எழுகு நிறை நாபி — J.R. விளக்கவுரை

By Smt. Janaki Ramanan, Pune

You may read the explanation in English for the song ezhugu nirai naabhi by clicking the underlined hyperlink

வேதாசலமாம் திருக்கழுக் குன்றத்தின் திருமுருகா சரணம். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்கு விளையும் சங்கு தீர்த்தம் உள்ள சிறந்த தலம் திருக்கழுக்குன்றம். வேதபுரீஸ்வரரும், பெண்ணின் நல்லாள் அம்மையும் கோயில் கொண்டிருக்க, வேதங்களும், கழுகுகளும் வழிபாடு செய்யும் தெய்வீகத் தலம். பட்சி தரிசனத்திற்காக இன்றும் மக்கள் கூடும் புனிதத் தலம். "எழுகு நிறை நாபி" என்ற திருக்கழுக்குன்றப் பாடலில், வேண்டுகோள் எதுவுமே வைக்காமல், குறையில்லா நிறைகுடமாய் நின்று முருகனின் துதி பாடுகிறார் அருணகிரிநாத ஸ்வாமிகள். அவன் அருமை பெருமைகள் மட்டுமே சொல்லப்படும் அழகிய பாடல். இது பக்தியின் உச்சம். பரமானந்த வெள்ளம்.

"எழுகு நிறை நாபி அரி

ஏழு உலகங்களையும் வயிற்றில் அடக்கிய திருமாலும்;
கம்பரும் திருமாலை, "ஒரு பகல் உலகெலாம் உதரத்துள் பொதிந்தவன", என்கிறார்

பிரமர் ஜோதி இலகும் அரன் மூவர் முதலானோர்
இறைவி யெனும் ஆதிபரை முலையினில் ஊறியெழு அமிர்த நாறு கனிவாயா

திருமால் பிரமன், ருத்ரன் என்ற முதல் மூவருக்கும், தேவருக்கும் தலைவியான ஆதிபராசக்தியிடம் ஞானப்பால் உண்ட செங்கனி வாயா, செவ்வேளே!

புழு கொழுகு காழி கவுணியரில் ஞான புனிதன் என

புனுகின் மணம் நிறைந்திருக்கும் சீர்காழியாம் புனிதத் தலத்தில், கவுணியர் குலத்தில் ஞான சம்பந்தனாக அவதரித்த சுப்ரமண்யா,

ஏடு தமிழாலே புனலில் எதிர் ஏற
சமணர் கழுவேறப் பொருத கவி வீர

சைவ சமயக் கொள்கையை நிலை நாட்ட, மதுரையம்பதியில் சமணருடன் அனல் வாதம், புனல் வாதம் செய்தவனே! 'வாழ்க அந்தணர் " என்று நீ திருப்பாசுரம் எழுதிய ஏடு, வைகை ஆற்றை எதிர்த்து வந்து கரை ஏறிய அற்புதம் நிகழ்த்தியவனே! சேக்கிழாரும் பெரிய புராணத்தில் "திரு உடைப் பிள்ளையார் திருக்கையால் இட்ட ஏடு பொருபுனல் வைகையாற்றில் நீர் கிழித்துப் போகும் " என்று இதே நிகழ்ச்சியைச் சொல்கிறார். புனல்வாதத்தில் தோற்ற சமணர்கள் தாங்களே சபதம் செய்தபடி கழுவேறினார்கள். இவ்வாறு திருநீற்றாலும், அழகிய தமிழாலும், வாதத்தாலும் எண்ணாயிரம் சமணர்களை எதிர்த்துப் போர் புரிந்து வென்ற கவிமணியே, தமிழ்க்குமரா - எனப் போற்றி மகிழ்கிறார்.

குருநாதா

ஞான விளக்கேற்றும் குருவே!

மழு உழை கபால டம ரக த்ரிசூல மணி
கர விநோதர் அருள் பாலா

இடது கரத்தில் துள்ளித் திரியும் மனித மனத்தின் குறியீடாக மானையும், வலதுகரத்தில் அடியார்கள் பாவத்தை எரிக்கும் மழுவையும், உலகைப் படைக்க நாத ஒலி எழுப்பும் உடுக்கையையும் (தோற்றம் துடியதனில் என்று இது குறிக்கப்படுகிறது. அகிலத்தின் இதயத் துடிப்போ அது! ), இச்சா சக்தி, ஞானசக்தி, கிரியா சக்தி இவற்றின் அடையாளமாக திரி சூலத்தையும், பிரம கபாலத்தையும், மணிகளையும் கரங்களில் ஏந்தி அற்புதக் கோலம் காட்டும் சிவனாரிடம் உதித்த செல்வக்குமரா!

மலர் அயனை நீடு சிறை செய்து அவன் வேலை வளமை பெறவே செய் முருகோனே

ப்ரணவப் பொருள் அறியாத பிரமனை சிறையில் அடைத்து விட்டு, ஒரு திருமுகமும், நாலு திருக்கரங்களும், ஜபமாலையும், கமண்டலமும் தாங்கி படைப்புத் தொழிலை செவ்வனே செய்து முடித்த செவ்வேளே! உன்னால் முடியாத செயலும் உண்டோ? என வியக்கிறார் "ஓர் திருமுகம் கொடு சதுர்முகன் போல் விதி செய்தான்" என்று கந்தபுராணமும் அந்த நிகழ்வைக் குறிக்கிறது.

கழுகு தொழு வேதகிரி சிகரி வீறு கதிர் உலவு வாசல் நிறை வானோர்
கடல் ஒலிய தான மறை தமிழ்களோது கதலி வன மேவு பெருமாளே

இந்தக் கலியுகத்திலும் சம்பு, ஆதி என்ற கழுகுகள் இறைவனை வழிபடும் விந்தை நடக்கும் திருக்கழுக்குன்றத்தின் மலைச் சிகரத்தில் கூடி நிற்கும் தேவர்கள் வேதத்தாலும், தமிழ்ப் பாக்களாலும் துதிக்கும் ஒலி கடலோசை போல் முழங்கும் அற்புதமும் நடக்கிறது. அத்தகைய சிறப்புக்கள் கொண்ட கதலி வனமாம் திருக்கழுக் குன்றத்தில் கோயில் கொண்டிருக்கும் குமரா சரணம் -

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே