கரிமுகக் கடக் களிறு — J.R. விளக்கவுரை

By Smt.Janaki Ramanan, Pune

For an explanation of the song in English, click the underlined hyperlink karimugak kada

அருணையின் கருணை மழையே சரணம். "கரிமுகக் கடக் களிறு" என்று தொடங்கும் திருவருணைப் பாடல்.

முன்னுரை

முருகன் அருட் பார்வை பட்டுவிட்டால் வறண்டு கிடக்கும் நிலம், மக்கள் மனம் எல்லாம் வளம் கொழிக்கும் இடமாக மாறிவிடும் அல்லவா! அவன் நிலையாகக் கோயில் கொண்டிருக்கும் அருணை பற்றிக் கேட்கவா வேண்டும்! 'கரிமுகக் கடக் களிறு' என்ற இன்ப மயமான திருவருணைப் பாடல். அருணையின் வளத்தைப் படம் பிடிக்கும் பைந்தமிழின் சுவை. கஜானனன் புகழ் பாடும் கனிச்சுவை. நான்மாடக் கூடலில், நடன சுந்தரனின் திருவிளையாடல் சொல்லும் சொற்சுவை. வேலனின் வீரமும், கருணையும் வழி வழி வந்தவை என உணர்த்துகிறாரோ அருணகிரிநாதர்! இதோ பாடலை சுவைப்போம்.

துரி பெறச் சரிபொழிற் கன வயற்கு
அழகுளத் துரிய மெய்த் தரள மொய்த்திட

ஏராளமாய்க் கனிகள் பழுத்துக் குலுங்குவதால் மரங்கள் சரிந்து விடுமோ என்று மயங்க வைக்கும் கவினுறு சோலைகள். அவற்றுடன் வனப்பில் வளத்தில் போட்டியிடுபவை போல் மணி மணியாய் தானியங்கள் விளைந்து செழிக்கும் வயல்கள். மணிகள் போதாது போன்று முற்றிய கரும்பிலே முத்துக்கள். (ஞானம் முதிர்ந்தால் முக்தி தான் என்று உணர்த்தும் மன வளம் குறிக்கப் படுகிறதோ?

சுரர் துதித்திட மிகுத்தியல் தழைத்து
அருணையில் சுடர் அயிற் சரவணப் பெருமாளே

இந்த வளமெல்லாம் உன் அருள் மழை தந்ததல்லவா! அந்த வனப்பும், உன் சுடர்வேலின் ஒளியும், தேவர்களையும் கவர்ந்து இழுதது விட, அவர்கள் துதி பாட அருணையில் கோயில் கொண்ட சரவணபவா, ஏழைகள் துதியையும் ஏற்பாய்.

கரிமுகக் கடக்களிற்று அதிக கற்பக மதக்
கஜமுகத்து அவுணனைக் கடி யானை
கடலை எள் பயிறு நற் கதலியின் கனி
பலக்கனி வயிற்றினில் அடக்கிய வேழம்

அன்று கஜமுகாசுரனின் மதத்தையும் அவனையும் வதைத்து, அவனையே தன் வாகனமாக வைத்துக் கொண்ட கருணை மிக்க கற்பக விநாயகராய், மணி மணியாய் விளைந்த கடலை, பயிறு எள், தேன் கதலி தீஞ்சுவைப் பலா என எளியோர் படைப்பதை எல்லாம் விருப்புடன் ஏற்றுக் கொண்டு அவர்கள் விழைவதைக் கொடுக்கும், வேழ முகத்தோனாய், பேழை வயிற்றில் அகிலத்தையே உள் அடக்கியவனாய்,

அரி முகத்தினன் எதிர்த்திடு களத்தினில் மிகுத்து
அமர் புரிக் கணபதிக்கு இளையோனே

தம் மாசடைந்த மனதை மறைத்துக் கொண்டு அழகிய முகத்துடன் எதிர்ப்போரையும் இனம் கண்டு அழிக்கும் கணபதிக்கு இளையவனாய், கருணையும், வீரமும் கலந்து உதித்த கந்தா!

அயிலெடுத்து அசுரர் வெற்பு அலைவுறப் பொருது
வெற்றியை மிகுத்து அறுமுகக் குமரேசா

நீ வீரவேல் எடுத்துக் க்ரவுஞ்சம் தொட்டாய். அது நிலை குலைந்து பொடிப் பொடியாய் போனது. தாரகாசுரன், சிங்கமு காசுரன், சூரபன்மன் என்று பன்முகம் காட்டி வந்த பகை ஒழித்து வெற்றி முழக்கிய அறுமுகா, இளங்குமரா, எங்கள் ஈசா!

நரி மிகுக் கிளைகளைப் பரியெனக் கடி வளர்
கையில் பிடித்து எதிர் நLத்திடும் ஈசன்
நடனம் இப்படி இடத்தினும் இசைத் தரையினில்
கரி உரித்து அணிபவற்கு ஒரு சேயே

அந்த நான்மாடக் கூடலாம் மதுரையில், நடன சுந்தரராம் உன் தந்தை நிகழ்த்திய திருவிளையாடல்களை எப்படி எடுத்துரைப்பேன்! மதுரைக்கு அருகில் திருவாதவூரில் பிறந்து, வாதவூரர் என்ற பெயருடன் வளர்ந்து, சிவ பக்தியில் திளைத்து, அளப்பரிய உலக ஞானமும் பெற்றிருந்த மாணிக்க வாசகரை அரசன் அரிமர்த்தன பாண்டியன் தன் மந்திரியாக்கிக் கொள்கிறான். ஒரு முறை ஜாதிக் குதிரைகள் வாங்குவதற்காகப் பொன்னும் பொருளும் கொடுத்து அவரை அனுப்புகிறான். இறைவன் சித்தம் வேறாக இருந்தது. திருப்பெருந் துறையில், ஒரு குருந்த மாத்தடியில் குருவாகக் காட்சி தந்து, வாதவூராருக்கு நயன தீட்சை கொடுக்கிறான் அரன். மணி மணியாய் திருவாசகப் பாடல்கள் பாடுகிறார். மாணிக்கவாசகா! என அன்புடன் அழைக்கிறான். குதிரைகளை மறந்தார். சிவ சேவைக்குக் கொண்டு வந்த பொருளை எல்லாம செலவிட்டார். சினமுற்ற அரசன் மதுரைக்கு வருமாறு ஆணையிடுகிறான். பக்தன் மகிமையை அரசனுக்கும் அகிலத்துக்கும் உணர்த்த நினைத்த இறைவன், நரிக் கூட்டததை எல்லாம் குதிரைகளாக்கி, ஒரு ஆவணி மூல நன்னாளில், அரசன் முன்னே நடத்திக் காட்டி, மாணிக்க வாசகர் கொண்டு வந்த குதிரைகள் என விற்று விடுகிறான். இரவில் அவற்றை திரும்பவும் நரிகளாக்கி விடுகிறான். இறைவன் நினைத்தால் மாணிக்கவாசகர் போன்ற தூய பக்தனுக்காக எதையும் செய்வான் என்ற உண்மை அரசனுக்கு உறைக்கிறது. அப்படிப்பட்ட திருவிளையாடல்கள் நடத்துபவனின் திருமகனே, முருகா! யானையாய் வந்த பகைவனை அழித்து அவன் தோல் உரித்து ஆடையாய் அணிந்து கொண்ட மகாதேவனின் இணையிலா மைந்தா சரணம், சரணம்.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே