நினது திருவடி — J.R. கருத்துரை

By Smt. Janaki Ramanan

For a complete translation/explanation of the song ninathu thiruvadi, please click the underlined hyperlink.

அருணகிரிநாதர் திருவண்ணாமலை கோபுரத்தின் மீது ஏறி தனது உயிரை மாய்த்துக் கொள்ள கீழே விழுந்த பொழுது காப்பாற்றி, 'முத்தைத்தரு' என்று அடி எடுத்துக் கொடுத்த முருகப்பெருமான், அவரை 'வயலூருக்கு வா!' என்று பணித்தார்.

மகிழ்ச்சி அடைந்த அருணகிரியார் இத்தலத்திற்கு வருகை புரிந்தார். அங்கு முருகன் காட்சி தராததால் அசரீரி பொய்யோ? என்று உரக்கக் கூறினார். அவர் முன் முருகபெருமானின் அண்ணன் விநாயகர், பொய்யா கணபதி தோன்றி, சுப்ரமணியசுவாமியை திருக்கல்யாணக் கோலத்தில் காட்சி தரும்படி அருளினார். அருணகிரிநாதருக்காக முருகன் தன் வேல் கொண்டு குத்தி ஒரு தீர்த்தக் குளம் ஏற்படுத்தினார். அதில் தீர்த்தமாடிய அருணகிரி நாதருடைய நாவில் முருகன் வேல் கொண்டு ஓம் என்ற பிரணவ மந்திரம் எழுதிய பின்னர் அவர் கவிபாடும் ஆற்றலும் அறிவும் பெற்றார். இன்ப மயமான இளங்குமரனைப் பாடும் சந்தமயமான "நினது திருவடி" என்னும் திருப்புகழின் ஊற்றுக் கண் திறக்கிறது.

நினது திருவடி சத்தி மயிற் கொடி
நினைவு கருதிடு புத்தி கொடுத்திட

முருகையா! உன் பாத மலர்களை, சுடர் வேலை, வண்ண மயிலை, வாரணக் கொடியை, நினைவில் பதிப்பதற்கு, ஞான கணேசனின் துணை வேண்டித் துதிக்கின்றேன்.

நிறைய அமுது செய் முப்பழம் அப்பமும்
நிகழ் பால் தேன் நெடிய வளை முறி இக்கொடு லட்டு கம்
நிறவில் அரிசி பருப்பு அவல் எள் பொரி
நிகரில் இனி கதலிக் கனி வர்க்கமும் இளநீரும்
மனது மகிழ்வொடு தொட்ட கரத்து

கறந்த பால், சிறந்த தேன், அமுதம் அன்ன அன்னம், முக்கனிகள், பல்சுவை Uட்சண வகைகள், இளநீர், அரிசி, பருப்பு, எள், பொரி என்று ஏழைகள் நைவேத்யமாக அளிக்கும் எளிய பொருட்களையும் மகிழ்வொடு தொட்டு மனமுவந்து ஏற்றுக் கொள்ளும் அருளாளா! ஆனைமுகா!!

மகர சல நிதி வைத்த துதிக் கர
வளரு கரிமுக ஒற்றை மருப்பனை

மகாபாரதம் எழுத ஒரு மருப்பை எழுதுகோலாக்கிய ஏற்றமுடையவா! 'வளர்க,' என எளியோரை வாழ்த்தத்தான், மகர மீன்கள் உலவும் கடலைக் கலக்க வல்ல தன் துதிக்கையை ஓங்காரமாய் வளைந்து உலகாள்கிறதோ!

வலமாக மருவு மலர் புனை தொத்திர சொற்கொடு
வளர் கை குழை பிடி தொப்பண குட்டொடு
வனச பரிபுர பொற்பத அர்ச்சனை மறவேனே

பல வகையிலும் அலைபாயும் மனதை ஒரு நிலைப்படுத்த உன்னை வலம் வந்து, அருள் மணம் வீசும் உன்னைப் பொருள் மணம் வீசும் பாக்களாலும், சுகந்தப் பூக்களாலும் அர்ச்சித்து, அற்ப மானுடராம் நாங்கள் குவித்து வைத்திருக்கும் பாவங்கள் கலைந்து கரைய நெற்றியில் குட்டிக் கொண்டு, கரங்கள் மாற்றிச் செவிகள் பற்றித் தோப்புக்கரணம் போட்டு, மன்னிப்புக்காக உன்னிடம் மன்றாடி, என்னை ஓரளவுக்குத் தகுந்தவன் ஆக்கிக் கொண்டு உன்னை வழிபடும் உள்ளம் தருவாய், ப்ரணவ ஸ்வ௹பா! என்று அருகு சூடியிடம் உருகி வேண்டுகிறார் அருணகிரியார்.

அன்று வீறு கொண்டு எழுந்து போர்க் கோலம் பூண்டு, அசுரர்களைப் பூண்டோடு அழித்து, மத்தளங்கள் உடுக்கைகள் இடியென முழங்க, வெற்றி வாகை சூடிய வேலவனைப் போற்றிப் பாடும் பேறறினைத் தர வேண்டுமென அருணகிரிநாதர் வேண்டிய பொழுது மடை திறந்த தமிழ் வெள்ளமெனப் பொங்கி வந்ததோ திருப்புகழ்! ஜேஷ்ட ராஜனே சரணம். செவ்வேளே சரணம்.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே