தேனுந்து முக்கனி — J.R. எண்ண அலைகள்

By Smt Janaki Ramanan, Pune.

For a full paraphrase and explanation of the song thenunthu mukkanigal, click the underlined hyperlink.

குன்று தோறும் ஆடும் குமரா சரணம். முதலில் ஜோதி மயமாய் சோணாசலத்திலும், பின் அருள் மயமாய் வயலூரிம், அதன் பின் அன்பு மயமாய் விராலிமலையிலும் அருணகிரிநாதரை ஆட்கொண்டான் அந்த சுந்தரக் கந்தன். அவருள்ளே ஞானத்தின் பொறி கனிந்து கொண்டே வந்தது. யோக நிலைகள் புரிபட்டன. யோக சாதனைகள் கை கூடின. தமிழ்த் தாயும் அமுதென அருள் பொழிந்தாள். அவரை ஸ்தலம் ஸ்தலமாய் அழைத்து தேனுந்து முக்கனிகளின் சாற்றினை விஞ்சும் சிவஞானப் பேற்றினை ஊட்டினாள். தூய பக்தி நிலைக்கு மாற்றினாள். வனத்து மங்கையும், வானத்து மங்கையும் தன்னுடன் இணைந்திருக்க, சக்தி நிலைகள் காட்டினாள். பரதத்துவம் புரிந்து விட்டதாலே, அகத்திலும் புறத்திலும் சரவணபவனே நிறைந்து விட்டதாலே மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுக்தி, ஆக்ஞை என்ற அகத்தின் ஆறு ஆதார ஸ்தானங்களையே புறத்தில் அறுபடை வீடுகளாய்க் கண்டு அருணகிரியார் பாடிய திருப்புகழ் என்னும் தேனமுதம் கிடைத்தது. வேதாந்த சாரத்தைப் பிழிந்து, அதில் சந்தமெனும் அதிமதுரச் சுவை சேர்த்து, அருணகிரியார் படைத்த விருந்து தான் குன்றுதோறாடல். குன்றுகளின் ஆதாரமாய் குமரன் நிற்பதால், விசுக்தி என்ற ஆதார ஸ்தானத்தின் வெளிப்பாடு தான் குன்றுதோறாடல் என்ற ஐந்தாம் படைவீடு என்றே மகான்கள் கருதுகிறார்கள்

தேனுந்து முக்கனிகள் பால் செங்கரும்பு இளநீர்
சீரும் பழித்த சிவம் என்று அருளூற

என்று கயிலை மலைப் பாடலில் பரவசமாகிறார் அருணகிரிநாதர். அதாவது, சிவஞானம் அடைநத பின் அந்த சுய இன்ப அனுபவத்தைச் சொல்லிலே வடிக்க முடியுமோ! தேன் உள்ளே நிறைந்து உந்த, மிகக் கனிந்து சுவை பெருக்கும் முக்கனிகள், தீம்பால், செங்கரும்புச் சாறு, இளநீரின் இனிமை என்று நாக்குப் பரிச்சயமான இன்பச் சுவைகளை எல்லாம் சிவஞான இன்பத்துக்கு ஈடாகச் சொல்ல முடியுமோ, முருகா என ப்ரமிக்கிறார் அருணகிரியார். கற்பனைக்கெட்டாத அந்த அறபுத ஞான சுகம் , கந்தனுக்குச் சொந்தமாகி விட்டவர்களுக்கு மட்டுமே கிட்டும் சுய அனுபவம் என்கிறார். "அவ்வாறு அறிவால் அறிகின்றதலால் எவ்வாறு ஒருவருக்கு இசைவிப்பதுவே " என்று அநுபூதியிலும் தெளிவாக்குகிறார். மறுபடியும் கயிலை மலை பாட்டுக்கு வருவோம்

நான் என்பதற்று உயிரொடு ஊன் என்பதற்று வெளி
நாதம் பரப்பிரம ஒளி மீதே

அதாவது, அந்த சிவஞானமாம் மெய் ஞானப் பேரின்ப நிலை அடைவதற்கு, "நான் " "எனது " என்ற அகங்கார மமகாரங்கள் அற்றுப் போக வேண்டும். உயிர் மீது கொண்ட அகப்பற்றும், உடல் மீது கொண்ட புறப்பற்றும் அகல வேண்டும் என்கிறார். இங்கே தாயுமானவர் பாடல் ஒப்பு நோக்கத் தக்கது. " பற்றிய பற்றர உள்ளே தன்னைப் பற்றச் சொன்னான். பற்றிப் பார்த்த இடத்தே பெற்றதை ஏதென்று சொல்வேன்" என்கிறார் தாயுமானவர். ஞானிகளுக்குத் தான் அந்த ஞானபண்டிதன் போல் எத்துணை கருணை! தாம் அடைந்த சிவஞானம் இந்த வையம் பெற அவர்கள் தவிக்கும் தவிப்பென்ன! இசை வழிபாடு அந்த சித்த சுத்திக்காக நாம் எடுத்து வைக்கும் அடி தான் என எடுத்துக் காட்டியவரகள் குருஜி ராகவன் அவர்கள். எண்ணமெல்லாம் நிறையும் வண்ண மயிலோனே சரணம்.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே