By Smt. Janaki Ramanan, Pune
வள்ளிமலையின் வாழ்வே சரணம். முருகனின் தண் கழல் பட்டுப் Uட்டுக் குளிர்ந்த , சிறந்த, அழகினை அள்ளிச் சொரிகின்ற வள்ளிமலை. அதைத் தன் தமிழால், பக்தியால் நனைக்கின்றார் அருணகிரி நாதர்.
"சிரம் அங்கம் அங்கை" என்று தொடங்கும் பாடல்.
மரை வெம் கயம் பொருந்திட வண்டினம் குவிந்து இசை ஒன்ற
மந்தி சந்துடனாடும் வரை
அதாவது, நீர் ததும்பும் அழகிய குளங்களில் தாமரை மலர்களின் ஆட்டம். அவற்றில் குவிகின்ற வண்டுகளின் கூட்டம். இனிய இசையாய், தினச எங்கும் பரவி நிற்கும் அவற்றின் ரீங்காரம். சந்தன மரங்களில் தாவித் திரியும் குரங்குகளின் களியாட்டம் - என எழில் விளையாடும் வள்ளிமலை.
வரையின் கண் வந்துவண் குற மங்கை
பங்கயம் வரநின்று கும்பிடும் பெருமாளே
அதாவது, அந்த வள்ளிமலையாம் வனப்பின் எல்லையை, அங்கு துள்ளித் திரிந்த புள்ளி மானாம் வள்ளியைத் தேடி வந்து, அவள் அருகில் வந்ததும், அவளது தாமரைப் பாதங்கள் பணிந்த அன்பின் முழு வடிவமே, முருகா! -_ என நெகிழ்கிறார். ஜீவனைக் கடைத் தேற்றப் பெருகி வரும் கருணையாம் வெள்ளம் அது. மாயத் திரை கிழித்துத் தன்னை உள்ளபடி காட்டும் ஞானத்தின் ப்ரகாசம் அது. அடுத்து, அதே போல் தன் மாயத் திரையையும் கிழித்து, வினைகள் முற்றிலும் அழிக்கும் வரம் கேட்கிறார்.
சிரம் அங்கை கண் செவி வஞ்ச நெஞ்சு
செஞ்சலம் என்பு திண் பொருந்திடு மாயம்
அதாவது, சிரம், அழகிய கரங்கள், விழிகள், செவிகள், முதலிய அங்கங்கள் கச்சிதமாய், வலிமையாய் பொருந்தி இருக்கும் அற்புதக் கட்டுமானம் இந்த உடம்பு. அதில் உயிரோட்டமாய் செங்குருதி. ஆட்டம் போடுகின்ற வஞ்சக நெஞ்சம். ஆனால் நிலையற்ற நீர்க்குமிழி.
சில இன்ப துன்பம் ஒன்றிற வந்து,
பின் செந்தழலின் கண் சிந்திட ஆவி
விரைவின் கண் அந்தகன் பொர வந்ததென்று
வெந்துயர் கொண்டு அலைந்து அலைந்து அழியா முன்
அதாவது, வாழ்க்கை முழுவதும் இன்ப துன்பங்கள் என்ற மேடு பள்ளங்களில் இடறி விழுந்து கொண்டே இருக்கும் உடம்பு. ஆன்ம பலம் பெறுவதற்கு முன் இது செந்தழலில் வெந்து முடியும் அவலம் வேண்டாம் வேலவா! எந்த நேரமும் அந்தகனான தர்மதேவன் விரைந்து வந்து விடலாம் என்ற மரண பயம் என்னை வதைத்துக் கொண்டிருக்க, அமைதி இல்லாமல் நான் அலைந்து குலைந்து முழுவதும் முடிவதற்கு முன் வருவாய், வடிவேலா!
வினை ஒன்றும் இன்றி நன் இயல் ஒன்றி
நின் பதம் வினவென்று அன்பு தந்தருள்வாயே
அதாவது, என் வினைகளை முற்றிலும் அழித்து, என் துர்க்குணங்களை ஒழித்து, நல்ல இயல்புகளை என்னுளே ஏற்றுவாய். உன் திருவடி நிழல் மட்டுமே வேண்டி நிற்கும் அமைதி நிலை தருவாய். உன் அன்புக்காக ஏங்குகிறேன் ஐயா! - என உருகுகிறார். அடுதது, அறுமுகவனின் அதி தீரம் சொல்லி நிறைவு பெறுகிறார்.
அரவின் கண் முன் துயில் அருள் கொண்டல்
அண்டர் கண்டு அஞ்ச வந்திரு சூரன்
அகலம் பிளந்தணைந்து அகிலம் பரந்திரங்கிட
அன்று உடன்று கொன்றிடும் வேலா
அதாவது, அன்று அரவணையில் அறிதுயிலாம் யோக நித்திரையில் ஆழ்ந்து அகிலம் காக்கும் திருமாலும் மற்ற தேவர்களும் நடுங்க போர் தொடுத்து வந்தான் சூரன். அவன் கதி என்னவாயிற்று? அவன் மார்பு பிளந்தாய். அப்பொழுது வேதனையில் அவன் அலறிய அலறலில் அண்டம் கிடு கிடுத்தது. அவனை வென்று கொன்று நல்லோரைக் காத்த வெற்றி வேலாயுதா! சரணம்! - எனப் பரவசம் ஆகிறார்.
Comments
Post a Comment