலாய்
உரைத்த நடை தளரும் உடம்பு

அதாவது, படுத்தவுடன் உறக்கம் வருவதற்குப் பதிலாக எலும்பைக் குலுக்கும் இருமல் வந்து கலக்க, கணீரென்று ஒலித்த குரல் நெரிந்து சன்னமாய் ஒலிக்க, மதர்த்த நடை மாறி கோல் ஊன்றி நடக்க,

பழுத்திடு முன் மிகவும் விரும்பி
உனக்கு அடிமை பண்ணும் அவர் தொண்டு புரிவேனோ

அதாவது, இப்படி முதுமைக்கு அடிமையாகி, எப்பொழுது வேண்டுமானாலும் உதிர்ந்து விடலாம் என்ற அளவுக்குப் Uழுத்த பழமாகி, எவருக்கும் உதவாமல் வீணாவதற்கு முன்னால், நீ தந்த உடலுக்கு ஒரு அரத்தம் கொடு வேலவா. உனக்குத் அடிமையாய் இருப்பதில் ஆனந்தம் கொள்ளும் அடியார்களுக்கு நான் தொண்டு செய்யும் பேறு தருவாய் - என உன்னதமான வரம் கேட்கிறார்.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே